(குறிப்பு: கோவையில் நடந்த கொள்ளைச் சம்பவங்களைப் பற்றியும், அதன் பின்னணி மற்றும் அதைச் தேடிச் சென்ற போலீஸ் டீம் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் விவரிக்கிறது இந்தத் தொடர். இந்த அத்தியாயத்தில் வரும் போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் கற்பனை அல்ல.)

‘‘அன்றைய தினம் ஆசிம்கான்தான் ‘உஸ்தாத்’. அவனைப் பிடித்தால்தான் பொருள் கிடைக்கும்’’ - அஸ்லாம்கான் சொன்னதைக் கேட்டு, போலீஸ் டீம் அதிர்ந்துபோனது. ‘அஸ்லாம்கானைப் பிடிப்பதற்குள்ளாகவே விழிபிதுங்கிவிட்டது. இனி எங்கே போய் ஆசிம்கானைப் பிடிப்பது?’ என்று பதற்றமடைந்தார்கள். அதற்கேற்றாற்போல், ‘‘ஆசிம்கான் எங்கே?’’ என்ற கேள்விக்கும் அஸ்லாம்கானிடமிருந்து பதில் இல்லை. “நிஜமாகவே எனக்குத் தெரியாது சார். கொள்ளைக்குப் பிறகு அந்த வழக்கு இழுத்து மூடப்படும் அல்லது கைவிடப்படும் வரை கொள்ளையடித்த குழுவினர் எங்கள் இருப்பிடங்களைப் பகிர்ந்துகொள்ள மாட்டோம். இதுவும் எங்கள் பாலிசிகளில் ஒன்று” என்று திணறடித்தான் அஸ்லாம்கான்.

இனி உத்தரப்பிரதேசத்தில் இருந்து காலத்தைக் கடத்துவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வருகிறது போலீஸ் டீம். பிடிபட்டிருக்கும் அஸ்லாம்கான்மீது முறைப்படி வழக்கு பதிவுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். அஸ்லாம்கான், கோவைக்கு அழைத்துவரப்படுகிறான். ‘போலீஸார் அவனை கஸ்டடியில் எடுத்து விசாரித்து, நகைகளை மீட்பார்கள்’ என ராஜன் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால், நீதிமன்றக் காவலில் அஸ்லாம்கானை ஒப்படைத்து சிறையில் அடைத்த போலீஸார், அவனை விசாரிப்பதற்காக கஸ்டடி எதுவும் கேட்கவில்லை. ராஜன் அதிர்ச்சியடைந்தார்.

‘‘குற்றவாளியைப் பிடிச்சாச்சு. இப்ப சந்தோஷமா?’’ - பெருமிதமாகச் சொல்கிறார் தமிழக டீம் அதிகாரி ஒருவர்.

‘‘ரொம்ப நன்றிங்க சார்... ஆனா, நகையை இன்னும் மீட்கலையே?’’ என்கிறார் ராஜன்.

‘‘அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன். பார்த்துக்கலாம் விடுங்க’’ என்றபடி நகர்கிறார் அந்த அதிகாரி.

நாள்கள் கழிந்தனவே தவிர, வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. மீண்டும் உத்தரப் பிரதேசத்தை நோக்கிச் செல்வதைத் தவிர ராஜனுக்கு வேறு வழி புலப்படவில்லை. புலந்த்சாஹர் செல்கிறார். இந்த முறை போலீஸ் அதிகாரிபோல் செல்லாமல், தங்கநகை வியாபாரியாகவே அடையாளப்படுத்திக் கொண்டு எஸ்.எஸ்.பி-யான முனிராஜைச் சந்திக்கிறார்.

‘‘கடந்த முறை நீங்க போலீஸ்னு சொல்லித்தானே இங்கே வந்தீங்க?’’ என்று முனிராஜ் கேட்க, அவரிடம் தமிழ்நாடு போலீஸ் டீம் சொன்னதால்தான் அப்படி வந்ததாகக் குறிப்பிட்ட ராஜன், ஆரம்பத்திலிருந்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்தார். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு முனிராஜ் சொல்கிறார்... ‘‘எல்லாம் சரிங்க. ஆனா, இதெல்லாம் உங்க போலீஸ்தானே பண்ணணும்!’’

ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார் ராஜன். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு, ‘‘ஒரே நாடு... ஒரே வரின்னு சொல்ற காலகட்டத்துல தமிழ்நாடு போலீஸ், உ.பி போலீஸ்னு பிரிச்சுப் பேசுறீங்களே. அரசு ஊழியர்கள் எல்லோரும் மக்களோட வரிப்பணத்துலதானே சம்பளம் வாங்குறீங்க. என் வரிப்பணத்துல நீங்களும்கூட பயனடைஞ்சிருக்கலாம்’’ என்று உணர்ச்சிவேகத்தில் பேசுகிறார் ராஜன். தான் பேசுவது சரியா, தவறா... அது பலன் தருமா என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. மனதில் பட்டதைப் படபடவெனப் பேசி முடிக்கிறார்.

