செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த காயிரம்பேடு, மகாநதி நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியிலுள்ள வீட்டில் கடந்த 10.12.2019-ம் தேதி முதல் வாடகைக்குக் குடியிருந்துவருகிறேன். இந்த வீடு திம்மாவரம் வசந்தம் நகரில் வசிக்கும் கனகசபாபதி என்பவருக்குச் சொந்தமானது. இந்த வீட்டுக்கு மாத வாடகை 6,000 ரூபாய்.
இந்த நிலையில் கனகசபாபதியும், அவரின் மனைவி கீதாவும் யாருக்கும் தெரியாமல் நான் குடியிருக்கும் வீட்டின் படுக்கை அறை அருகே மறைந்து நின்று ஓட்டுக் கேட்பது, வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பது போன்ற தொந்தரவுகளைச் செய்துவந்தனர். இது குறித்து கடந்த 20.12.2021-ம் தேதி வீட்டின் உரிமையாளர் கனகசபாதி, கீதா ஆகியோரிடம் கேட்டதற்கு அவர்கள் இருவரும் என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் கொலை செய்வதாகவும் மிரட்டினர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``புகாரளித்த ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இவரின் வீட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததால் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருக்கிறார். அப்போது கனகசபாபதியும், அவரின் மனைவி கீதாவும் வீட்டை நோட்டமிட்டது சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதற்கு ஆதாரமாக சிசிடிவி கேமரா பதிவுகளை ராதாகிருஷ்ணன் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். ராதாகிருஷ்ணன் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் கனகசபாபதியும், கீதாவும் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
``ராதாகிருஷ்ணனை வீட்டை காலி செய்யும்படி கூறினோம். ஆனால் அவர் காலி செய்யாமல் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அவர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி-யில் கனகசபாபதியும் கீதாவும் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியிருக்கும். அன்றைய தினம் வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் சுவர் ஏறி உள்ளே சென்றோம்” எனக் குற்றம் சாட்டப்பட்ட கனகசபாபதி, கீதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் போலீஸிடம் விளக்கம் அளித்துள்ளனர். அதனால் இந்தப் புகாரை எப்படி சட்டப்படி அணுகலாம் என சட்ட நிபுணர்களுடன் போலீஸார் ஆலோசித்துவருகின்றனர்.