Published:Updated:

விடுதியில் இருப்பதாக இரவில் வந்த போன்... கிணற்றில் சடலமாக மீட்பு! - தெலங்கானா மாணவனின் மர்ம மரணம்

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்
கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவன்

தெலங்கானாவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த வம்ஷி (Vamshi), தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வீடு திரும்பிய வம்ஷி கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரிக்கு சென்றுள்ளார். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வம்ஷிக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. அவரின் தந்தை திருப்பதி, அவர்களது கிராமத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வம்ஷியை அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு பேருந்து ஏற்றிவிட்டுள்ளார். கல்லூரி விடுதிக்கு வந்துவிட்டதாக வம்ஷி இரவு 8 மணியளவில் தன் குடும்பத்தினருக்கு போன் செய்துள்ளார்.

Representation image
Representation image

சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 7 மணியளவில் திருப்பதி தன் வயலுக்குச் சென்றுள்ளார். விவசாய நிலத்தில் இருந்த கிணற்றுக்கு அருகில் வம்ஷி கொண்டு சென்ற பேக் மற்றும் காலணிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த திருப்பதி கிணற்றில் எட்டிப்பார்த்துள்ளார். விடுதிக்குச் சென்றுவிட்டதாக கூறிய மகன் சடலமாக மிதந்துகொண்டிருந்தார்.

`கேஸை வாபஸ் வாங்க மாட்டியா..?' வீடு புகுந்து தாக்கிய கும்பல் -  உ.பி-யில் மீண்டும் ஒரு கொடூரம்

திருப்பதியின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர். கிராம மக்களின் உதவியுடன் மாணவனின் சடலம் வெளியில் எடுக்கப்பட்டது. வம்ஷியின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Representation image
Representation image

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``மாணவனின் கைகள் சேலையைக் கொண்டு பின்பக்கமாக கட்டப்பட்டுள்ளது. அவரது கால்களும் கட்டப்பட்ட நிலையில்தான் இருந்தது. வம்ஷி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை அவனை யாரோ திட்டமிட்டுக் கொலை செய்திருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். விசாரணையின்போது வம்ஷி ஒரு முறை தூக்கத்தில் கிணற்றில் தவறி விழுந்ததாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

இதே கிணற்றில்தான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வம்ஷி தவறி விழுந்துள்ளார். கிணற்றுக்கும் அவரின் வீட்டுக்கும் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு இருக்கும். இதற்கு முன்னர் கிணற்றில் விழுந்தபோது, தூக்கத்தில் நள்ளிரவில் வீட்டிலிருந்து எழுந்து வந்து கிணற்றில் விழுந்துவிட்டதாகவும், தண்ணீரில் விழுந்த பின்னரே கண்விழித்ததாகவும் அதன்பின்னர் கிணற்றில் இருந்த பைப்பின் உதவியைக்கொண்டு மேலே எழுந்து வந்தாகவும் தன் குடும்பத்தினரிடம் வம்ஷி கூறியுள்ளார்.

Representation image
Representation image

வெள்ளிக்கிழமை காலையில் வீட்டிலிருந்து புறப்பட்ட வம்ஷி கல்லூரி விடுதிக்குச் சென்றுவிட்டதாக அன்றிரவு தன் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே இது கொலையா தற்கொலையா என்பது தெரியவரும். மாணவனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. மாணவனின் தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து வருகிறோம். வம்ஷியே கிணற்றுக்குப் பகுதிக்கு வந்தாரா அல்லது யாராவது அவரை அழைத்து வந்தார்கள் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கும் என நம்புகிறோம். இதை சந்தேக மரணமாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறோம்’' என்றனர்.

பின் செல்ல