Published:Updated:

`கொலையும் தாமதமின்றி நடக்கலாம்!' - தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்குக் கடிதம் மூலம் மிரட்டல்

``மர்ம நபர் ஒருவர் எனக்கு`கொலையும் தாமதமின்றி நடக்கலாம்..' என மொட்டைக் கடுதாசி அனுப்பியிருக்கிறார். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை மற்றவர்களும் பெரிதுபடுத்த வேண்டாம்'' என கோ.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம் ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு `கொலையும் தாமதமின்றி நடக்கலாம்' எனக் கொலை மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், கடிதம் அனுப்பிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம்

தமிழ்ப்பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்பில் இருப்பவர் கோ.பாலசுப்பிரமணியன். இவர் பொறுப்பேற்று ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழகத்திற்குக் கடிதம் ஒன்று வந்தது. அதில், `துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தன்னை நல்லவர்போல் காட்டிக்கொண்டு நாகரிகம் இல்லாமல், கேவலமாகச் செயல்படுவதாகவும், அவருடைய செயல்பாடுகள் பல்கலைக்கழகப் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனவும் இருந்தது. மேலும் அதில்,

தான் ஒரு துணைவேந்தர் என்பதை மறந்து விட்டு ஒவ்வொரு அறையாகச் சென்று எட்டிப்பார்ப்பது, தேவயற்றதைப் பேசுவது போன்ற செயல்களைச் செய்கிறார். இதற்கு துறைத் தலைவர்கள் இருக்கும்போது இவர் ஏன் இதைச் செய்ய வேண்டும். முன்னாள் துணைவேந்தரின் நண்பர்களாக இருக்கும் உயர் அலுவலர்களுக்கு நீங்கள் இதுவரை பதவி உயர்வு தரவில்லை என்பதை அனைவரும் அறிந்து கொண்டனர்.

துணை வேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்
துணை வேந்தர் கோ. பாலசுப்பிரமணியன்

மேலும், 46 தற்காலிகப் பணியாளர்களைப் பணி நீக்கம் செய்ததால் அவர்கள் அனைவரின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டு வாரத்திற்குள் முறைப்படி விளம்பரப்படுத்தி நேர்காணல் நடத்த வேண்டும் இல்லையென்றால், கொலை செய்ய நேரிடும்' என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் வந்த கடிதம் தொடர்பாகப் புகார் அளித்தார். போலீஸார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன், கடிதம் அனுப்பிய மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

கடிதம்
கடிதம்

இதுகுறித்து துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். ``மர்ம நபர் ஒருவர் எனக்கு`கொலையும் தாமதமின்றி நடக்கலாம்' என மொட்டைக் கடுதாசி அனுப்பியிருக்கிறார். இதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மற்றவர்களும் பெரிதுபடுத்த வேண்டாம். கொலை என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதால் முறைக்காக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன்'' என்றார்.