Published:Updated:

`கொரோனா பீதி; மூன்று செகண்டில் பறிபோன ரூ. 10,000!’-தஞ்சையில் வெளிநாட்டுத் தம்பதியின் நூதன மோசடி?

மோசடியில் ஈடுபட்டவர்
மோசடியில் ஈடுபட்டவர்

இந்திய பணத்தைக் காண்பித்து அதன் மதிப்பு குறித்து கேட்டார் என்னடா இவர் கொரோனா நேரத்தில் கடையில் வந்து பேசிக்கொண்டிருக்கிறாரே என எனக்கு ஒரு வித அச்சம், அதனால் அவசர அவசரமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினேன்.

தஞ்சாவூரில் இரண்டு சக்கர வாகன உதிரிபாகக் கடை உரிமையாளர் ஒருவரிடம் வெளிநாட்டு சுற்றுலாத் தம்பதி ஒருவர் நுாதன முறையில் ரூ 10,000 திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடி நடந்த கடை
மோசடி நடந்த கடை

தஞ்சாவூர் கொடிமரத்துமூலை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் அதே பகுதியில் ஸ்பேர் பார்ட்ஸ் எனச் சொல்லப்படுகிற இரண்டு சக்கர வாகன உதிரி பாகக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருடைய கடைக்கு ஒரு வெளிநாட்டு தம்பதியர் வந்துள்ளனர். அவர்களில் வெளிநாட்டு பெண் நபர் கடைக்கு எதிரே நின்றுகொள்ள ஆண் நபர் மட்டும் கடைக்குச் சென்றுள்ளார்.

கடையில் இருந்த பார்த்தசாரதியிடம், அந்த வெளி நாட்டு நபர் `நாங்கள் இந்தியாவுக்குப் புதியவர்கள், இந்திய நாட்டின் ரூபாய் மதிப்புகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. எனவே, அது குறித்து எந்தப் பணம் எவ்வளவு தொகை என விளக்க வேண்டும் எனத் தன்னிடம் இருந்த சில ரூபாய் நோட்டுகளைக் காட்டினார். ஆனால், பார்த்தசாரதி கொரோனா பயத்தால் பணத்தைக் கையில் வாங்க அச்சமாக இருந்ததால் கையில் வாங்காமலேயே விளக்கியுள்ளார்.

பார்த்தசாரதி
பார்த்தசாரதி

பின்னர், அந்த நபரிடம் பார்த்தசாரதி நீங்க எந்த நாடு எனக் கேட்க, அது குறித்து எதுவும் சொல்லாமல் மழுப்பியபடி பணம் குறித்து மட்டுமே விளக்கம் கேட்டுள்ளார். அப்போது பார்த்தசாரதியிடம் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு எப்படி இருக்கும் எனக் கேட்க பார்த்தசாரதி தன்னிடம் வியாபாரத்துக்கு இருந்த இரண்டாயிரம் நோட்டு பணக் கட்டை எடுத்துக் காண்பித்து விளக்கியுள்ளார்.

அப்போது வெளியே நின்றுகொண்டிருந்த பெண் பார்த்தசாரதியின் கவனத்தை திசை திருப்பும் வகையில் செய்கை செய்துகொண்டிருந்ததாகத் தெரிகிறது. அதை வாங்கிப் பார்த்த அந்த வெளிநாட்டு நபர், தன்னுடைய பர்சை ரூபாய் நோட்டுக்கு மேல் வைத்து அப்படியே தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்து நூதனமாகச் செயல்பட்டு அதிலிருந்த ரூ.10,000-த்தை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

மோசடியில் ஈடுபட்டவர்
மோசடியில் ஈடுபட்டவர்

அதன் பிறகு, பார்த்தசாரதி கணக்கு முடிக்க பணத்தை எண்ணும்போது ரூ. 10,000 குறைந்துள்ளது. இதையடுத்து அந்த வெளி நாட்டினர் மீது சந்தேகம் கொண்ட அவர் உடனே கடையில் உள்ள சிசிடிவி கேமாரவைப் பார்த்ததில் அவர்கள் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பார்த்தசாரதி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த வெளிநாட்டு நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து பார்த்தசாரதி கூறியதாவது, ``இந்திய பணத்தைக் காண்பித்து அதன் மதிப்பு குறித்து கேட்டார்.. என்னடா இவர் கொரோனா நேரத்தில் கடையில் வந்து பேசிக் கொண்டிருக்கிறாரே என எனக்கு ஒரு வித அச்சம், அதனால் அவசர அவசரமாக அவருக்குப் பதில் சொல்லி அனுப்பினேன். மொத்தமே மூன்று செகண்டுதான் இருக்கும் அதற்குள் கவனத்தைத் திசை திருப்பி பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார்" எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு