Published:Updated:

`2 வருடங்களாகத் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டிவந்த கொள்ளையர்கள்; தஞ்சாவூரில் சிக்கியது எப்படி?!'

நான்கு பேரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினோம். அவர்கள் `தமிழகம் முழுவதும் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்தது நாங்கள்தான்’ என்பதை ஒப்புக்கொண்டார்கள்.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இரண்டு வருடங்களாக ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து, தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவந்த நான்கு இளைஞர்களை தஞ்சாவூர் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து 72 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

திருட்டுக் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை,பணம்
திருட்டுக் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகை,பணம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் ஹக்கீம் என்பவருக்குச் சொந்தமான பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தைச் சமீபத்தில் கொள்ளையடித்துச் சென்றனர். பகல் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து சுமார் 70 பவுன் நகையும், ரூ.3,70,000 ரொக்கமும் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஹக்கீம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து பக்கத்து மாவட்ட போலீஸ் தரப்புக்கு, புதுக்கோட்டை மாவட்ட போலீஸார் தகவல் கொடுத்தனர்.

அதையடுத்து, திருட்டுக் கும்பலைப் பிடிக்கத் தஞ்சாவூர் எஸ்.பி ரவளிப்ரியா , தனிப்படை உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில், தனிப்படை அமைத்து கொள்ளையர்களைப் பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தஞ்சாவூர் பைபாஸ் சாலை அருகே இரண்டு பல்சர் பைக்குகளில் நான்கு இளைஞர்கள் வந்திருக்கின்றனர்.

வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்திய டூல்ஸ்
வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்திய டூல்ஸ்

சந்தேகத்துக்கு இடமான முறையில் வந்தவர்களைப் பிடித்து சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால், போலீஸார் அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், அந்த இளைஞர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தெரியவந்தது. கடந்த இரண்டு வருடங்களாக தமிழக போலீஸாரால் தேடப்பட்டுவந்த குற்றவாளிகளான இந்த இளைஞர்கள் தற்போது தஞ்சாவூர் போலீஸாரிடம் சிக்கியிருக்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``கடந்த இரண்டு வருடங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பூட்டியிருக்கும் ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இது தொடர்பாக அந்தந்த மாவட்டங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

கொள்ளை
கொள்ளை

இந்த நிலையில், கந்தர்வகோட்டையில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்தோம். அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ், திண்டுக்கல்லைச் சேர்ந்த திலீப் திவாகர், சிவகங்கையைச் சேர்ந்த ராஜாராமன், கார்த்திக் ராஜா ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினோம். அதில், அவர்கள் தமிழகம் முழுவதும் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரியவந்தது.

ஆந்திரா டு தஞ்சாவூர்; காரில் 120 கிலோ கஞ்சா! - பிரபல கஞ்சா வியாபாரி உட்பட 9 பேர் கைது

அவர்களிடமிருந்து 72 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம், பூட்டை உடைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பிரேக்கிங் டூல்ஸ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம். இரண்டு பல்சர் பைக்குகளில் ஒரு டூ வீலருக்கு இரண்டு பேர் வீதம் சென்று, ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு அறிந்து வைத்துக்கொள்வர். பின்னர் நான்கு பேரும் இரண்டு பிரேக்கிங் டூல்ஸை மட்டும் எடுத்துக்கொண்டு, ஸ்கெட்ச் போட்டு தாங்கள் டிக் செய்த வீட்டின் முன்பு ஆஜாராகிவிடுவார்கள்.

கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள்
கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகள்

ஒருவர் வண்டியிலேயே அமர்ந்திருப்பார். மற்றொருவர் வீட்டில் சுற்று சுவர் அருகிலேயும், மூன்றாவது நபர் ஜன்னல் ஓரத்திலும் நின்று கொள்வார்கள். ஒருவர் மட்டும் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்வார். ஒரு முறை டூ வீலர் ஹாரனை அடித்தால் வீட்டுக்குள் இருப்பவர் சீக்கிரம் திருடிக்கொண்டு வெளியே வந்துவிட வேண்டும். இரண்டு முறை ஹாரன் அடித்தால் திருட்டில் ஈடுபடும் வீடு அமைந்திருக்கும் தெருவில் ஆள் நடமாட்டம் இருக்கிறது என்பதையும், நீண்ட நேரம் அடித்தால் வீட்டின் உரிமையாளர் வந்துவிட்டார் என்பது போன்ற சிக்கனல்களைப் பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.

இந்தக் கும்பலுக்கு மனோஜ் என்பவர் தலைமை தாங்கியிருக்கிறார். இவர்கள் தமிழகம் முழுவதும் சுமார் 400 பவுன் தங்க நகை திருடியிருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. திருட்டுக் கும்பல் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கைவரிசை காட்டிய மற்ற மாவட்ட தனிப்படை போலீஸ் டீமை சேர்ந்தவர்களும் வந்து விசாரித்துவிட்டுச் சென்றனர். இது தொடர்பாக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு பேரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்" என்றனர்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு