Published:Updated:

நீட் தேர்வு: தேர்ச்சி பெற்றும் சீட் கிடைக்கவில்லை; மன விரக்தியில் விபரீத முடிவெடுத்த மாணவி!

மாணவி தற்கொலை!
News
மாணவி தற்கொலை!

306 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், அரசு நிர்ணயித்துள்ள கட்-ஆஃப் போதுமானதாக இல்லை என்பதால் அவருக்கு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் இடம் கிடைக்கவில்லை.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த ஊமத்தநாடு கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசிப்பவர் வெள்ளைச்சாமி (46). விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி நாகூர் மாலா (40). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகளுக்கு வயது (18). சிறு வயதிலிருந்தே மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்பதையே கனவாகக் கொண்ட அவர், அதற்கேற்றார் போலப் படிப்பிலும் சுட்டியாக இருந்திருக்கிறார். பத்தாம் வகுப்பில் 455 மதிப்பெண்கள் எடுத்தார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகப் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்திருக்கிறார். தங்கள் மகள் மருத்துவராக வேண்டும் என்பதற்காகத் தாய் - தந்தை இருவரும் கிடைத்த வேலைகளைச் செய்து அவரை படிக்கவைத்ததற்காக அக்கம்பக்கத்தினர் சொல்கிறார்கள். குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு படித்தவர், பன்னிரெண்டாம் வகுப்பில் 421 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நீட் பயிற்சி எடுத்து நீட் நுழைவுத்தேர்வையும் அந்த மாணவி எழுதியிருக்கிறார். ஆனால், போதுமான மதிப்பெண்கள் பெறவில்லை. அதனால் தன் பெற்றோரிடம் அடுத்த வருடம் மீண்டும் முயற்சி செய்து, நிச்சயம் வெற்றிபெற்று மருத்துவராகுவேன். என்னை மீண்டும் படிக்க வையுங்கள் என்று கூறியிருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து, 2021-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெறுவதற்காகத் திருச்சி அருகே துறையூரில் உள்ள கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்தார். பெரும் நம்பிக்கையுடன் மீண்டும் நீட் தேர்வை எழுதியிருக்கிறார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவு வெளியானது. அதில் அவர் 306 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனாலும், அரசு நிர்ணயித்துள்ள கட்-ஆஃப் போதுமானதாக இல்லை என்பதால் அவருக்கு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் இடம் கிடைக்கவில்லை.

நீட் தேர்வு
நீட் தேர்வு

அதைத் தொடர்ந்து, தன் இரண்டு வருடப் போராட்டத்துக்குப் பின்னர் மருத்துவராகும் கனவைக் கைவிடுகிறார். இனி டாக்டர் படிப்பு வேண்டாம், வேறு ஏதாவது படிக்கலாம் என முடிவெடுக்கிறார். அதன்படி ராம்நாட்டில் உள்ள அரசு இன்ஜீனியரிங் கல்லூரியில் கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அந்த மாணவியின் ஒரிஜினல் மாற்றுச் சான்றிதழ் அவர் முன்னதாக நீட் தேர்வுக்குப் படித்த கோச்சிங் சென்டர் நிர்வாகத்திடம் இருந்ததால் அவரால் அதிலும் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. மருத்துவருக்குத்தான் படிக்க முடியவில்லை, வேறு ஏதாவது படிக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லையே என அந்த மாணவி மன விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறாய்வு முடிந்த பின்னர், மாணவியின் உடல் அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவி தூக்குப் போட்டு தற்கொலை!
மாணவி தூக்குப் போட்டு தற்கொலை!

மாணவியின் மரணம் குறித்து அவர் தந்தை கூறுகையில், ``என் மகள் நீட் தேர்வுல 306 மார்க் எடுத்து பாஸ் செய்து விட்டாள். ஆனால் அரசு நிர்ணயித்துள்ள கட்-ஆஃப் இல்லாததால் இடம் கிடைக்கவில்லை. எல்லோரும் தனியார் கல்லூரியில் இடம் கிடைக்கும் முயற்சி செய்யுங்கனு சொன்னாங்க. ஆனா, அதுக்கு பணம் நெறைய செலவாகும் ஏற்கெனவே நான் சிறுநீரக பிரச்னையால் சிகிச்சை எடுத்து வர்றேன். அதனால, பொருளாதார ரீதியாக பல சிக்கல் இருக்கு.

மகள் படிப்புக்காக கடன் வாங்கியிருக்கிறேன். தனியார் மருத்துவ கல்லூரியில சேர்த்து படிக்க வைக்கிற அளவிற்கு எங்கிட்ட சக்தியில்ல, அதற்கான வழியுமில்லனு சொன்னேன். வீட்டோட நிலையையும், எங்களையும் உணர்ந்த என்னோட மகள் `அப்பா நான் டாக்டருக்கு படிக்கல... நம்மால அது முடியாது, வேற படிப்பு படிக்குறே'னு சொன்னாள். சின்ன வயசுலயிருந்தே டாக்டர் ஆவனும்னு ஆசைப்பட்டியேம்மானு கேட்டதுக்கு, `மனச கல்லாக்கிகிட்டேன் வேறு எதாவது படிக்குறே'னு சொன்னதுடன் இன்ஜீனியரிங் படிக்க விண்ணப்பம் போட்டாள்.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை

அதற்கான கவுன்சிலிங் வந்தது. இந்த நிலையில், என் மகள் படித்த கோச்சிங் சென்டர் நிர்வாகத்திடம் இருந்த ஒரிஜினல் சான்றிதழ்களை கேட்டோம். பாக்கி இருக்கும் ரூ 76,000 கொடுத்தால் தான் தருவோம் என கூறி விட்டனர். ரெகுலர் கிளாஸ் அடிப்படையில் தான் என் மகளை சேர்த்து விட்டேன். ஆனால் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரெண்டு மாசத்தை தவிர மற்ற மாதங்கள்ல ஆன்லைன் கிளாஸ் தான் நடத்தினாங்க. அதுவும் முறையாக நடைபெறவில்லை.

ஆனால் பணம் மட்டும் முழுசா கேக்குறீங்களே, ஏற்கெனவே என் சக்திக்கு மீறி செலவு செஞ்சுட்டேனு கலங்கினேன். சான்றிதழ் கொடுங்க என் மகள் படிக்கணும்'னு காலில் விழாத குறையாக கெஞ்சினேன். ஆனாலும் அவங்க மனம் இறங்கல. நீங்க யார்கிட்ட வேணாலும் போய் சொல்லுங்க பணம் கொடுத்தாதான் தருவோம்'னு சொல்லிட்டாங்க.

அதன் பிறகு ஊருக்கு வந்து பணத்தை ரெடி செய்ததுடன் பேசி சரி செய்து ரூ 40,000 கொடுத்து சான்றிதழ் வாங்கினேன்.அதற்குள் இன்ஜீனியரிங் கவுன்சிலங் முடிந்து விட்டதால் அதிலும் சேர முடியவில்லை. இதற்கிடையில் மற்ற கல்லூரிகளிலும் சேர்க்கை முடிந்து விட்டது. டாக்டருக்கு படிக்க முடியலை, வேறு படிப்பு படிக்குறேனு சொன்ன என் மகளோட ஆசையை என்னால நிறைவேற்ற முடியல. மனமுடைந்து போன என்னோட பிள்ளை, தற்கொலை செஞ்சுக்கிட்டா.

 மாணவி  தற்கொலை
மாணவி தற்கொலை
சித்தரிப்புப் படம்

கோச்சிங் படிக்கும் போதே என் மகளை எங்க மக்கள் டாக்டருக்கு படிக்குறானு சொல்லுவாங்க. அவ மேல எல்லோரும் பெரிய நம்பிக்கை வச்சிருந்தாங்க. ஆனா எல்லாம் கனவா போயிடுச்சு. நிச்சயம் பணம் இருக்குற குடும்பத்துல பொறந்திருந்தா என் மகளோட கனவு நிறைவேறியிருக்கும். அவ டாக்டராகியிருப்பா, ஏழை குடும்பத்துல பொறந்ததால அவளால முடியல. எங்க எல்லாரையும் தவிக்க விட்டுட்டு படிக்க முடியலையே என்கிற விரக்தியில் மறைந்து விட்டாள்" எனக் கதறினார்.

மாணவியின் மரணம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.