Published:Updated:

`விடிய விடிய மது... திடீர் வாய்த் தகராறு!' -அதிகாலையில் தஞ்சை ரௌடிக்கு நண்பர்களால் நேர்ந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட அருண்குமார்
கொலை செய்யப்பட்ட அருண்குமார்

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது, எங்கள் பகுதியில் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால், மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளே கொடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கொலை உட்பட 34 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே கொலைச் சம்பவம் நடந்திருப்பது, அப்பகுதியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

தஞ்சாவூர் அருகே உள்ள கீழவாசல் பூமால் ராவுத்தர் தெருவைச் சேர்ந்தவர், கனி என்கிற அருண்குமார் (வயது 34). இளைஞரான இவருக்கு இரண்டு மனைவிகள், மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்மீது காவல் நிலையங்களில் கொலை உட்பட 34 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, அருண்குமார் மற்றும் அதே பகுதியில் உள்ள அவரின் நண்பர் கதிர் என்பவரும் அவர் வீட்டில் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். இவர்களுடன் கதிரின் சகோதரர் பிச்சாண்டி மற்றும் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் மது அருந்தியுள்ளனர்.

கொலை நடந்த வீடு
கொலை நடந்த வீடு

சுமார் 43 நாள்களுக்குப் பிறகு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், தேவைக்கும் அதிகமாக மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு இரவு முழுவதும் அருந்திக்கொண்டே இருந்துள்ளனர். இதில், கதிருக்கும் அருண்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த கதிர், அவரின் சகோதரர் பிச்சாண்டி மற்றும் முத்து ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அருண்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

`இழுத்து மூடு’ போராட்டம்... போதையில் உயிரிழந்த நபர்...- டாஸ்மாக் களேபரங்கள் #LiveUpdates

இதில், அருண்குமார் இறந்துவிட்டார். இதையறிந்த மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதிகாலையில் பெரும் அலறல் சத்தத்துடன் நடந்த இந்தச் சம்பவத்தை அறிந்து வந்து, சம்பவ இடத்தில் அருண்குமாரின் உறவினர்கள் கதறி அழுதனர். அருண்குமாரின் பிள்ளைகளோ, `குடிக்கப் போக வேண்டாம்னு சொன்னோமே.... இத்தனை நாளா குடிக்காமத்தானே இருந்தே, அப்படியே இருந்திருந்தா நீ உயிரோட இருந்திருப்பியே...' எனக் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

கதறி அழும் உறவினர்கள்
கதறி அழும் உறவினர்கள்

இதையறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம். ``நான்கு பேர் இரவு முழுவதும் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. நீண்டநேரம் சண்டை நடந்ததால் அப்பகுதியில் ஒரே சத்தமாக இருந்துள்ளது. அருண்குமாரை வெட்டும்போது அவரின் அலறல் சத்தம் பலமாகக் கேட்டது என அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

கதிர், அவரது சகோதரர் பிச்சாண்டி மற்றும் முத்து ஆகிய மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். அருண்குமார் மீது கொலை வழக்கு உள்பட 34 வழக்குகள் உள்ளன. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து விசாரணை செய்துவருகிறோம்" என்கின்றனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

அப்பகுதியைச் சேர்ந்தவர்களோ, `` டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது எங்கள் பகுதியில் எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் அமைதியாக இருந்தது. ஆனால், சுமார் 40 நாள்களுக்குப் பிறகு நேற்றுதான் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முதல்நாளே ஒரு கொடிய சம்பவம் நடந்து, எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது" என்கின்றனர் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு