தஞ்சாவூர் அருகே திருடியதாகக் கூறி, இளைஞர் ஒருவரின் கண்களைத் துண்டால் கட்டி, பெரிய மரத்தை அவரைப் பிடிக்கச் சொல்லி, இரண்டு கைகளையும் பிடித்தபடி ஐந்து பேர் கொண்ட கும்பல் மரக்கட்டையால் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. `அண்ணே ப்ளீஸ் அடிக்காதீங்க’ என அந்த இளைஞர் கெஞ்சிய நிலையில் மூர்க்கத்தனமாகத் தாக்கியதுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி கிராமம், மேலத் தெருவில் வசிப்பவர் குணசேகரன். இவரின் மகன் ராகுல் (22). கூலி வேலை செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. ராகுலை ஐந்து பேர் கொண்ட கும்பல் பணத்தைத் திருடிவிட்டதாகக் கூறி, துண்டால் கண்களைக் கட்டிவிட்டு கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அத்துடன் அடிப்பதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`அண்ணே... வேண்டாம்ணே... அய்யோ அடிக்காதீங்க...’ என ராகுல் கதறிய நிலையிலும், மயங்கி விழும்வரை மிகக் கடுமையாக அடிக்கின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் இந்த வீடியோவைப் பார்ப்பவர்களின் மனது பதைபதைப்பதுடன், `எதற்காக இப்படிப் போட்டு அடிக்க வேண்டும்... தப்பு செஞ்சிருந்தா போலீஸ்கிட்ட ஒப்படைக்க வேண்டியதுதானே?’ எனவும் பேசிவருகின்றனர்.

குளத்தின் கரை ஒன்றில் ராகுலின் இரண்டு கண்களையும் கட்டி முட்டிபோட வைக்கிறார்கள். பின்னர் எழவைத்து கைகளைப் பிடித்துக்கொண்டு பெரிய புளிய மரம் ஒன்று இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு இரண்டு பேர் தனித் தனியாக ராகுலின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு நெஞ்சுப் பகுதியை மரத்தில்வைத்து அழுத்துகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர், இளைஞர் ஒருவர் மரக்கட்டையால் இடுப்புக்குக் கீழே வேகமாக அடிக்கிறார். சில அடிகளை வாங்கிய ராகுல் வலி தாங்க முடியாமல் அலறுகிறார். `அண்ணே... வேண்டாம்ண்ணே ...இனிமே எடுக்க மாட்டேண்ணே... கொடுத்துடுகிறேன். ப்ளீஸ் அடிக்காதீங்க’ எனக் கெஞ்சுகிறார்.

அந்த இளைஞர்கள் அவரின் அலறலைப் பொருட்படுத்தாமல் மாறி மாறி அடிக்கின்றனர். அத்துடன் ராகுலைத் தலைகுப்புற படுக்கவைத்து தலைமேல் ஒருவர் உட்கார்ந்துகொள்ள, மற்றொருவர் பின்பகுதியிலும், கால் பாதங்களிலும் கடுமையாக அடிக்கிறார்.
உடன் இருக்கும் ஒருவர், `ஐயப்பா... இனி மேல் அடிக்காத... செத்துப்போயிடப் போறான்... விடுங்கடா’ என்கிறார். `செத்தா சாவட்டும். அடிங்கடா...’ எனத் தலைமேல் உட்கார்ந்திருப்பவன் சொல்கிறான். மயங்கியநிலையிலும் கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் மிருகம்போல் அடிக்கின்றனர். ராகுல் அப்படியே பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார். அத்துடன் அந்த வீடியோ முடிகிறது.

நான்கு பேர் ராகுலைத் தாக்கியிருக்கிறார்கள். ஒருவன் இதை வீடியோ எடுத்திருக்கிறான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. மேலும், இளைஞர் ஒருவரை ஐந்து பேர்கொண்ட கும்பல் தாக்கியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊர்த் தரப்பில் சிலர், `இது பணம் திருட்டு விவகாரம் கிடையாது. வேறு ஒரு பிரச்னை’ எனவும் கூறுகின்றனர். ``ராகுல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் இப்படித் தாக்கியிருக்கிறார்கள். தப்பே செய்திருந்தாலும், தண்டிக்கச் சட்டம் இருக்கும்போது, காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது பெரும் குற்றம்’’ எனச் சமூக ஆர்வலர்கள் பேசிவருகின்றனர்.

இது குறித்து அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமியிடம் பேசினோம். ``என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர் தரப்பிலிருந்து புகாரும் கொடுக்கவில்லை. யார் அடித்தது என்பதும் தெரியவில்லை. நாங்களே இதை விசாரணை செய்துவருகிறோம். அதன் பிறகு வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.