Published:Updated:

கோவை: கார் வெடித்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள்; விபத்தா, சதிச்செயலா? - போலீஸ் தீவிர விசாரணை!

போலீஸ் தீவிர விசாரணை

வெடித்து விபத்துக்குள்ளான காரில் ஆணி, பால்ரஸ் குண்டுகள் இருந்ததை தடயவியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். காரில் இருந்த ஆணின் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் உள்ளதால் அவர் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை: கார் வெடித்த இடத்தில் பால்ரஸ் குண்டுகள், ஆணிகள்; விபத்தா, சதிச்செயலா? - போலீஸ் தீவிர விசாரணை!

வெடித்து விபத்துக்குள்ளான காரில் ஆணி, பால்ரஸ் குண்டுகள் இருந்ததை தடயவியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். காரில் இருந்த ஆணின் உடல் முற்றிலும் எரிந்த நிலையில் உள்ளதால் அவர் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Published:Updated:
போலீஸ் தீவிர விசாரணை

கோவை மாநகரில் தீபாவளிக் கொண்டாட்டத்தின் நடுவே புயலைக் கிளப்பியிருக்கிறது உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் வாசல் முன்பு இன்று அதிகாலை காரில் நிகழ்ந்த எரிவாயு சிலிண்டர் வெடி விபத்து.

50-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் அதிகமுள்ள அந்த வீதியில் தீபாவளியையொட்டி, சனிக்கிழமை நள்ளிரவு முதல் வியபாரம் நடைபெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4:45 மணி அளவில், கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு பெரும் வெடிச் சத்தம் கேட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு வந்து பார்த்துள்ளனர்.

கார்
கார்

அப்போது, சமையலுக்குப் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் வெடித்து, கார் ஒன்று இரண்டாகப் பிளந்து பற்றி எரிந்துள்ளது. காருக்கு அருகில் ஆண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்துள்ளார்.

இத்தகவல் அறிந்து வந்த உக்கடம் காவல், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கருகி இறந்த நிலையில் கிடந்தவரின் சடலத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிலிண்டர்கள்
சிலிண்டர்கள்

அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட தடயவியல் துறையினர் காரிலிருந்து 1.5 இன்ச் ஆணிகள் மற்றும் பால்ரஸ் குண்டுகளைக் கண்டறிந்துள்ளனர். ஆணி, பால்ரஸ் வேறு பணிக்காக கொண்டு செல்லப்பட்டதா அல்லது வெடி விபத்தை நிகழ்த்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டவையா என்பதை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

ஆணிகள்
ஆணிகள்

வெடி விபத்துக்குள்ளான மாருதி 800 காரை பொள்ளாச்சியை அடுத்த கஞ்சம்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் வைத்திருந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த காரை மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த ராஜாவுக்கு விற்பனை செய்துள்ளார். ராஜா, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த வேலு என்பவருக்கு விற்றுள்ளார்.

இதையடுத்து, கார் 6 பேரிடம் கை மாறியுள்ளது. ஆனால், பிரபாகரனைத் தவிர காரை வாங்கியவர்கள் யாரும் காரின் உரிமையாளராக பெயர் மாற்றம் செய்யவில்லை. இதனால் கார் கடைசியாக யாரிடம் இருந்தது என்பதை கண்டுபிடிப்பதில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோயில்
கோயில்

``இறந்தவர் செல்போன் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதால் அந்தப் பகுதியில் அதிகாலையில் ஆக்டிவாக இருந்த செல்போன் எண்களையும், சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறோம். முதற்கட்டமாக இறந்தவர் முஸ்லிம் என்பது தெரியவந்திருக்கிறது" என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஜிபி
டிஜிபி

தொடக்கத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தை கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி தாமரைக் கண்ணன் ஆய்வு மேற்கொண்ட நிலையில், இந்தச் சம்பவத்தின் நிலைமை அறிந்து சென்னையிலிருந்து டி.ஜி.பி சைலேந்திர பாபு விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கோவைக்கு வந்தார். வெடி விபத்து நிகழ்ந்த பகுதியை ஆய்வு செய்தார்.

சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு

இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம், ``இந்தச்சம்பவம் தொடர்பாக கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தடவியல் துறை இயக்குநர் தலைமையிலான குழுவினர் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மற்றும் கமாண்டோ வெடி குண்டு செயலிழப்பு நிபுணர்கள் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்த இரண்டு எரிவாயு சிலிண்டர்களில் ஒன்று வெடித்துள்ளது. காரை யார் பயன்படுத்தி வந்தனர் என்பதையும், உயிரிழந்தவர் யார் என்பதையும் விசாரித்து வருகிறோம். விபத்தா அல்லது சதிச்செயலா என்பது குறித்து அறிய அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

பிரசித்தி பெற்ற உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு மட்டுமின்றி, தீபாவளியையொட்டி, இப்பகுதியில் துணி எடுப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மசூதிகள் முன்பு போலீஸார் பாதுகாப்புப்பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.