Published:Updated:

`பிங்கியின் செல்போனில் வி.வி.ஐ.பி நம்பர்கள்' - பின்னணி தகவல்கள்

எஸ்.மகேஷ்

குளியலறையில் நிர்வாணமாகக் கிடந்த டாட்டூ ஆர்ட்டிஸ்ட் பிங்கி கொலை, துப்பு துலங்க செல்போனும் சிசிடிவியும்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளது. அதே நேரத்தில் பிங்கியின் செல்போனில் உள்ள தகவல்களால் வி.வி.ஐ.பி-க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

பிங்கி
பிங்கி

சென்னை அண்ணாநகர், ஹெச் பிளாக், 18-வது தெருவில் உள்ள தனி வீட்டில் குடியிருந்தவர் பிங்கி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், நேபாளத்தைச் சேர்ந்த ஹோட்டல் சமையல் மாஸ்டர் கிருஷ்ண பகதூர் என்பவருடன் தங்கியிருந்தார். பிங்கியைவிட கிருஷ்ணபகதூருக்கு 4 வயதுக் குறைவு. சம்பவத்தன்று பிங்கி கொலை செய்யப்பட்டு அவரின் சடலம் குளியலறையில் நிர்வாணமாகக் கிடந்ததது. பிங்கியின் செல்போனைத் தவிர மற்ற எந்தப் பொருள்களும் கொள்ளையடிக்கப்படவில்லை. மேலும், பிங்கியின் உடல் முழுவதும் டாட்டூ வரையப்பட்டு இருந்தன. அதில், காயங்களும் ரத்தத்துளிகளும் இருந்தன. இதனால் பிங்கி, அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.

பிங்கி
பிங்கி

பிங்கியுடன் தங்கியிருந்த கிருஷ்ணபகதூரிடம் போலீஸார் விசாரித்தபோது, ஹரியானாவைச் சேர்ந்த விகாஷ் சர்மா வீட்டுக்குள் வந்ததும் நான் வெளியில் சென்றுவிட்டேன். வழக்கமாக பிங்கியைத் தேடி கஸ்டமர்கள் வந்தால் நான் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன். குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குப் பிறகு, பிங்கிக்கு போன் செய்வேன். அப்போது அவர் வீட்டுக்கு வரச்சொன்னால் வருவேன். அதுபோலத்தான் சம்பவத்தன்று பிங்கியின் செல்போனுக்கு நான் கால் செய்தேன். அப்போது அவரின் செல்போன் ஆன் ஆனது. அதிலிருந்து பிங்கி உயிருக்குப்போராடிய சத்தம் மட்டுமே கேட்டது. இதனால் பதறிப்போய் வீட்டுக்குள் வந்தேன். அப்போது குளியலறையில் நிர்வாணமாக பிங்கி இறந்துகிடந்தார். உடனே நைட்டி எடுத்து அவருக்குப் போட்டுவிட்டேன். பிறகு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தேன் என்று கூறினார். இருப்பினும் கிருஷ்ணபகதூர் மீது போலீஸாரின் சந்தேகப் பார்வை இருந்தது.

அடுத்து பிங்கியின் வீட்டில் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தோம். அப்போது பிங்கி உயிரோடு இருக்கும்போது கிருஷ்ணபகதூர் வெளியில் செல்லும் காட்சியும் அவர் இறந்த பிறகு வீட்டுக்குள் வரும் காட்சியும் எங்களுக்குக் கிடைத்தது. இதனால் சந்தேக வளையத்திலிருந்து கிருஷ்ணபகதூரை விடுவித்தோம். சிசிடிவியில் பைக்கில் இரண்டு வாலிபர்கள் பிங்கியின் வீட்டுக்கு வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அவர்கள் குறித்து ஒரு டீம் விசாரித்தோம். அதே சமயத்தில் பிங்கியின் செல்போன் நம்பர் மூலம் அவருக்கு வந்த போன் அழைப்புகளை ஆய்வு செய்தோம். அப்போது மாதவரத்தில் தங்கியிருக்கும் ஹரியானாவைச் சேர்ந்த விகாஷ் சர்மா, பிங்கியுடன் நீண்ட நேரம் பேசிய தகவல் கிடைத்தது.

 விகாஷ் சர்மா
விகாஷ் சர்மா

மேலும், பிங்கியின் செல்போனும் மாதவரம் பகுதியில் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் விகாஷ் சர்மாவிடம் விசாரித்தோம். அப்போது அவர், `ஹரியானாவைச் சேர்ந்த நண்பர் ஒருவர் மூலம் பிங்கி எனக்கு அறிமுகமாகினார். அவரின் வீட்டுக்கு 5 முறை வந்துள்ளேன். 6 வது முறையாக நானும் என் நண்பர் விகாஷ் குமாரும் வந்தோம். நான் மட்டும்தான் பிங்கியின் வீட்டுக்குள் சென்றேன். அங்கு நானும் பிங்கியும் மது அருந்தினோம். பிங்கி என்னிடம் 4,000 ரூபாய் கேட்டார். சம்பளம் போடவில்லை. அதனால் 1,000 ரூபாய் கொடுத்தேன். இதனால் பிங்கி அசிங்கமாக என்னை இந்தியில் திட்டினார்.

ஆத்திரத்தில் அவளை தள்ளிவிட்டதில் தலையில் அடிபட்டது. உடனே என்னை போலீஸிடம் காட்டிக் கொடுத்துவிடுவதாக பிங்கி கூறினாள். உடனே தலையணையை எடுத்து பிங்கியின் முகத்தில் அழுத்தினேன். மூச்சுத்திணறி பிங்கி இறந்ததும் குளியலறைக்கு அவரின் சடலத்தை இழுத்துச் சென்றேன். போலீஸிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க பிங்கியின் செல்போனை எடுத்துச் சென்றேன். என்னுடன் வந்த விகாஷ் சர்மாவிடம் பிங்கியைக் கொலை செய்த தகவலைத் தெரிவிக்கவில்லை. மாதவரத்துக்குச் சென்றதும் பிங்கியின் செல்போனை விகாஷ் குமாரிடம் கொடுத்தேன். அப்போதுதான் அவரிடம் பிங்கியைக் கொலை செய்ததை கூறினேன். இதனால் விகாஷ் குமார் அதிர்ச்சியடைந்தார். இருவரும் ஹரியானாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தோம்' என்று போலீஸாரிடம் விசாரணையின்போது விகாஷ் சர்மா கூறியுள்ளார்.

சிசிடிவி கேமராவில் சிக்கிய விகாஷ்சர்மா
சிசிடிவி கேமராவில் சிக்கிய விகாஷ்சர்மா

இதையடுத்து பிங்கியைக் கொலை செய்த குற்றத்துக்காக விகாஷ் சர்மாவை போலீஸார் கைது செய்தனர். இவர் மாதவரத்தில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றிவந்துள்ளார். விகாஷ் சர்மாவுக்கு திருமணமாகவில்லை. இதனால்தான் பிங்கியுடன் நட்பில் இருந்துவந்துள்ளார். விகாஷ் சர்மாவுடன் ஏற்பட்ட கூடா நட்பு பிங்கிக்கு கேடாய் முடிந்துள்ளது. விகாஷ் சர்மாவைப்போல பிங்கிக்கு வடமாநில நண்பர்கள் உள்ளனர். அவர்களின் செல்போன் நம்பர்களும் பிங்கியின் செல்போனில் இடம்பிடித்துள்ளன. பிங்கியின் வீட்டுக்கு வருவோர்களுடன் பிங்கி, மது அருந்தும் பழக்கமும் இருந்திருக்கிறது.

போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``பிங்கியின் செல்போனை விகாஷ் சர்மாவிடம் இருந்து கைப்பற்றினோம். பிங்கிக்குத் திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இந்த வீட்டுக்கு 14,500 ரூபாய் மாத வாடகை கொடுத்துள்ளார். கிருஷ்ணபகதூருக்கு பிங்கி குறித்த முழு விவரங்களும் தெரியும். சுடிதார், சேலை, டாட்டூ பிசினஸோடு கால் கேர்ளாகவும் பிங்கி இருந்துள்ளார். பிங்கி இறந்த தகவலை அவரின் பெற்றோருக்குத் தெரிவித்தோம். அவர்கள், பிங்கியின் சடலத்தை சொந்த ஊருக்குக் கொண்டு சென்றுவிட்டனர். பிங்கியின் லைப் ஸ்டைல், ஆடம்பர வாழ்க்கையால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் பிங்கியுடன் தங்கியிருந்த கிருஷ்ணபகதூரையும் விகாஷ் சர்மாவின் நண்பர் விகாஷ் குமாரையும் சிசிடிவி காப்பாற்றியுள்ளது" என்றார்.

பிங்கி கொலை வழக்கை விசாரித்த போலீஸ் டீமுக்கு கமிஷனர் பாராட்டு
பிங்கி கொலை வழக்கை விசாரித்த போலீஸ் டீமுக்கு கமிஷனர் பாராட்டு

பிங்கியின் செல்போனில் சில வீடியோக்கள் இருந்ததாகவும் வீடியோவால் வி.வி.ஐ.பி-க்கள் கலக்கத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, ``பிங்கி பயன்படுத்திய செல்போன், கிருஷ்ணபகதூரின் நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது. அந்தப் போனில் எந்த வீடியோக்களும் இல்லை" என்றனர். அதே நேரத்தில் பிங்கியின் செல்போனில் சில மர்மங்கள் இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

பிங்கியின் கொலை வழக்கை சிறப்பாக துப்பு துலக்கிய போலீஸாரை அழைத்த கமிஷனர் விஸ்வநாதன், பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பிங்கியுடன் நட்பில் இருந்த வி.வி.ஐ.பி-க்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு பிங்கியின் கொலை ஒரு உதாரணம் என்கின்றனர் போலீஸார்.