Published:Updated:

`வெளிநாட்டில் படிப்பு, வேலை; நாங்க பொறுப்பு!’-அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதியிடம் ரூ.1.61 கோடி மோசடி?!

மோசடி
மோசடி

மதுரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரிய தம்பதியின் மகளுக்கு வெளிநாட்டில் படிக்க சீட் வாங்கித் தருவதாகக் கூறி துபாயில் ஏஜென்சி நடத்தும் அஸ்வின் என்பவர் ரூ.1.61 கோடி மோசடி செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மதுரை, திருப்பாலையைச் சேர்ந்தவர் ரூபன் ப்ராங்களின். இவர் திண்டுக்கல் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். இவரின் மனைவி மதுரையில் அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் முடிந்து  கணவருடன் சென்னையில் இருக்கிறார். இரண்டாவது மகள் சிவகாசியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு, தற்போது சென்னையிலுள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்துவருகிறார்.

மோசடி
மோசடி

ஆசிரிய தம்பதி குடும்பத்தினரும், தூரத்து உறவினரான ஜான் ரிச்சர்ட் என்பவரின் குடும்பத்தினரும் 20 ஆண்டுக்கால பழக்கம் கொண்டவர்கள். திண்டுக்கல் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜான் ரிச்சர்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு குடிபெயர்ந்திருக்கிறார். இவரும், இவரின் மனைவி ஜெயந்தி பில்லியன்ட் மேரியும், மருமகன் அஸ்வின் துபாயில் நடத்தும் ஏஜென்சிக்கு வேலை செய்துவந்துள்ளனர். 

இந்தநிலையில்தான் ஆசிரிய தம்பதியின் இரண்டாவது மகளுக்கு வெளிநாட்டில் படிக்க சீட்டும், வேலையும் வாங்கித் தருவதாகக் கூறி ஜான் ரிச்சர்ட் குடும்பத்தினர் ரூ.1.61 கோடி மோசடி செய்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

``நானும் தனது மனைவியும் 30 ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரிய பணியில் இருந்தும், வெளிநாடு மோகத்தால் பணத்தை இழந்தது மட்டுமில்லாமல் மனநிம்மதி, உடல்நலம் இன்றி நீதிக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்’’ என்று தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்துக் கூறினார் ரூபன். ``2016-ம் ஆண்டின் இறுதியில், `பண மதிப்பிழப்பு காரணமாக எங்கள் மகள் திருமணத்துக்குத் தேவையான பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே பண உதவி செய்யுங்கள்’ என ஜான் ரிச்சர்ட் எங்களிடம் கேட்டார். நாங்கள் ரூ. 8 லட்சம் பணம், ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகளைக் கொடுத்து உதவினோம். அவரின் மகள் திருமணம் நடந்து முடிந்தது. 

அஸ்வின்
அஸ்வின்

எங்கள் இரண்டாவது மகள் சிவகாசியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். அவரின் மேற்படிப்பை வெளிநாட்டில் முடிக்கவைத்து, அங்கேயே தன் மருமகன் மூலம் வேலை வாங்கித் தருவதாக  ஜான் ரிச்சர்ட் சொன்னார். ஏற்கெனவே அவர் வெளிநாட்டில் பலரை மேற்படிப்புக்கும் வேலைக்கும் அனுப்பியிருப்பதை நாங்கள் அறிந்திருந்தோம். அவரின் மகளையும் வெளிநாட்டில் படிக்கவைத்து, அங்கு வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். இருப்பினும் எங்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்ப சிறிது தயக்கம் இருந்தது. 

ஆட்டோ ஓட்டுநர் டு போலி டி.ஐ.ஜி; மோசடி! - உடந்தை எனப் பெண் இன்ஸ்பெக்டர் மீதும் வழக்கு பதிவு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது ஜான் ரிச்சர்ட், அவரின் மனைவி ஜெயந்தி ஆகியோர் சேர்ந்து, கடன் தொகையை எங்கள் மகள் வெளிநாட்டில் படிக்க சீட், வேலை வாங்கி கொடுப்பதற்கு தேவைப்படும் தொகையிலிருந்து, கழித்துக்கொள்ளலாம் எனக் கூறினார். மேலும் சீட் பெறுவதில் கடும் போட்டி இருப்பதாகவும், முன்பணம் செலுத்தி புக் செய்ய வேண்டும் எனவும் கூறியதை நம்பி நாங்கள் ரூ.95 லட்சத்தைக் கொடுத்தோம். எனது மகள் 2018-ல் படிப்பை முடித்ததும் வெளிநாடு அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டோம். அப்போது அஸ்வின் வெளிநாட்டில் புதிய நிறுவனம் தொடங்கியதில் ஏற்பட்ட நஷ்டத்தால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. அதற்கு பதிலாக சென்னை துரைப்பாக்கத்திலுள்ள ரூ.1.57 கோடி மதிப்பிலான அவர்களது வீட்டைப் பத்திரம் முடித்துத் தருவாகக் கூறினர்.

ஜெயந்தி பில்லியன்ட் மேரி - ஜான் ரிச்சர்ட்
ஜெயந்தி பில்லியன்ட் மேரி - ஜான் ரிச்சர்ட்

அதற்காக மதுரையிலிருந்து வங்கிப் பரிவர்த்தனை மூலம் ரூ.66 லட்சம் செலுத்தினோம். எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ.1 கோடியே 61 லட்சம் கொடுத்திருந்தோம். இந்தநிலையில், பத்திரப்பதிவுக்கு கொரோனாவைக் காரணம் காட்டி காலதாமதம் ஆக்கிவந்தனர். இதனால் சந்தேகமடைந்த நாங்கள் இசி எடுத்து பார்த்தோம். அதில் வீட்டின் பெயரில் ரூ.75 லட்சம் வங்கியில் கடன் பெற்றிருப்பதை அறிந்தோம். அப்போதுதான் மொத்தமாக நாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தோம். மேலும் ஜான் ரிச்சர்ட், அவரின் குடும்பத்தினர் பலரையும் ஏமாற்றி மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது” என்றார் ரூபன்.

இது குறித்து ரூபன் ப்ராங்களினின் மனைவி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஜான் ரிச்சர்ட், அவரின் மனைவி ஜெயந்தி பில்லியன்ட் மேரி, மருமகன் அஸ்வின் ஆகிய மூன்று பேர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர் போலீஸார்.

``என்னால் மட்டும்தான் எல்லாம் முடியும்” பலரிடம் மோசடி செய்த போலிச் சாமியார் கைது!

தினம் தினம் நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் வெளிநாடு மோகத்தால் பலரும் ஏமாற்றப்படும் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் இது போன்ற மோசடிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதைத் தடுக்க அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியதும் அவசியமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு