Published:Updated:

`இரண்டே நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது!'- பாம்பு களேபரத்தில் இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி

இரண்டாவது முறையும் பாம்பைப் பார்த்த அவரது சகோதரி மீண்டும் மாலிக்குக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார்.

மாலிக்
மாலிக்

மகாராஷ்டிர மாநிலம் தானேவை அடுத்த டோங்கிரி பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது இளைஞர் குர்பான் மாலிக். அந்தப் பகுதியில் துணிக்கடை நடத்திவரும் இவர், 35 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மோசடியால் இழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை மாலிக் துணிக்கடையில் இருந்தபோது அவரது சகோதரி போன் செய்து, `வீட்டு கிச்சனில் பாம்பு இருக்கிறது' என்று கூறியுள்ளார். உடனே அங்கு விரைந்த மாலிக் பாம்பைத் தேடியுள்ளார். ஆனால் பாம்பு கண்ணில்படாததை அடுத்து மீண்டும் கடைக்குத் திரும்பியுள்ளார்.

பாம்பு
பாம்பு
representational image

இரண்டாவது முறையும் பாம்பைப் பார்த்த அவரது சகோதரி மீண்டும் மாலிக்குக்கு போன் செய்து விஷயத்தைக் கூறியுள்ளார். அப்போதும் வீட்டுக்குச் சென்ற மாலிக் அரைமணி நேரமாகத் தேடியும் பாம்பு கண்ணில் படவில்லை என்றதும் மார்க்கெட்டுக்குத் திரும்பியிருக்கிறார். இருந்தாலும் பாம்பால் பயந்த அவரது சகோதரி பாம்பு பிடிப்பவர்கள் யாரையாவது கூப்பிடுமாறு சொல்ல ஆன்லைனில் பாம்பு பிடிப்பவர்களைத் தேடியுள்ளார் மாலிக். அதில் ஒரு நம்பருக்கு போன் செய்து விவரத்தைக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள மாலிக், ``ஆன்லைனில் தேடி ஒரு நம்பருக்கு போன் செய்தேன். அவர் இன்னும் சில நிமிடங்களில் ஒரு நபர் உங்களைத் தொடர்புகொள்வார் என்று கூறிவிட்டு வைத்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு நபர் போன் செய்து, `பாம்பு பிடிக்கத் தயார்' என்று கூறிவிட்டு `ரூ.10 ஆன்லைனில் கட்டுங்கள்' என்றார். `கொஞ்சம் எமெர்ஜென்சி.. நீங்கள் வந்து பாம்பைப் பிடியுங்கள், பணம் தருகிறேன்' என்று கூறினேன். ஆனால் அவர், `முதலில் பணம் கட்டினால்தான் வருவேன்' என்றார். அதனால் அவர் கூறியதற்கு ஒப்புக்கொண்டு அவர் அனுப்பிய லிங்கில் என் அக்கவுன்ட் விவரங்களைப் பதிந்துகொண்டிருந்தேன்" என்றார்.

CHEAT
CHEAT
representational image

ஆன்லைனில் அக்கவுன்ட் விவரங்களைக் கொடுத்த அடுத்த இரண்டு மணிநேரத்தில் அதிலிருந்து ரூ.35,700 பணம் எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. முதலில் ரூ.5,000, அடுத்து ரூ.30,000, அடுத்து ரூ.700 என இரண்டே நிமிடத்தில் ரூ.35,700 பணம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்துவந்த மெசேஜ்களால் பதறிய மாலிக் போகிவாடா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

``கணக்கு விவரங்களைக் கொடுத்த அடுத்த நிமிடத்தில் முதலில் ரூ.5,000, பின்னர் ரூ.30,000, ரூ.700 பணம் அக்கவுன்டிலிருந்து எடுக்கப்பட்டது. நான் யோசிக்கக்கூட நேரம் கிடைக்கவில்லை. இரண்டே நிமிடங்களில் எல்லாம் முடிந்துவிட்டது" என்று அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார் மாலிக். இவரின் புகாரை அடுத்து போலீஸும் பெயர் தெரியாத நபர்மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.