Published:Updated:

ஃப்ரீஸர் பாக்ஸில் மாணவி உடல்; தந்தையை பூட்ஸ்காலால் உதைத்த போலீஸ்!- தெலங்கானாவில் அதிர்ச்சி #Video

பூட்ஸ்காலால் உதைத்த போலீஸ்
பூட்ஸ்காலால் உதைத்த போலீஸ்

`இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன் தங்களிடம் போனில் பேசிய மகள், காய்ச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறினார். அவள் பேசி முடித்த சில மணி நேரங்களில் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு போன் செய்து அவள் தற்கொலை செய்துவிட்டாள் என்கின்றனர்'

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் வெலிமெலாவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயின்றுவந்த 17 வயது மாணவி ஒருவர் சமீபத்தில் விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். கல்லூரி நிர்வாகம் இவரது மரணத்தைத் தற்கொலை என்று கூறியது. ஆனால், இதை மறுத்த பெற்றோர்களோ, கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியம்தான் தங்கள் மகள் உயிரிழந்ததுக்குக் காரணம் என்று புகார் கூறியுள்ளனர்.

``இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன் தங்களிடம் போனில் பேசிய மகள், காய்ச்சல் அதிகமாக இருப்பதாகக் கூறினார். அவள் பேசி முடித்த சில மணி நேரங்களில் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு போன் செய்து அவள் தற்கொலை செய்துவிட்டாள் என்கின்றனர். கடந்த சில நாள்களாக தங்கள் மகள் மன உளைச்சலால் அவதிப்பட்டுவந்தார் என்பதால் அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது" என்று போர்க்கொடி தூக்கினர் அவரது பெற்றோர்கள்.

பூட்ஸ்காலால் உதைத்த போலீஸ்
பூட்ஸ்காலால் உதைத்த போலீஸ்

இதற்கிடையே, மாணவி இறந்ததை அடுத்து அவரது உடலை குளிரூட்டும் பெட்டியில் வைத்து விடுதி அருகே வைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். போலீஸிடம் ஒப்படைப்பதற்காக வைத்திருந்த நிலையில் மாணவியின் பெற்றோர்கள் இறப்புக்கு நியாயம் கோரி அவரது உடலை போலீஸிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்து வந்தனர். மாணவியின் சடலத்துடன் அங்கேயே போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸார் மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை அதி வேகமாகச் சாலையில் தள்ளிச்சென்றனர். பெட்டியைத் தள்ளிச்செல்லும்போதும் அழுதுகொண்டே போலீஸைத் தடுக்க முற்பட்டார் மாணவியின் தந்தை.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கிறார். மகள் இறந்த துக்கத்திலிருந்த தந்தையை போலீஸ் எட்டி உதைக்கும் காட்சியை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்துப் பதிவிட அது வேகமாக பரவ, கண்டனத்தை ஏற்படுத்தியது. மனதை உருக்கும் இந்தச் சம்பவத்தைப் பார்த்த நெட்டிசன்கள் போலீஸின் செயலுக்கு எதிராகப் பொங்கிவிட்டனர். தெலங்கானா போலீஸ் உயரதிகாரிகள், முதல்வர், அமைச்சர்கள் என அனைவரையும் டேக் செய்து மோசமான செயலில் ஈடுபட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

பூட்ஸ்காலால் உதைத்த போலீஸ்
பூட்ஸ்காலால் உதைத்த போலீஸ்

இதையடுத்து தற்போது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவியின் தந்தையைத் தாக்கிய போலீஸ் அதிகாரி தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள தெலங்கானா போலீஸ் டிஜிபி, ``இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்குமாறு சங்கரெட்டி மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு