Published:Updated:

`சஸ்பெண்ட் எஸ்.ஐ; குண்டர் சட்டம்!’- வடமாநிலப் பெண் விவகாரத்தில் ரகசியம் காக்கும் தஞ்சை போலீஸ்

கைது செய்யப்பட்டுள்ள ராஜம்
கைது செய்யப்பட்டுள்ள ராஜம் ( ம.அரவிந்த் )

பொள்ளாச்சி பாலியல் வழக்கு, நாகர்கோவில் காசி வழக்கு போன்றே தஞ்சையின் இந்தப் பாலியல் வழக்கும் இருக்கும் என விசாரணையில் ஈடுபட்டு வரும் போலீஸார் கருதுகின்றனர்.

தஞ்சாவூரில் வடமாநில இளம் பெண் ஒருவர் அடித்துத் துன்புறுத்திப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். அத்துடன் நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான முயற்சிகளை போலீஸார் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தில்குமார்
செந்தில்குமார்

தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி பகுதிக்குக் கடந்த திங்கள்கிழமை காரில் வந்த சிலர் 20 வயது மதிக்கத்தக்க வடமாநில இளம்பெண் ஒருவரைக் கீழே தள்ளிவிட்டுச் சென்றனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அந்தப் பெண்ணை மீட்டதுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

`வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து ஒரு வீட்டில் அடைத்து வைத்து அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபட வைத்தனர்’ என அந்தப் பெண் புகார் கூறியிருந்தார். அந்தப் பெண்ணுடன் மேலும் 3 இளம் பெண்கள் இருந்ததாகக் கூறப்பட்டதுடன், அவர்களின் நிலை என்னவென்றும் தெரியவில்லை என மாதர் சங்கத்தினர் கூறி வந்தனர்.

சீல் வைக்கப்பட்ட வீடு
சீல் வைக்கப்பட்ட வீடு

இதற்கிடையில் இதில் தொடர்புடையதாகச் சொல்லப்பட்ட தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் அவரது இரண்டாவது மனைவி ராஜம் உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவாகிவிட்டனர். இந்தநிலையில் அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்வதுடன் மற்ற மூன்று பெண்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது.

இது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் தீவிரமான தேடுதல் வேட்டைக்குப் பிறகு மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள நடராஜபுரம் காலனியில் பதுங்கியிருந்த செந்தில்குமார் (49) அவரது மனைவி ராஜம் (47) வல்லம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து லஞ்சம் வாங்கிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிராபாகரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட வட மாநில இளம் பெண்
பாதிக்கப்பட்ட வட மாநில இளம் பெண்

வழக்கின் நிலை என்ன என்பது குறித்து விசாரித்தோம். ``வரலாற்றுப் பெருமை கொண்ட தஞ்சாவூரில் நடந்துள்ள இந்தப் பாலியல் தொழில் தொடர்பான விவகாரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை நேற்று இரவு கைது செய்த பிறகு தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல்நிலையத்தில் 4 பேரையும் தங்கவைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு வேறு ரகசிய இடத்திற்கு அவர்களை மாற்றியதுடன் விசாரணையையும் ரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்கள் விவரம் அறிய வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்றால் கூட, `அப்படியா அவர்களை கைது செய்து விட்டார்களா? நீங்க சொல்லித்தான் எங்களுக்கே தெரியுது’ என்கிற ரேஞ்சில் கேட்டு எந்தத் தகவலும் வெளியே கசியாதபடி பார்த்துக்கொண்டனர். அந்தளவிற்கு ரகசியம் காக்கப்படுகிறது என்றால், இதில் மேலும் பலருக்குத் தொடர்பிருக்க வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரும் இதில் சிக்கியிருப்பதால் காவல்துறையைச் சேர்ந்த வேறு யாருக்கும் இதில் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரணை செய்து வருகின்றனர்.

சீல் வைக்கபட்ட வீடு
சீல் வைக்கபட்ட வீடு

சொல்லப்போனால் பொள்ளாச்சி பாலியல் வழக்கு, நாகர்கோவில் காசி வழக்கு போன்றே தஞ்சையின் இந்தப் பாலியல் வழக்கும் இருக்கும் என விசாரணையில் ஈடுபட்டு வரும் போலீஸார் கருதுகின்றனர். அத்துடன் கைது செய்யப்பட்ட பெண் உட்பட 4 பேரையுமே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான முயற்சியையும் போலீஸார் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு