`வெட்டப்பட்ட பலகோடி ரூபாய் மரங்கள்; ஒரு லட்சம் மட்டுமே அபாரதம்?’ - தஞ்சை அதிர்ச்சி

`ஆற்றங்கரையிலிருந்த 109 மருத மரம், வனத்துறையினரின் பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்த 200-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை வெட்டியுள்ளனர்.'
பேராவூரணி அருகே வனத்துறையினரின் உதவியுடன் ஆற்றுக்கரையிலிருந்த பல கோடி மதிப்புடைய மரம் வெட்டி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், அதன் விசாரணைக்காக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனால், விசாரணை வேகமெடுத்திருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆவணம் கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் நம்மிடம் கூறுகையில், ``தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஆவணம் - பெரிய நாயகிபுரம் வழியாகக் கடந்து செல்கிற கிளை ஆறான கல்லணைக் கால்வாய் ஆற்றுக்கரையிலிருந்த பல கோடி ரூபாய் மதிப்புடைய நூற்றுக்கும் மேற்பட்ட பழைமையான மரங்கள் வெட்டப்பட்டன. அங்கிருந்த மருத மரங்கள் மற்றும் 40 வருட பழைமையான தேக்கு மரங்களை வனச்சரகர் இக்பால், வனக்காப்பாளர் கணபதி செல்வம், வனவர் ராமதாஸ் ஆகியோர் உதவியுடன் மர வியாபாரிகளான கணேசன் உள்ளிட்ட 4 பேர் வெட்டி விற்பனை செய்து வந்தனர்.
இதையறிந்த நாங்கள், மரம் வெட்டுவதைத் தடுத்து நிறுத்தியதுடன் மரம் வெட்டுவதற்குப் பயன்படுத்திய ஜே.சி.பி, கிரேன், லாரி உள்ளிட்டவற்றை சிறைபிடித்தோம். பின்னர் வனத்துறையினர், எங்களிடம் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி விட்டு எங்களுக்கே தெரியாமல் சிறைபிடித்த வாகனங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். அத்துடன் கணேசனைத் தவிர இதில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளைக் கைது செய்யாமல் ஆள்மாறாட்டம் செய்து வேறு சில நபர்களைக் கைது செய்தனர்.

இதையும் நாங்கள் வனத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதை தொடர்ந்து ராமதாஸ், கணபதி செல்வம் ஆகிய இருவரை சஸ்பெண்ட் செய்ததுடன், இக்பாலை டிரான்ஸ்ஃபர் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தனர். இதில், தஞ்சை மாவட்ட வனத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பிருப்பதாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.
இந்நிலையில், சென்னையிலிருந்து கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரான ராகேஷ்குமார் என்ற அதிகாரி ஆவணம் பகுதிக்கு வந்து மரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தினார். அவரிடம், `ஆற்றுக்கரையிலிருந்த 109 மருத மரங்கள், வனத்துறையினரின் பாதுகாக்கப்பட்ட பகுதியிலிருந்த 200 தேக்கு மரங்களை வெட்டியுள்ளனர். இவற்றில் லாரிகள் மூலம் 9 லோடு மருத மரங்கள் தூத்துக்குடிக்கு கடத்தப்பட்டன. தேக்கு மரங்கள் எங்கு சென்றது எனத் தெரியவில்லை.

பிரச்னை பெரிதாக வெடித்த பிறகு, நடவடிக்கை எடுக்கிறேன் என்கிற பெயரில் 2 லோடு மரங்களை மட்டுமே மீட்டுக் கொண்டு வந்தனர். அவையும் மரங்களின் நடுப் பகுதியில்லை நுனி கிளைகள்தான் கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டையில் வைத்துள்ளனர்’ எனத் தெரிவித்தோம். பின்னர், மரங்கள் வெட்டப்பட்ட பகுதிக்குச் சென்று அடித் தூர்களைக் கணக்கிட்டதுடன், `மரம் வெட்டுயதில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது. அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறிச் சென்றார்.
அதன்பிறகு, சுஜாதா என்ற மாவட்ட வன அலுவர் தலைமையில் ஒரு குழு, இதன் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுஜாதா மரங்கள் வெட்டப்பட்ட இடத்தில் அடி வேர் பகுதியின் அளவை அளந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். அத்துடன், இதில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் மட்டும் அபராதம் வாங்கிக்கொண்டு வனத்துறையினர், இந்த வழக்கை முடித்துவிட்டதையும் கண்டுபிடித்திருக்கிறார்.

அந்தவகையில், விசாரணை வேகமெடுத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அதேநேரத்தில் மரம் வெட்டப்பட்ட இடங்களில் அதன் அடித்தூரை எடுத்துவிட்டு மரம் வெட்டிய சுவடே இல்லாமல் ஆக்கும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டுள்ளனர். சாதரண மனிதன், அரசுக்குச் சொந்தமான ஒரு மரத்தை உரிய அனுமதியின்றி வெட்டினால் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும். ஆனால், தற்போது பல கோடி ரூபாய் மதிப்புடைய மரங்கள் வெட்டி விற்கப்பட்டுள்ளன. அதற்கு வனத்துறையைச் சேர்ந்த பலர் உதவியிருக்கின்றனர்.
ஒரு சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை செய்து, இதில் தொடர்புடைய ஒருவர்கூட தப்பாத வகையில் நடவடிக்கை எடுத்து தண்டனை பெற்றுத் தர வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே உயிர் மரங்களை வெட்டுவதற்கு எல்லோரும் பயப்படுவார்கள்’’ என்றார்.
விசாரணையின் சிறப்புக் குழுவை சேர்ந்த மாவட்ட வன அலுவலரான சுஜாதாவிடம் பேசினோம். ``விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முடிவில்தான் முழு விபரம் தெரிய வரும்’’ என்பதோடு முடித்துக்கொண்டார்.