Election bannerElection banner
Published:Updated:

நெல்லை: கோயில் பூசாரி வெட்டிக் கொலை! - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கொலைசெய்யப்பட்ட சிதம்பரம்
கொலைசெய்யப்பட்ட சிதம்பரம்

நெல்லையில் சுடலை மாடசாமி கோயிலின் தலைமைப் பூசாரியாக இருந்த சிதம்பரம் என்ற துரை என்பவரை முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

நெல்லையை அடுத்த சீவலப்பேரி பகுதியில் பிரசித்திபெற்ற சுடலை மாடசாமி கோயில் இருக்கிறது. இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது. அத்துடன், கோயில் வளாகத்தில் சில கடைகளைக் கட்டி வாடகைக்குவிடுவதற்கு கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

நெல்லை: வெடிகுண்டு வீசி, கழுத்தை அறுத்து இரு பெண்கள் கொடூரக் கொலை! - உறையவைத்த பழிக்குப் பழி சம்பவம்

அதன்படி கடைகள் கட்டப்பட்டு, அவற்றை வாடகைக்குவிடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், கோயிலின் பரம்பரை அறங்காவலரும் தலைமைப் பூசாரியுமான சிதம்பரம் என்ற துரை தரப்பினருடன் மற்றொரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

கடையை யார் நிர்வகிப்பது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதால், கடையைத் திறக்காமல் மூடிவைத்துள்ளனர். ஆனாலும், இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்துவந்திருக்கிறது. இந்தநிலையில், கோயில் பூசாரியான சிதம்பரம் தன் உறவினரான நடராஜ பெருமாள் என்பவருடன் சேர்ந்து கோயில் பூஜைகளை முடித்திருக்கிறார்.

கொலை நடந்த இடம்
கொலை நடந்த இடம்

இருவரும் சேர்ந்து பரிகார பூஜைகளை முடித்த பின்னர் கோயிலின் முன்பாக நின்று பேசிக்கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களைச் சூழ்ந்து அரிவாளால் வெட்டியது. அதனால் அச்சமடைந்த சிதம்பரம் அங்கிருந்து தப்பியோடினார். ஆனால் அவரை விரட்டிச் சென்ற கும்பல் அவரை வெட்டிச் சாய்த்தது. அதைத் தடுக்க முயன்ற நடராஜ பெருமாளுக்கும் பலத்த வெட்டு விழுந்தது.

இந்தச் சம்பவத்தில், சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய உறவினரான நடராஜ பெருமாள், உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். உயிரிழந்த சிதம்பரத்தின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலையானவரின் உறவினர்கள் போராட்டம்
கொலையானவரின் உறவினர்கள் போராட்டம்

சிதம்பரத்தைக் கொலை செய்த கும்பலைக் கைதுசெய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும், இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிவருகின்றனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு