Published:Updated:

`பாலியல் வன்கொடுமை செய்து இளம்பெண்ணுக்குத் தீவைப்பு!' - உன்னாவ் அருகே மேலும் ஒரு அதிர்ச்சி

உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளார்.

Representation image
Representation image

தெலங்கானாவில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலங்கானா சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் என்கவுன்டர் செய்தனர். போலீஸ் என்கவுன்டர் செய்தது சரியா தவறா என விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஃபெதாபூர் மாவட்டத்தில் மற்றொரு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 90 சதவிகித தீக்காயங்களுடன் அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உன்னாவ் பகுதியில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஃபெதாபூர் மாவட்டம்.

Representation image
Representation image

இதுகுறித்து பேசிய ஃபெதாபூர் மாவட்ட காவல் அதிகாரிகள், ``இந்த வழக்கில் இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். இளம்பெண்ணுக்கும் அவரது உறவினருக்கு இடையே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் வெளியில் தெரிந்ததையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) கிராம பஞ்சாயத்து கூடியுள்ளது. பஞ்சாயத்தில் பெண்ணின் குடும்பத்தினரும் அவரது உறவினரின் குடும்பத்தினரும் ஆஜராகியுள்ளனர். இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என பஞ்சாயத்தில் முடிவாகியுள்ளது. அதுவரை இருவரும் விலகி இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இன்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவரது உறவினர், பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்துள்ளார். அந்த நபருக்கு 22 வயதாகிறது. 90 சதவிகித தீக்காயங்களுடன் அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்” என்றார்.

ரயில்முன் பாய்ந்த கணவர்; குழந்தையுடன் மனைவி தற்கொலை! - நொய்டாவில் சென்னை தம்பதிக்கு நேர்ந்த துயரம்

மேல்சிகிச்சைக்காக கான்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய கான்பூர் மருத்துவமனை மருத்துவர், ``பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செயற்கை சுவாசம் அளிக்கபட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீரான பின்பு, தீக்காயங்கள் பிரிவில் அனுமதிக்கப்படுவார்” என்றார்.

Representation image
Representation image

இளம்பெண் தீவைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அறிந்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். கான்பூர் மருத்துவமனைக்கு இளம்பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்து சென்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளம்பெண்,``நான் வீட்டில் தனியாக இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்தனர்” என்றனர். உறவினரின் வீடும் இளம்பெண்ணின் வீடும் அருகாமையில்தான் உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரும் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்களால், எதிர்க்கட்சிகள் ஆளும் அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.