Published:Updated:

சுவரில் ரத்தக் கையெழுத்து; மனைவி, 2 மகன்களுக்கு விஷம்!- விபரீத முடிவெடுத்த தென்காசி ஆட்டோ டிரைவர்

மகளிர் சுய உதவிக்குழு, மைக்ரோ கடன் திட்டம் போன்றவற்றில் அதிக கடன் பெற்றதால் மனம் உடைந்த ஆட்டோ டிரைவர், தன் குடும்பத்துடன் விபரீத முடிவை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுடன் கந்தசாமி(பழைய படம்)
குழந்தைகளுடன் கந்தசாமி(பழைய படம்)

தென்காசி மாவட்டம் புளியரை அருகே உள்ள கட்டளைக் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், கந்தசாமி (37). ஆட்டோ ஓட்டும் பணியைச் செய்து வந்தார். அவரது மனைவி இசக்கியம்மாள் என்ற இந்துமதி. இந்தத் தம்பதிக்கு சின்னமுத்திரன் என்ற ஐந்து வயது மகனும் இரண்டு வயதில் ஏகாந்தமூர்த்தி என்ற மகனும் உள்ளனர். 

உயிரிழந்த கந்தசாமி
உயிரிழந்த கந்தசாமி

ஆட்டோ டிரைவரான கந்தசாமி உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி சிரமத்துக்குள்ளாகி வந்தார். அதனால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியிருக்கிறார். அவரது மனைவி மகளிர் சுய உதவிக்குழுவில் இருந்ததால் குழுவிலும் கடன் வாங்கியிருக்கிறார்.

Vikatan

தென்காசி பகுதியில் செயல்பட்டு வரும் ஓர் அமைப்பின் மைக்ரோ ஃபைனான்ஸ் திட்டத்திலும் கடன் பெற்றுள்ளார். அவற்றைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. 

உயிரிழந்த இசக்கியம்மாள்
உயிரிழந்த இசக்கியம்மாள்

இந்தச் சூழலில், மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனைத் திருப்பிக் கேட்டு நேற்று மாலை அந்தக் குழுவினர் இசக்கியம்மாளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். நீண்ட காலமாகக் கடனைத் திருப்பிக்கொடுக்காததால் மகளிர் சுய உதவிக்குழுவினர் கடுமையாகப் பேசியதாகவும் தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

Vikatan

கந்தசாமியும் அவரது மனைவி இசக்கியம்மாளும் நேற்று நீண்டநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வறுமை காரணமாக தங்கள் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என இருவரும் வருந்தியிருக்கிறார்கள். இதையடுத்து, இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதற்கு முன்பாக குழந்தைகளைக் கொல்லவும் துணிந்திருக்கிறார்கள்.

``மனுவே போதும்; தற்கொலை முயற்சிகள் வேண்டாம்!” - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்

முதலில், இரு மகன்களுக்கும் விஷம் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் தாங்களும் விஷம் அருந்தியிருக்கிறார்கள். குழந்தைகள் பிழைத்துக்கொள்ளக் கூடாது என நினைத்து கழுத்தை நெரித்துக் கொல்லவும் முயற்சி செய்திருக்கிறார்கள்.

விஷம் அருந்தியதில் கந்தசாமி, இசக்கியம்மாள், மூத்த மகன் சின்னமுத்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்தபோது இரண்டு வயதுச் சிறுவனான ஏகாந்தமூர்த்தி மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததால் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். 

சுவரில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது
சுவரில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது

வறுமை, நெரிக்கும் கடன் ஆகியவற்றின் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.  தற்கொலை செய்து கொண்ட கந்தசாமி தன் வீட்டின் சுவரில், ’எங்கள் சாவுக்கு என் வறுமை மட்டும் காரணம்’ என்று ரத்தத்தால் எழுதியிருக்கிறார்.

வறுமை காரணமாக ஒரே குடும்பத்தினர் எடுத்த இந்த விபரீத முடிவு தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.