Published:Updated:

அறை எண் 306-ல் மாருதி ராவ்வின் உடல்... இந்தியாவை அதிரவைத்த ஆணவக்கொலை; தொழிலதிபர் தற்கொலை!

மாருதி ராவ்
மாருதி ராவ்

இந்தியாவை அதிரவைத்த தெலங்கானா ஆவணக்கொலையில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடையத் தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ம் தேதி மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயைக் கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார்.

பிரனய் அம்ருதா
பிரனய் அம்ருதா

பிரனய்யின் ஆணவக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் வலுத்தன. அவரின் இறுதிச் சடங்கில் தெலங்கானாவைச் சேர்ந்த பாதி இளைஞர்கள் கலந்துகொண்டனர் என்றே கூற வேண்டும்.

அந்த அளவுக்கு இந்தக் கொலை விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கணவர் இறந்தபோது கர்ப்பமாக இருந்த அம்ருதாவுக்கு தற்போது ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்தக் கொலை சம்பவம் நடந்து ஒன்றரை வருடம் ஆன நிலையிலும், தன் கணவரின் மரணத்துக்கு நீதிகேட்டுப் போராடி வருகிறார் அம்ருதா.

Vikatan

பிரனயின் கொலைக்கு முக்கிய காரணமாகக் கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதி ராவ், அவரின் சித்தப்பா பீகாரைச் சேர்ந்த கூலிப்படையினர் என ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்கள் சிறையிலிருந்த அம்ருதாவின் தந்தை, பிறகு ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை ஹைதராபாத்தை அடுத்துள்ள கைரதாபாத்தில் இருக்கும் ஆர்ய வைஷ்ய பவன் என்ற ஹோட்டலில் அறை எண் 306-ல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரைக் கவனித்த ஊழியர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட மாருதி ராவ்
தற்கொலை செய்துகொண்ட மாருதி ராவ்

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவலர்கள், மாருதி ராவ்வின் உடலைப் பரிசோதித்து அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அவரது உடல் ஓஸ்மனியா மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மாருதி ராவ் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் துணை கமிஷனர் வேணு கோபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு ஹோட்டல் அறையை புக் செய்த மாருதி ராவ் இன்று காலை உயிரிழந்துள்ளார். அவர் ஹைதராபாத் வந்த காரணம் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், தற்கொலை செய்துகொள்வதற்காகவே இங்கு வந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு