Published:Updated:

`காரில் வந்த 4 பேர்; வழக்கு 2 பேர் மீது மட்டுமே?’ - தஞ்சை வடமாநிலப் பெண் வன்கொடுமை விவகார சர்ச்சை

சீல் வைக்கப்பட்ட வீடு
சீல் வைக்கப்பட்ட வீடு

செந்தில்குமார், ராஜம், இரண்டு ஆண்கள் என நான்கு பேர் காரில் வந்து தள்ளிவிட்டதாக அந்தப் பெண்ணே கூறுகிறார். ஆனால், இருவர் மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது. காரில் வந்த மற்ற இருவர் யார் என்று தெரியவில்லை என போலீஸார் தரப்பில் கூறுவதாகத் தெரிவித்தனர்.

தஞ்சாவூரில், வடமாநில இளம் பெண் ஒருவர் என்னை அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், மேலும் 3 பெண்கள் அந்த வீட்டில் இருந்ததாகக் கூறியிருந்த நிலையில், இதில் தொடர்புடைய இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். மேலும், அந்த வீட்டை போலீஸார் சீல் வைத்துள்ளனர். ஆனால், தற்போது அந்த மூன்று பெண்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கவலை தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட இளம் பெண்
பாதிக்கப்பட்ட இளம் பெண்

தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதிக்கு கடந்த திங்கள் கிழமை காரில் வந்த சிலர் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரை கீழே தள்ளிவிட்டுச் சென்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டதுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

`என்னை ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தனர். தமிழ் தெரிந்த 3 பெண்களும் அந்த வீட்டில் இருந்தனர். அவர்களையும் மீட்க வேண்டும்’ என அந்தப் பெண் கூறியதாக மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்ததுடன் எஸ்.பி மகேஷ்வரனிடம் மனுக்கொடுத்தனர்.

சீல் வைக்கப்பட்ட வீடு
சீல் வைக்கப்பட்ட வீடு

இதையடுத்து அந்த இளம் பெண்ணிடம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தினார். அதில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெங்களூருவில் உள்ள முகேஷ் மல்லிகா பார்க் பகுதியில் வசித்து வந்துள்ளார். வீட்டு வேலைக்கு எனக் கூறி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) என்பவர் அழைத்து வந்துள்ளார்.

அத்துடன் அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வீட்டிலேயே வைத்து பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதற்கு அந்த இளம் பெண் உட்பட மறுத்ததால் அவரை செந்தில்குமாரும் அவரின் மனைவி ராஜமும் அடித்துத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

மாதர் சங்கத்தினர்
மாதர் சங்கத்தினர்

ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணுக்கு உடல்நிலை மிக மோசமானதாகவும் எப்படியாவது இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என முயற்சி செய்திருக்கிறார். இதற்காகத் தன் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை எனத் தன் சித்தி மகள் மூலம் கூற வைத்து அதன்படி, தான் செல்ல வேண்டும் என்றிருக்கிறார். அப்போதும் அவரை செந்தில்குமார் விடவில்லை.

பாலியல் வன்கொடுமையால் இளம் பெண்ணின் உடல் மோசமாகியுள்ளது. இதையடுத்து செந்தில்குமார், ராஜம் மேலும் 2 ஆண்கள் என 4 பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு செங்கிப்பட்டி பகுதியில் கீழே தள்ளிவிட்டுச் சென்றதாக அந்தப் பெண் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

தஞ்சை காவல்நிலையம்
தஞ்சை காவல்நிலையம்

இது தொடர்பாகச் செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம் என இருவர் மீதும் பெண்ணை அடித்து துன்புறுத்துதல், விபசார பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இருவரும் தலைமறைவாகிவிடவே, பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்த செந்தில்குமார் இல்லத்தை போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

இதுகுறித்து மாதர் சங்கத்தினர் கூறுகையில், ``அந்த இளம் பெண், `என்னைப் போன்ற பல பெண்களை அந்த வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். தற்போது அந்த வீட்டில் மூன்று பெண்கள் இருந்தனர். உடனே சென்று அவர்களைக் காப்பாற்றுங்கள்’ எனக் கூறினார். ஆனால், செந்தில்குமார் தரப்பினர் வீட்டைப் பூட்டிவிட்டு தப்பித்து சென்றதால் அந்த மூன்று பெண்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.

வன்கொடுமை; காரில் நடுரோட்டில் வீசிச் சென்ற கும்பல்! -தஞ்சை அருகே வடமாநிலப் பெண்ணுக்கு நடந்த கொடுமை

அதற்காகத்தான் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டாமல் சீக்கிரமாக நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தி வந்தோம். பகல் நேரத்தில் காரில் வந்து இறக்கி விட்டுச் சென்றவர்கள், அதன் பிறகு எங்கே சென்றார்கள், அந்த கார் எங்கு சென்றது என சிசிடிவி கேமராவில் காட்சிகள் பதிவாகியிருக்கும். அதையும் அடிப்படையாக வைத்து விசாரித்தாலே, அவர்களை சீக்கிரம் கைது செய்யலாம்’’ என்றனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் இருவரைத் தப்பவைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய செயற்பாட்டாளர்கள், ``செந்தில்குமார், ராஜம் மற்றும் 2 ஆண்கள் என 4 பேர் காரில் வந்து தள்ளிவிட்டதாக அந்தப் பெண்ணே கூறுகிறார். ஆனால், இருவர் மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டுள்ளது.

`வேலைக்கு வந்த வடமாநிலப் பெண்.. பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த குடும்பம்!’ - தஞ்சையில் கொடூரம்

காரில் வந்த மற்ற இருவர் யார் என்று தெரியவில்லை. `அந்தப் பெண் இந்தியில் பேசுவதால் சரியாகப் புரியவில்லை’ என அனைத்து மகளிர் காவல் நிலைய தரப்பில் கூறுகின்றனர். அத்துடன் வழக்கை மாற்றி மாற்றி எழுதுவதாகவும் தெரிகிறது. இதனால் இதில் தொடர்புடைய நபர்களைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் நடப்பதாக சந்தேகம் எழுதுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு