Published:Updated:

`மோகனாதான் எனக்கு ஏ.டி.எம்.' - ரயில்வே பெண் ஊழியர் கொலையில் டீ மாஸ்டர் வாக்குமூலம்

`என்னைவிட்டுப் பிரிந்துசெல்வதாக மோகனா கூறியதால், அவரைக் கொலை செய்தேன்' என்றும் `அவர்தான் எனக்கு ஏ.டி.எம்' என்றும் கொலை வழக்கில் கைதான டீ மாஸ்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மோகனா
மோகனா

சென்னை பெரியமேடு வி.வி.கோயில் தெருவில் உள்ள விடுதியில், இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாகப் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பெரியமேடு இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரியமேடு காவல் நிலையம்
பெரியமேடு காவல் நிலையம்

பெரியமேடு போலீஸாரிடம் பேசினோம். ``இறந்த பெண்ணின் பெயர் மோகனா. திருவொற்றியூர் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. அவரது கணவரும் ரயில்வேயில் வேலை பார்த்துவருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவரைப்பிரிந்து மோகனா வாழ்ந்த சமயத்தில்தான் தண்டையார்பேட்டை ரயில்வே உணவகத்தில், திட்டக்குடியை அடுத்த முருகன்குடியைச் சேர்ந்த வீராசாமியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்குவது வழக்கம். சம்பவத்தன்று இருவரும் தங்கியுள்ளனர். அப்போது, வீராசாமிக்கும் மோகனாவுக்கும் இடையே நடந்த தகராறில் மோகனா கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த மூன்று மணி நேரத்தில் வீராசாமியை பிடித்துவிட்டோம். அதற்கு செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராதான் பெரிதும் உதவியது. வீராசாமியிடம் விசாரித்தபோது சில தகவல்களைக் கூறினார்.

அதில், ` எனக்குத் திருமணமாகவில்லை. ஊரில் வயதான அம்மா இருக்கிறார். நான் வேலை தேடி சென்னை வந்தேன். ரயில்வே உணவகத்தில் டீ மாஸ்டராக வேலைபார்த்தேன். அங்கேயே தங்கியிருந்தேன். உணவகத்துக்கு வந்த மோகனா, என்னிடம் நல்லபடியாகப் பேசினார். அப்போது கணவரைப் பிரிந்து வாழ்வதைப் பற்றி என்னிடம் தெரிவித்தார். இதையடுத்து, மோகனாவுக்கு ஆதரவாகப் பேசினேன். மேலும், அவருக்கு மாதம் 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் என்பதால் நான் கேட்டதையெல்லாம் எனக்கு வாங்கிக் கொடுத்தார். மோகனாதான் எனக்கு ஏ.டி.எம்.

வீராசாமி
வீராசாமி

இருவரும் பல இடங்களுக்குச் சென்றுள்ளோம். மோகனாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குள் சில கசப்பான சம்பவங்கள் எங்கள் இருவருக்குள் நடந்தன. குறிப்பாக, பொன்னேரி வீட்டில் நடந்த சம்பவத்துக்குப் பிறகு, மோகனாவிடம் பேசுவதைத் தவிர்த்தேன். ஆனால், மீண்டும் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டு பேசினார். அதனால், மோகனாவை மன்னித்து ஏற்றுக்கொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில், மோகனாவின் சில நடவடிக்கைகள் எனக்குப் பிடிக்கவில்லை. என்னைத் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்று அவரிடம் கூறியிருந்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பெரியமேடு விடுதியில் நாங்கள் இருவரும் தங்கியிருந்தபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான், அவரைக் கையால் தாக்கினேன். அப்போது அவர் என்னை எதிர்த்துப் பேசினார். போதையில் இருந்ததால் சரமாரியாகத் தாக்கினேன். அவர் உயிருக்காகப் போராடினார். அவர் இறந்துவிட்டதாகக் கருதினேன். சடலத்தை எப்படி அப்புறப்படுத்துவது என்று யோசித்தேன். பிறகு, மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல மற்றவர்கள் நம்புவதற்காக அவரது சேலையை வைத்தே மின்விசியில் தொங்கவிட்டேன். எதுவும் நடக்காததுபோல, அறையைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டேன்' என்றார். .

நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், அதற்குள் சில கசப்பான சம்பவங்கள் நடந்துவிட்டன.
வீராசாமி

வீராசாமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்துள்ளோம். இதற்கிடையில், மோகனாவின் இறப்புக்கான காரணம், அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கைமூலம் தெரியவந்துள்ளது. அதில், `மோகனாவின் நெஞ்சுப் பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால், எலும்பு உடைந்துள்ளது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வீராசாமியிடம் போலீஸார் கேட்டபோது, ` என்னைவிட்டு பிரிந்து செல்வதாக மோகனா கூறினார். அவர் அப்படிச் சென்றுவிட்டால் என் செலவுக்கு பணம் கிடைக்காது. அதனால்தான் மோகனாவிடம் அன்பாகப் பேசி அவரை விடுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கும் அவர் திமிராகப் பேசினார். அதனால்தான் அவரைக் கொலை செய்தேன்' என்று கூறினார்.