Published:Updated:

அரசுப் பள்ளி முன்பு ஆசிரியர் படுகொலை! - தூத்துக்குடி அருகே பயங்கரம்!

இ.கார்த்திகேயன்

தூத்துக்குடியில் அரசுப் பள்ளி முன்பு ஆசிரியர் ஒருவர் குடும்பப் பிரச்னை காரணமாக பட்டப்பகலில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி
புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி

விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். இவர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார வளமையத்தில் உள்ள சிறப்புப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டியைச் சேர்ந்த கிரேஸி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரோஸி ஏஞ்சல் என்ற 4 வயது மகள் உள்ளார். கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கொலை
கொலை

இதற்கிடையில், அருப்புக்கோட்டை அருகிலுள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணை வடிவேல் முருகன், இரண்டாவதாக திருமணம் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால், முதல் மனைவியான கிரேஸி குடும்பத்தினருடன் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஆசிரியர் வடிவேல்முருகன், இன்று வழக்கம் போல் பள்ளியில் வேலையில் இருந்தார். மாலையில் அவரைத் தேடி கிரேஸியின் தம்பி, அற்புதச் செல்வம் என்ற ஆஸ்டின் பள்ளிக்கு வந்துள்ளார். இருவரும் பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அற்புதச் செல்வம், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேல் முருகனைக் குத்தினார். இதை அந்த வழியாகச் சென்றவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். ஆனால், யாரும் காப்பாற்ற முன் வரவில்லை. வயிற்றுப் பகுதியில் ஆழமாக கத்திக் குத்துப்பட்ட வடிவேல்முருகன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை
கொலை

தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அற்புதச் செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியர் ஒருவர் பள்ளி முன்பாகவே குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.