Published:Updated:

`ஊரடங்கு நேரத்திலும் தீராத தேடுதல் வேட்டை!' - லாரியைக் கடத்திய மணல் மாஃபியாவை வளைத்த எஸ்.ஐ

குற்றவாளிகளுடன் தனிப்படை போலீஸார்
குற்றவாளிகளுடன் தனிப்படை போலீஸார்

மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் செல்போன் எண்களை வைத்து கண்காணித்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் சிவகங்கை மாவட்டம் கல்லல் என்ற பகுதியில் பதுங்கி இருக்கிற தகவலை அறிந்தனர்.

பட்டுக்கோட்டையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியைப் பறிமுதல் செய்து அரசு அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த லாரியை மணல் கடத்தல் கும்பல் கடத்திச் சென்றது. இதையடுத்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, கடத்தலில் ஈடுபட்ட 4 பேரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து லாரியை மீட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை அருகே உள்ள அக்னி ஆற்றில் பண்ணைவயல், கோட்டாகுடி உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுவதாகப் புகார் வந்தது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிரகாசம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரியைப் பிடித்தனர். இதில் லாரி டிரைவர் லாரியில் இருந்து குதித்துத் தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து பிடிபட்ட லாரியை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தியிருந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி இரவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை அலுவலகத்தின் கேட்டை உடைத்துக் கடத்திச் சென்றது மணல் கடத்தல் கும்பல். இந்தச் சம்பவம் பட்டுக்கோட்டைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாரி
லாரி

இதையடுத்து, பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் தாசில்தார் அருள்பிரகாசம். இந்த நிலையில் லாரியை கடத்திக் கொண்டு சென்றவர்களைப் பிடிக்க எஸ்.பி மகேஸ்வரன், டி.எஸ்.பி சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் பெரியசாமி மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து எஸ்.ஐ தென்னரசு தலைமையிலான போலீஸார் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்களின் செல்போன் எண்களை வைத்துக் கண்காணித்தனர். இந்தநிலையில், குற்றவாளிகள் சிவகங்கை மாவட்டம் கல்லல் என்ற பகுதியில் பதுங்கியிருக்கும் தகவலை அறிந்தனர்.

லாரி நின்ற அலுவலகம்
லாரி நின்ற அலுவலகம்

உடனடியாக அங்கு சென்ற தென்னரசு தலைமையிலான போலீஸார் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த முத்து சரவணன், சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த பூக்கடை பூமி என்கிற பூமிநாதன், பள்ளிக்கொண்டான் சேது குளத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் அஜித் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்த லாரியைப் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை காவல்நிலையத்துக்கு எடுத்து வந்தனர்.

இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம். ``மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியைப் பறிமுதல் செய்து நிறுத்தியிருந்த நிலையில், கேட்டை உடைத்து எடுத்துச் செல்லக்கூடிய அளவுக்கு அவர்களுக்குத் துணிச்சல் வந்துள்ளது. `லாரியைக் கடத்திச் சென்றவர்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சும்மா விடமாட்டேன் சீக்கிரமே அவர்களைப் பிடித்துக்கொண்டு வருவேன்' என எஸ்.ஐ தென்னரசு, சக போலீஸாரிடம் தெரிவித்தார்.

போலீஸ்
போலீஸ்

ஊரடங்கு தொடரும் இந்த நேரத்திலும் அதற்கான விசாரணையைக் கொஞ்சம்கூட அவர் நிறுத்தவில்லை. இரண்டு மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அவர்களைக் கைது செய்து, லாரியையும் பறிமுதல் செய்துள்ளார். மேலும், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு