Published:Updated:

`சுதந்திர தின விடுமுறையால் வசூலான பணம் அது!' - கிருஷ்ணகிரியில் கொலையான டாஸ்மாக் ஊழியர்

எம்.வடிவேல்
பிரபாகரன் செ

டாஸ்மாக் ஊழியரைக் கொன்று, வசூல் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் கிருஷ்ணகிரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் ராஜா
கொலை செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் ராஜா ( செ.பிரபாகரன் )

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்துள்ள பேட்டப்பனூர் டாஸ்மாக் கடையில், திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள மீனாட்சி மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம்போல பணிக்கு வந்த ராஜா அன்றைய விற்பனையை முடித்துவிட்டு, இரவு கடையை மூடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள், கடையில் தனியாக இருந்த ராஜாவிடம் மதுபாட்டில்களை மொத்தமாகக் கேட்டுள்ளனர். ராஜாவும் மதுபாட்டில்களை எடுக்கச் சென்றுள்ளார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

அந்தநேரத்தில், கடைக்குள் புகுந்த அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள், விற்பனையாளர் ராஜாவைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே ராஜா இறந்துவிட்டார். பிறகு, அன்றைய தினம் டாஸ்மாக் கடையில் விற்பனையான ரூ.1.5 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது அந்தக் கும்பல்.

`போலீஸ் டார்ச்சர் தாங்க முடியல..!' - டாஸ்மாக் எம்.டி-யிடம் புகார் வாசித்த ஊழியர்கள்

மறுநாள் காலையில், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஜெகநாதன், வந்து பார்த்தபோதுதான் ராஜா பிணமாகக் கிடப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர், குருபரப்பள்ளி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கவே, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி பண்டி கங்காதர், ஆய்வாளர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

`பில் இன்னும் பாஸ் ஆகல' - 5 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி.. இது கிருஷ்ணகிரி அவலம்!

முதல்கட்ட விசாரணையில், நேற்று சுதந்திர தினம் என்பதால் அதற்கு முதல்நாள் வழக்கத்தைவிட அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது. இதைக் கண்ட கொள்ளைக் கும்பல், வசூலான தொகையை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளனர். தனியாக இருந்த ராஜாவைக் கொலை செய்துவிட்டு பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

`டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி வசதி செய்யப்படாததால் ஊழியர்களுக்குப் பாதுகாப்பில்லை' என்பதை வலியுறுத்திக் கடந்த 6-ம் தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமாரிடம் மனு கொடுத்திருந்தது ஏ.ஐ.டி.யு.சி அமைப்பு. `உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்' என டாஸ்மாக் எம்.டி-யும் உறுதி அளித்திருந்தார். அதற்குள் கொள்ளைக் கும்பலிடம் ஓர் ஊழியரைப் பறிகொடுத்துவிட்டு நிற்கிறது டாஸ்மாக் நிர்வாகம்.