தெலங்கானா தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக (ஏ.எஸ்.ஓ) பணியாற்றிவரும் ஒருவர், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்திருக்கிறார். ஆனால், தொடர்ந்து பங்குச் சந்தையில் சரிவு ஏற்படவே, அவருக்கு ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, நஷ்டத்திலிருந்து மீள்வதற்காகவும், அதனால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காகவும், கடந்த ஓராண்டில் அவர் தனது பெயரில் போடப்பட்ட ரூ.7.4 கோடி மதிப்புள்ள 25 இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் தொகையைப் பெறுவதெனத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக, தான் மரணமடைந்துவிட்டதாக ஏமாற்றிப் பணத்தைப் பெற்றுவிட முடிவுசெய்திருக்கிறார்.

அதன்படி, ஜனவரி 8-ம் தேதி, அவரின் உறவினர் ஒருவருடன் சேர்ந்து நிஜாமாபாத் ரயில் நிலையத்துக்கு அருகே சென்ற அந்த நபர், அங்கிருந்து ஒருவரை அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர், அந்த நபருக்கு மொட்டையடித்த இருவரும், அவரின் ஆடையைக் களைந்து, அரசு அதிகாரியின் ஆடையை அணியச் செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அவரை உட்காருமாறு வற்புறுத்தியிருக்கின்றனர். அதற்கு அந்த நபர் மறுக்கவே, இருவரும் கோடரியால் தலையில் தாக்கி மயக்கமடையச் செய்து, காரைப் பூட்டி, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியிருக்கின்றனர்.
அதையடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றிருக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினருக்கு, எரிந்த நிலையில் கிடந்த அந்த காரிலிருந்து, அரசாங்க அலுவலரின் அடையாள அட்டைகள் கிடைத்திருக்கின்றன. அதன் மூலம், இறந்தது அரசு அலுவலர்தான் என காவல்துறையினர் தெரிவித்தனர். இருப்பினும், சந்தேகம் இருந்ததால் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

விசாரணையில், அரசு அலுவலர் உயிருடன் இருப்பதும், இன்ஷூரன்ஸ் தொகைக்காக இந்த நாடகத்தை நடத்தியதும் தெரியவந்தது. அதையடுத்து, அரசு அலுவலர், அவரின் மனைவி, உறவினர்கள் இருவரைக் கைதுசெய்த போலீஸார், அனைவரையும் சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.