தெலங்கானா: ரூ.100 கோடி சொத்துப் பிரச்னை; முதல்வரின் உறவினர்கள் கடத்தல்! - முன்னாள் அமைச்சரின் செயலா?

ஹைதராபாத்தில் ரூ.100 கோடி சொத்துப் பிரச்னையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் நெருங்கிய உறவினர்கள் கடத்தப்பட்டனர். புகாரளிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர்களை போலீஸார் மீட்டிருக்கிறார்கள்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் நெருங்கிய உறவினர் பிரவீன் ராவ். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரரான பிரவீன், செகந்தரபாத்தின் பாவென்பள்ளி பகுதியிலுள்ள மனோவிகாஸ் நகரில், தனது சகோதரர்களான சுனில், நவீன் ஆகியோருடன் வசித்துவருகிறார்.

இவர்களது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) இரவு 7:20 மணியளவில் மூன்று கார்களில் எட்டுப் பேர் நுழைந்திருக்கிறார்கள். தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்ட அந்தக் கும்பல், சகோதரர்கள் மூவரிடமும் விசாரணை நடத்தியிருக்கிறது.
அவர்களின் செல்போன்கள், லேப்டாப்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்த எட்டுப் பேர் கும்பல், சொத்து விவகாரங்கள் குறித்தும் துருவித் துருவி விசாரித்ததாகத் தெரிகிறது. பின்னர், அவர்கள் மூவரையும் தங்கள் கார்களில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க முயன்ற வீட்டின் காவலாளியையும் அவர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இது குறித்து உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க போலீஸார், உடனடியாகத் தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், சகோதரர்கள் மூவரையும் விகாராபாத் பகுதியிலிருந்து பத்திரமாக மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட எட்டுப் பேரும் தெலங்கானா போலீஸ் கஸ்டடியில் இருக்கிறார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஹைதராபாத்தின் ஹஃபீஸ்பேட் பகுதியில் இருக்கும் ரூ.100 கோடி மதிப்பிலான இடப் பிரச்னை காரணமாக கடத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. அதேபோல், ஆந்திர மாநில முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரான பூமா அகிலப்பிரியாவின் கணவரான பார்கவா ராம், அவருடைய சகோதரர் சந்திரஹாஸ் ஆகியோர் இந்தக் கடத்தலின் பின்னணியில் இருப்பதாக பிரவீனின் உறவினர்கள் போலீஸில் தெரிவித்திருக்கிறார்கள். கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனங்கள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.