Published:Updated:

`22 சிலைகள்; 48 நாள்கள்; பல கோடி மதிப்பு!' - கோயில் கொள்ளை வழக்கில் அதிரடி காட்டிய தஞ்சை போலீஸார்

மீட்கப்பட்ட சிலைகள்
மீட்கப்பட்ட சிலைகள்

`கோயில் வளாகம் முழுவதும் மிளகாய் பொடியைத் தூவினர். பின்னர் அங்கிருந்த 3 சிசிடிவி கேமராக்களில் இரண்டில் பிறந்தநாள் விழாவில் பயன்படுத்தப்படும் பேம் ஸ்பிரேயர் எனப்படும் நுரை அடித்து லென்ஸை மறைத்தனர்.'

தஞ்சாவூர் கரந்தைப் பகுதியில் 600 ஆண்டு பழைமையான ஜெயின் கோயிலில், கொள்ளைபோன பல கோடி மதிப்புடைய ஐம்பொன் சிலை உட்பட 22 சிலைகளை மீட்டதுடன் இதில் தொடர்புடைய குற்றவாளிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் டீம்
போலீஸ் டீம்

தஞ்சாவூர் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 ஆண்டுகள் பழைமையான ஆதீஸ்வரர் என்கிற ஜெயின் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி பின்புறக் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது. இதில், கோயிலில் இருந்த தலா ஒன்றரையடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன ஆதீஸ்வரர் சிலை, 24வது தீர்த்தங்கரர், சரஸ்வதி, ஜோலமாலினி, சரவண யாக்சன், தலா 1 அடி உயரமுள்ள பஞ்சமேரு சிலை, மகாவீர், தலா அரையடி உயரமுள்ள தார்நேத யாஸ்கன், பத்மாவதி யாஃஷினி, நந்தீஸ்வரர், தலா முக்கால் அடி உயரமுள்ள சாவண யாக்‌ஷி, நவகிரக தீர்த்தங்கள், நவதேவதை உள்ளிட்ட பல கோடி மதிப்புள்ள 22 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இதுகுறித்து கோயிலின் அறங்காவலரான அப்பாண்டேராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஸ்வரன் ஆகியோர் உத்தரவிட்டனர். நகர டி.எஸ்.பி ரவிசந்திரன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் தஞ்சை நகர தனிப்படை இன்ஸ்பெக்டர் சுகுமாறன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக விசாரணை செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

கோயில்
கோயில்

இந்தநிலையில் இதில் தொடர்புடைய சுங்காந்திடல் ராஜேஷ், ரவி, கரந்தை சண்முகராஜன், நாகப்பட்டினம் மாவட்டம் கீவலூரைச் சேர்ந்த விஜயகோபால் ஆகிய நான்கு பேரை கைது செய்ததுடன் கொள்ளையடிக்கப்பட்ட 22 சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``600 ஆண்டு பழைமையான இந்தக் கோயிலில் மதிப்புமிக்க பல சிலைகள் இருப்பதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், குருக்கள் ஊரில் இல்லாத நேரம் பார்த்து பின்பக்கம் உள்ள கதவை உடைத்து கோயிலுக்குள் புகுந்தனர். தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது எனக் கோயில் வளாகம் முழுவதும் மிளகாய்ப் பொடியைத் தூவினர். அத்துடன் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த மூன்று சிசிடிவி கேமராக்களில் இரண்டில் பிறந்தநாள் விழாவுக்கு பயன்படுத்தப்படும் பேம் ஸ்பிரேயர் எனப்படும் நுரை அடித்து லென்ஸை மறைத்து, அதன் பிறகு சிலைகளைத் திருடிச் சென்றனர்.

மறைக்கப்பட்ட சிசிடிவி கேமரா
மறைக்கப்பட்ட சிசிடிவி கேமரா

அங்கிருந்த மற்றொரு கேமராவை அவர்கள் கவனிக்கவில்லை. அதில் பதிவான காட்சிகளைக் கொண்டு சிலைகளைத் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினோம். இந்தக் கொள்ளைக்கு டாட்டா விங்கர் வாகனம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், நான்கு பேர் கைது செய்யப்பட்டதுடன் திருடிய சிலைகளை விற்பனை செய்வதற்காக ராஜேஷ் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

`உலகமே கொண்டாடும் விழா; ஆனா, உள்ளூர் அமைச்சர்கள் மிஸ்ஸிங்!' - பெரிய கோயில் சென்டிமென்ட் காரணமா?

வழக்கு பதியப்பட்ட 48 நாளில் கொள்ளைக் கும்பலுடன் சேர்த்து 22 சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என விசாரிக்கப்பட்டு வருகிறது முழுமையான விசாரணை முடிந்த பிறகே, வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்படும். அதுவரை கொள்ளையர்களின் முகம் வெளியே தெரியக் கூடாது என முகமூடி அணிந்தே பத்திரிகையாளர்களுக்கு குற்றவாளிகளைக் காண்பித்தோம். இதற்காகத் தனிப்படை டீமுக்கு டி.ஐ.ஜி லோகநாதன், எஸ்.பி மகேஸ்வரன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு