Published:Updated:

`சரக்கு அடிச்ச திருப்தி இல்லை..!' -ரத்தக்கறையால் தூத்துக்குடியில் சிக்கிய டாஸ்மாக் கொள்ளையர்கள்

திருடப்பட்ட டாஸ்மாக் கடை
திருடப்பட்ட டாஸ்மாக் கடை

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை, சுவரில் படிந்த ரத்தக்கறைகள் மூலம் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர் போலீஸார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் முக்கியச் சாலையான வி.இ.ரோட்டில் உள்ள அம்பாள் டாஸ்மாக்பார் வளாகத்திலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் கடந்த 15-ம் தேதி நள்ளிரவில் கடையின் கதவை உடைத்து மர்மநபர்கள் மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. சுமார் 5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள், பீர்பாட்டில்கள் திருடு போனதாகக் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. இதுகுறித்து மத்தியபாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

உடைக்கப்பட்ட கதவு
உடைக்கப்பட்ட கதவு

இந்நிலையில், டாஸ்மாக் கடை கட்டடத்தில் படிந்த ரத்தக்கறைகளை வைத்து, கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைப் பிடித்துள்ளனர் போலீஸார். கடையை உடைத்துக் கொள்ளைக் கும்பல் போலீஸ் விசாரணையில் அளித்த தகவலில் ”டாஸ்மாக் கடைகள் அடைக்கப் பட்டிருந்ததால் கள்ளச் சந்தையிலும் சரக்கு ஓடலை. கந்தசாமிபுரத்துல உள்ள ஒரு மெடிக்கலில் 80 ரூபாய்க்கு போதை மாத்திரை வாங்கிப் போட்டோம். அதுல போதை அதிகமாக இருந்தாலும், சரக்கு அடிச்சது மாதிரியான திருப்தி இல்லை.

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இந்த மாதிரி மாத்திரையை வாங்கிப் போடுறது? வீட்டுப் பக்கத்துல உள்ள ஏதாவது ஒரு ஒயின்ஷாப்பை உடைச்சு சரக்குபாட்டில்களைத் திருடலான்னு பிளான் போட்டோம். டாஸ்மாக் பாரின் அருகிலுள்ள மரத்தின் மீது ஏறி, கட்டடத்தின் மேல்பகுதியிலிருந்து மாடிப்படி வழியாக கீழே இறங்கினோம். டாஸ்மாக் கடையின் மரக்கதவின் ஒருபகுதியை உடைத்தோம். உள்ளே நுழைந்து பீர்பாட்டில் பெட்டிகள், குவாட்டர் பாட்டில் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு மாடியின் மேல்பகுதிக்குச் செல்வதற்காகப் போனோம்.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள்
கொள்ளையில் ஈடுபட்டவர்கள்

ஒவ்வொருத்தரும் ஒரு அட்டைப்பெட்டி பீர் பாட்டில்கள், இரண்டு அட்டைப்பெட்டி குவாட்டர் பாட்டில்களைத் தூக்கிக்கொண்டு படி வழியா மாடிக்குப் போகும்போது பாரம் தாங்காமல் அட்டைப் பெட்டியிலிருந்து பீர்பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்தன. இதில், உடைந்த கண்ணாடி பீங்கான்கள் மீது காலில் ரத்தக்காயம் ஏற்பட்டது.

அதேபோல, குவாட்டர் பாட்டில்கள் பெட்டியிலிருந்தும் பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்தன. வேறவழியில்லாமல் ஒரு சாக்குப்பையை எடுத்து அதில் முடிந்தவரை குவாட்டர் பாட்டில்களை அடுக்கி மாடியிலிருந்து இறங்கி தப்பிச்சுட்டோம். எங்களோட தேவைக்குப் போக, நண்பர்கள் சிலருக்கும் இலவசாமா கொடுத்தோம். மீதி பாட்டிகளை பிளாக்குல வித்தோம். பாட்டில் உடைஞ்சு காலில ரத்தக்காயம் ஏற்படாம இருந்திருந்தா மாட்டியிருக்க மாட்டோம்” என்றனர். கொள்ளையர்களைப் பிடித்தது எப்படி என போலீஸார் தரப்பில் கேட்டோம், “டாஸ்மாக் கடையின் பின்பக்கச் சுவரில் ரத்தக்கறைகளுடன் கால்தடம் படிந்து இருந்தது.

ரத்தக்கறை
ரத்தக்கறை

அதைவைத்துக் கொள்ளையர்களில் ஒருவரின் காலில் ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கினோம். திருடு போன தேதியில் அப்பகுதியில் இயங்கிய சில மருத்துவமனைகளில் காலில் அடிபட்ட நிலையில் யாரும் கட்டுப் போட வந்தார்களா? என விசாரித்தோம். இதற்கிடையில், அப்பகுதியில் சில குடிமகன்கள் அதிக போதையில் தள்ளாடிபடியே நடந்து வந்தனர். அவர்களைப் பிடித்து சரக்கு எங்கே கிடைத்தது என விசாரித்தபோது, ”என் நண்பன் கொடுத்தான்” என போதையில் ஒருவன் சொல்ல, அவனை முறைப்படி விசாரிச்சோம்.

சரக்குக் கொடுத்த இந்திரா நகரைச் சேர்ந்த சார்லஸ் என்பவரை அடையாளம் காட்டினான். எதிர்பார்த்தபடியே அவர் காலில் கட்டுப்போடு நொண்டிய படியே நடந்து வந்தார். சார்லஸை விசாரித்தபோது, தானும் அவரது நண்பர்களான அந்தோணி, மைக்கேல்ராஜ், பிரவீன் ஆகிய நான்கு பேரும் ஒண்ணா சேர்ந்து டாஸ்மாக் கடையின் பின்பக்க மரக்கதவை உடைத்து திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் மூலம் மற்ற மூன்று பேரையும் கைது செய்தோம்.

டாஸ்மாக் கடையின் பின்புறச் சுவர்
டாஸ்மாக் கடையின் பின்புறச் சுவர்

இவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் டேவிட்டையும் கைது செய்து, அவரது மெடிக்கலை சீல் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்துள்ளோம்” என்றனர். டாஸ்மாக் கொள்ளைச் சம்பவத்தில் நான்கு நாள்களில் கொள்ளையர்களைப் பிடித்த போலீஸார், நகரில் நடக்கும் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதிலும் இதே வேகத்தைக் காட்ட வேண்டும் எனவும் கூறுகிறார்கள் மக்கள்.

அடுத்த கட்டுரைக்கு