Published:Updated:

``பப்ளிக் எக்ஸாம்ல ஃபெயில்!’’- ஆசிரியரின் மிரட்டலால் உசிலம்பட்டி மாணவர் தற்கொலை!

`உன் வீட்டுக்கு போன் பண்ணி, நீ பார்த்து எழுதித்தான் மார்க் வாங்குறன்னு சொல்லிடுவேன். பப்ளிக் எக்ஸாம் பேப்பர் எந்த ஊருக்குப் போனாலும், நீ ஃபெயில் ஆகுற மாதிரி செஞ்சிடுவேன்'

மாணவரின் கடிதம்
மாணவரின் கடிதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, ஆசிரியர் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த சிங்கம்-அமுதா தம்பதியரின் மகன், பாலாஜி. உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார். அதே பள்ளியின் ஆசிரியர் ரவி, தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வந்த நிலையில், மாணவன் பாலாஜியைத் தவிர அனைத்து மாணவர்களும் ரவியின் கணக்கு டியூஷனுக்குச் சென்றுள்ளார்கள்.

ஆசிரியர் ரவி
ஆசிரியர் ரவி

பாலாஜி, ஆரம்பத்தில் சிறிது காலம் ரவியின் டியூஷனுக்குச் சென்றுள்ளார். பின்பு, அதிக தொலைவில் இருப்பதால் அருகில் உள்ள ஒரு டியூஷனில் பயின்றுவந்த நிலையில், ரவி தொடர்ந்து பாலாஜியைத் தகாத வார்த்தையால் திட்டிவந்துள்ளார். பாலாஜி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தால், விடைத்தாளை வாங்கி ``நீ இவ்வளவு மார்க் எடுக்குறதுக்கு தகுதி இல்லையே” என்று கூறி மதிப்பெண்ணைக் குறைத்துப் போடுவார் என பாலாஜியின் தாய் குற்றம் சாட்டினார்.

பாலாஜியின் தந்தை சிங்கம் கூறுகையில், "என் மகன் சில மாதங்களுக்கு முன்பு என்னிடம் ' நான் ரவி சாரின் டியூஷனில் சேராததால் என்னைத் திட்டுகிறார் என்றான். நான் ஆசிரியர் ரவியிடம் பேசினேன். அப்போது அவர், 'உங்கள் மகன் மட்டும்தான் தேர்வில் பார்த்து எழுதுகிறான். அதனால்தான் திட்டினேன்' என்றார். என் மகனின் பேச்சை சிறிதும் பொருட்படுத்தாமல், ரவியின் சொல்கேட்டு என் மகனைத் திட்டினேன். அதன்பின் அவன் ஆசிரியர் ரவி என்னைத் திட்டுகிறார் என சொல்லவில்லை. இறந்த பின்புதான், ஆசிரியர் ரவி என்னை பாரபட்சமாக நடத்தினார் என்பது தெரிந்தது.

மாணவரின் பெற்றோர்கள்
மாணவரின் பெற்றோர்கள்

ஒரு முறை 'உன் வீட்டுக்கு போன் பண்ணி, நீ பார்த்து எழுதித்தான் மார்க் வாங்குறன்னு சொல்லிடுவேன். பப்ளிக் எக்ஸாம் பேப்பர் எந்த ஊருக்குப் போனாலும், நீ ஃபெயில் ஆகுற மாதிரி செஞ்சிடுவேன்' என மிரட்டியிருக்கிறார். அதனால், என் மகன் பயந்துபோய் அவர் காலில் விழுந்ததாக அவனுடன் படிக்கும் மாணவர்கள், இப்போது சொல்கிறார்கள். நான் அவனை முன்பே புரிந்துவைத்திருந்தால், படிக்கக்கூட வேண்டாம் என சொல்லியிருப்பேன்'' எனக் கண்ணீர் மல்க கூறினார்.

இதுதொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் பாலாஜியின் தந்தை புகார் செய்துள்ளார். அதை விசாரித்துவரும் இன்ஸ்பெக்டர் சார்லஸ், ''பாலாஜியை ஆசிரியர் ரவி துன்புறுத்தியது உண்மைதான். அனைத்து மாணவர்களுமே பார்த்துதான் எழுதுவார்களாம். ஆனால், பாலாஜியை மட்டுமே தகாத வார்த்தைகளை உபயோகித்து ரவி திட்டியுள்ளார். மாணவன் இறப்பதற்கு முன் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அது, அவன் கைப்பட எழுதிய கடிதம்தான். 15 நாள்களுக்கு முன்பே எழுதிவிட்டான். எப்போதும் சக மாணவர்களிடம் தற்கொலை செய்வது எப்படி என்று கேட்டுக்கொண்டே இருப்பானாம். பாலாஜி ஏற்கெனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணமான ரவியின் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார்.

மாணவரின் கடிதம்
மாணவரின் கடிதம்

பாலாஜி படித்த பள்ளி நிர்வாகத்திடம் பேசியபோது, ''பாலாஜி நன்றாக படிக்கக்கூடிய மாணவன்தான். அவனைப் பற்றி இதுவரை எந்தப் புகாரும் வந்ததில்லை. பாலாஜி இறந்ததிலிருந்து, கடந்த மூன்று நாள்களாக ஆசிரியர் ரவி பள்ளிக்கு வரவில்லை'' என்றனர்.

பாலாஜி எழுதியிருந்த கடிதத்தில், தனது ஆசிரியர் ஒருமையில் பேசியதை சுட்டிக் காட்டியுள்ளான். பாலாஜி யாரையும் மரியாதை குறைவாகப் பேசக்கூடிய பையன் இல்லை என்று சுற்று வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட பையனே ஒருமையில் எழுதி இருக்கிறான் என்றால், அவன் மனதில் எவ்வளவு வேதனைகள் நிறைந்திருக்கும். மாணவன் பாலாஜி குறிப்பிட்டிருந்த ஒரு வரி, "என் ரத்தக் கண்ணீருக்குக் காரணமான ரவிக்கு தண்டனை தரவேண்டும்."

`கணித ஆசிரியரின் டியூஷன் தொந்தரவு?' - விபரீத முடிவெடுத்த உசிலை பள்ளி மாணவன்