Published:Updated:

`வேலைக்கு வந்த வடமாநிலப் பெண்.. பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த குடும்பம்!’ - தஞ்சையில் கொடூரம்

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

``ஒரு கட்டத்தில் அந்தப் பெண் உடல் நிலை மிக மோசமானது. அத்துடன் அந்த இளம் பெண்ணின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என, அவருடைய சித்தி மகள் மூலமாக தகவல் வந்துள்ளது.”

தஞ்சாவூரில் வட மாநில இளம் பெண் ஒருவரை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்ததுடன் பாலியல் தொழிலிலும் ஈடுப்படுத்தியுள்ளதாக புகார் வந்ததையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதில் தொடர்புடைய 4 பேரைத் தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதிக்கு நேற்று காரில் வந்த சிலர் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரைக் கீழே தள்ளி விட்டுச் சென்றனர். உடல் முழுக்கக் காயத்துடன் கண்கள் வீங்கிய நிலையில் கடைவீதியில் மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அத்துடன் தமிழ் பேசத் பெரியாத இந்தி மட்டுமே பேசிய அந்தப் பெண்ணிடம் இந்தி தெரிந்த ஒரு நபரைக்கொண்டு பேச வைத்தனர். இதில் `என்னை ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அத்துடன் தமிழ் தெரிந்த 3 பெண்களும் அந்த வீட்டில் உள்ளனர்’ என அந்தப்பெண் கூறியதாக தெரிவித்த மாதர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், இது தொடர்பாக போலீஸில் புகாரும் அளித்தனர். இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று எஸ்.பி மகேஷ்வரனிடம் புகார் அளித்தனர்.

பாலியல் வன்கொடுமை; நீதி கிடைக்காத விரக்தி! - விபரீத முடிவெடுத்த உ.பி இளம்பெண்

இந்த நிலையில் சிகிச்சையில் இருக்கும் அந்த இளம் பெண்ணிடம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரணை நடத்தினார். அதில் இளம் பெண் கூறியது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பெண் பெங்களூருவில் உள்ள முகேஷ் மல்லிகா பார்க் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் தனது சித்தி மகள் மூலமாக வீட்டு வேலைக்காக, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தஞ்சைக்கு வந்திருக்கிறார். பஸ் மூலம் திருச்சி வந்த, அந்தப் பெண்ணை தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 44) என்பவர் கார் மூலம் அவருடைய வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். மேலும், அப்பெண்ணைக் கட்டாயப்படுத்திப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அவரது மனைவி எனச் சொல்லப்படுகிற ராஜம் என்பவரும் அந்தப் பெண்ணை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, `வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து என்னை இப்படி ஏமாற்றிவிட்டீர்களே?' என அந்தப் பெண் கேட்டதாகத் தெரிகிறது. ஆனாலும் அந்தப் பெண்ணை வீட்டிலேயே அடைத்த வைத்து செந்தில்குமார், பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தி வந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்
பாதிக்கப்பட்ட பெண்

ஒரு நாளைக்கு 5 ஆண்கள் வரை வீட்டுக்கு வருவார்கள் என்றும் அவர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து கொடுமைப்படுத்தினர் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதற்கு உடன்பட மறுத்த அந்தப் பெண்ணை செந்தில்குமாரும், ராஜமும் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் உடல் நிலை மிக மோசமானது. அத்துடன் அந்த இளம் பெண்ணின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என, அவருடைய சித்தி மகள் மூலமாக தகவல் வந்துள்ளது. இதையடுத்து, அப்பெண் ஊருக்குப் போக வேண்டும் என அழுததுடன் அங்கிருந்து தப்பித்துச் செல்லவும் முயன்றுள்ளார். செந்தில்குமார், ராஜம், மேலும் இரண்டு ஆண்கள் என நான்கு பேர் சேர்ந்து காரில் ஏற்றிக்கொண்டு, வந்ததுடன் தஞ்சை திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி பகுதியில் கீழே தள்ளி விட்டுச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம் மற்றும் இரண்டு ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுடன் தலைமறைவாக உள்ள அவர்களைத் தேடி வருகிறோம்’’ என்றனர்.

இது குறித்து மாதர் சங்கத்தினர் கூறுகையில், சொல்ல முடியாத கொடுமைகளை அந்த இளம் பெண்ணுக்கு செந்தில்குமார் தரப்பினர் செய்துள்ளனர். அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டதில் அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் தொடர்புடைய ஒருவரைக்கூட தப்ப விடக் கூடாது எனப் புகார் கொடுத்துள்ளோம். நிச்சயம் நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்வதாக போலீஸ் தரப்பில் கூறியதாகத் தெரிவித்தனர்.

`போதையில் தகராறு; பாலியல் வழக்கு..' - நடிகையின் மகனுக்கு சென்னையில் நேர்ந்த சோகம்
அடுத்த கட்டுரைக்கு