Published:Updated:

வயலில் மேய்ந்த மாட்டின் காலை வெட்டிய நபர்! - தஞ்சாவூர் அதிர்ச்சி

வெட்டப்பட்ட மாடு
வெட்டப்பட்ட மாடு

``வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று புகார் அளித்தும் என்ன, ஏதுவென்றுகூட பார்க்க போலீஸ் வரவில்லை என்பது பெரும் வேதனையாக இருக்கிறது’’- ஆனந்த்.

தஞ்சாவூர் அருகே நடவு செய்யப்பட்ட வயலில் மாடு மேய்ந்ததாகக் கூறி, வயலின் உரிமையாளர் மாட்டின் காலை அரிவாளால் வெட்டியதில், கால் பாதி துண்டான நிலையில் நிற்கக்கூட முடியாமல் சாய்ந்து விழுந்து மூன்று நாள்களாக உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது. மாட்டின் உரிமையாளர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க், இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் இரண்டு காளை மாடுகளும், மாட்டு வண்டியும் வைத்து விவசாயத் தொழில் செய்துவருகிறார். இவரது காளை மாடான வண்டி மாடு ஒன்று வீட்டின் அருகிலுள்ள மந்திரி என அழைக்கப்படுபவரின் வயலில் பயிர்களை மேய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

வெட்டப்பட்ட மாடு
வெட்டப்பட்ட மாடு

இதையறிந்த வயலின் உரிமையாளரான மந்திரியின் மைத்துனர் காமராஜ், காளை மாட்டின் காலை அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதில், மாட்டின் கால் எலும்பு முறிந்தது. மேலும், எழுந்து நடக்க முடியாத நிலையில், தரிசாகக் கிடந்த வயலில் அப்படியே சாய்ந்து கிடந்திருக்கிறது.

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் மாட்டின் கால் வெட்டப்பட்டுக் கிடப்பது குறித்து ஆனந்துக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். பின்னர், பதறித் துடித்தபடி ஓடி வந்து வெட்டுப்பட்டுக் கிடந்த மாட்டைப் பார்த்துக் கலங்கிப் போயிருக்கிறார் ஆனந்த். மாட்டை, கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று டாக்டரிடம் காட்டியிருக்கிறார்.

மாட்டைப் பரிசோதித்த டாக்டர், `கால் எலும்பு பலமாக சேதமடைந்துவிட்டது. இனி சரி செய்வது கடினம்’ எனக் கூறியிருக்கிறார். தற்போது மாடு எழுந்து நடக்க முடியாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து ஆனந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர்: `மாடு பாவம்மா…’ பசுவைக் காப்பாற்றச் சென்ற குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்

இது குறித்து ஆனந்திடம் பேசினோம். ``நான் ரெண்டு காளை மாடுகளும், மாட்டு வண்டியும்வைத்து கொண்டு விவசாய வேலை செய்துகொண்டிருக்கிறேன். மாடும், மாட்டு வண்டியும்தான் எனக்கான வாழ்வாதாரமாக இருந்துவருகின்றன.

கடந்த 8-ம் தேதி மதியம் சுமார் ஆறு மாடுகள் வரை வீட்டுக்கு அருகேயுள்ள தரிசு நிலப் பகுதியில் மேய்ந்துகொண்டிருந்தன. என் மாடுகளும் தரிசு வயலில் மேய்ந்தன. வேறு சில மாடுகள் மந்திரி என்பவருக்குச் சொந்தமான அருகேயிருந்த நடவு வயலில் மேய்ந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து மந்திரியின் உறவினரான காமராஜ் அரிவாளை எடுத்துக்கொண்டு வந்து மாடுகளை விரட்டியிருக்கிறார்.

அப்போது தரிசு வயலில் நின்ற என்னுடைய ஒரு மாட்டின் கால் பகுதியில், `கால் இருந்தால்தானே நடப்பாய்... வயலுக்கு வருவாய்’ எனக் கத்திக்கொண்டே வெட்டியிருக்கிறார். இதைப் பார்த்த சிலர் எனக்குத் தகவல் கொடுத்தனர். ஓடிச் சென்று பார்த்தபோது காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், நிற்கக்கூட முடியாமல் சாய்ந்து விழுந்து கிடந்தது. கால்நடை மருத்துவரும் குணப்படுத்த முடியாது எனக் கைவிரித்துவிட்டார்.

ஆனந்த்
ஆனந்த்

மாட்டை வெட்டியவர்களான காமராஜ், மந்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடுக்காவேரி போலீஸில் புகார் கொடுத்தேன். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வீட்டுக்குக் கொஞ்ச தூரத்திலேயே மூன்று நாளாக மாடு சாகக் கிடக்கிறது. மாட்டுக்குக் காவலாக எங்கள் குடும்பமே மாடு கிடக்கும் இடத்தில் இருக்கிறோம். வாயில்லா ஜீவன் படம் அவஸ்தையை எங்களால் தாங்க முடியவில்லை. நான் மூன்று நாள்களாக மாட்டுடனேயே இருக்கிறேன். மாடு வலி தாங்க முடியாமல் கத்திக்கொண்டே இருக்கிறது. இதன் ஜோடி மாடு கண்களில் நீர்கசியச் சுற்றி வருகிறது.

அதைப் பார்த்தால் கல் நெஞ்சம்கூட கரைந்துவிடும். மாடு வெட்டுப்பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. வாயில்லா ஜீவன் வதைக்கப்பட்டிருக்கிறது. துளிக்கூட இரக்கமில்லாமல் காலை வெட்டியிருக்கிறார்கள். வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று புகார் அளித்தும் என்ன, ஏதுவென்றுகூட பார்க்க போலீஸ் வரவில்லை என்பது பெரும் வேதனையாக இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு