மும்பை, விக்ரோலி பார்க்சைட் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி கல்லூரிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என்று அந்தப் பெண்ணின் தாயார் போலிஸில் புகாரளித்திருக்கிறார். போலீஸார் கடத்தல் வழக்கு பதிவுசெய்து தேடிவந்தனர். மாணவியின் மொபைல் போன் சிக்னலின் மூலம் அவர் கடைசியாக தாதர் ரயில் நிலையத்தில் நின்றது தெரியவந்தது. உடனே ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது அந்த மாணவி ஒரு தம்பதியுடன் ஹூப்ளிக்குச் செல்லும் ரயிலில் ஏறிச் சென்றது தெரியவந்தது. உடனே அந்த ரயில் எங்கெல்லாம் நிற்கிறதோ, அங்கெல்லாம் இறங்கினரா என்பது குறித்து ஆய்வுசெய்தனர். அப்போது மாணவியுடன் இரண்டு பேரும் மீரஜ் ரயில் நிலையத்தில் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் மீரஜ் ரயில் நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனம் ஒன்றில் கிளம்பிச் சென்றனர். அந்த வாகனத்தின் பதிவு எண்ணைப் பார்த்தபோது அது மும்பை செம்பூர் பகுதியில் டீக்கடை நடத்தும் சுதா மனோஜ் ஜோஷி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. இந்த நிலையில், இது குறித்து, சுதா மனோஜ் ஜோஷியிடம் விசாரித்தபோது, மாணவியுடன் சென்ற பெண் தன் மனைவி என்றும், உடனிருப்பது தன்னுடைய மாமா என்றும் தெரிவித்தார். உடனே அவர்களைத் தீவிரமாக கண்காணித்தபோது மாணவியுடன் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டேயிருந்தனர். இறுதியாக அவுரங்காபாத்திலுள்ள சிந்தி காலனியில் அவர்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார் அதிரடி சோதனை நடத்தி, மாணவியை மீட்டு இரண்டு பேரையும் கைதுசெய்தனர்.
அவர்களது பெயர் சுதா மனோஜ் ஜோஷி, லடப்பா என்று தெரியவந்தது. சுதாவும் லடப்பாவும் அந்தப் பெண்ணை அவுரங்காபாத்தைச் சேர்ந்த கண்பத் காம்ப்ளே (50 வயது) என்பவருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கின்றனர். இதையடுத்து கண்பத் அந்தப் பெண்ணை கோயில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இது குறித்து போலீஸ் அதிகாரி வினாயக் கூறுகையில், ``ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெண்ணை, அவர் கோயிலில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். மாணவி மைனர் என்று தெரிந்தும், அவரை கண்பத் திருமணம் செய்திருக்கிறார். கண்பத்திடம் விசாரித்தபோது, திருமணம் செய்வதற்குப் பெண் கிடைக்காததால், விலைக்கு வாங்கித் திருமணம் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

மூன்று பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்'' என்று தெரிவித்தார். கண்பத் அவுரங்காபாத்தில் மொபைல் ஷாப் ஒன்று நடத்திவருகிறார். அவர்கள் மும்பையிலிருந்தே இரு சக்கர வாகனத்தை ரயிலில் எடுத்துச் சென்றிருந்தனர். அந்த இரு சக்கர வாகனம்தான் அவர்களைக் காட்டிக்கொடுத்திருக்கிறது.