ராஜனின் பேச்சை முனிராஜ் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை அவரின் முகமே காட்டியது. அவரின் பேச்சை மெல்லிய புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த முனிராஜ், ‘‘நாளைக்கு மதியம் என் வீட்டுக்குச் சாப்பிட வாங்களேன்... இதுபத்தி நிதானமா பேசலாம்’’ என்று அழைப்புவிடுக்கிறார்.

அடுத்த நாள் முனிராஜ் வீட்டுக்குச் சென்ற ராஜனுக்கு விருந்தளித்து உபசரித்த முனிராஜ், ‘‘உங்க முயற்சியைப் பாராட்டுறேன். உங்க டீமோடு திரும்பவும் வாங்க. உங்க பொருள்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறையை யோசிக்கிறேன்’’ என்று ராஜனுக்கு நம்பிக்கை கொடுத்து கோவைக்கு அனுப்பிவைக்கிறார்.

இந்த இடத்தில் முனிராஜைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டியைச் சேர்ந்தவர் முனிராஜ். அரசுப் பள்ளியில் படித்த இவர், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளநிலை விவசாயம் படித்தார். அடுத்து, ஹரியானாவில் முதுகலை விவசாயம் முடித்தார். சிவில் சர்வீஸில் ஆர்வம்காட்டிய அவருக்கு, 2009-ம் ஆண்டு ஐ.பி.எஸ் போஸ்டிங் கிடைத்தது. பத்து ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள். பத்து டிரான்ஸ்ஃபர்கள். ஓர் இடத்தில் அவர் அதிகபட்சமாகப் பணியாற்றியது ஒன்றரை ஆண்டுகள். குறைந்தபட்சம், 12 மணி நேரம்.

பா.ஜ.க ஆளும் உ.பி-யில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் மீதே எஃப்.ஐ.ஆர் பதிந்து கைது வாரன்ட் பிறப்பித்தவர். முனிராஜுக்குப் பயந்து தலைமறைவான எம்.எல்.ஏ, ஜாமீன் வாங்கிவிட்டுத்தான் ஊருக்குள் தலையைக் காட்டினார்.

உ.பி-யில், லோக்கல் தாதா முதல் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வரை பயப்படும் ஒரே போலீஸ் அதிகாரி இவர்தான். இந்து - முஸ்லிம் மோதல் பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்தியதால், இரண்டு தரப்பு மக்களாலும், ‘சிங்கம்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

உத்தரப்பிரதேசம், தமிழகத்தைப்போல் அல்ல. அங்கு க்ரைம் ரேட் சகட்டுமேனிக்கு எகிறியிருக்கும். துப்பாக்கிகள் சர்வசாதாரணமாகப் புழங்கும். அதிலும் புலந்த்சாஹர் மாவட்டம், அனைத்திலும் டாப். அப்படிப்பட்ட ஊருக்குச் சென்று எஸ்.எஸ்.பி-யாக கர்ஜித்துக்கொண்டிருக்கும் தமிழன்தான் இந்த முனிராஜ்.

இப்படிப்பட்ட துணிச்சலான ஓர் அதிகாரி தன் வழக்கில் நுழைந்ததால், மகிழ்ச்சியுடன் கோவை திரும்புகிறார் ராஜன்.

ஒரு சில தினங்களில் அஸ்லாம்கானின் தம்பிகள் பஞ்சாப்பில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. ‘அவர்களைப் பிடித்தால் ஏதாவது லீடு கிடைக்கும்’ என்ற நம்பிக்கையில் பஞ்சாப்பின் லூதியானாவுக்கு ராஜனும் தமிழக போலீஸாரும் செல்கின்றனர். அங்கு ஐ.பி.எஸ் அதிகாரி செழியனைச் சந்திக்கச் சொல்லி ஆலோசனை கொடுக்கிறார் முனிராஜ். மதுரையைச் சேர்ந்த செழியன், முனிராஜின் நண்பர். பஞ்சாப்பைக் கலக்கிக்கொண்டிருக்கும் பாண்டிய நாட்டுக்காரர்.

தமிழக டீம் சென்ற 24 மணி நேரத்தில், அஸ்லாம்கானின் தம்பிகளான இர்பான், ரிஸ்வான் ஆகியோர் கைதுசெய்யப்படுகின்றனர். ‘`அண்ணனும் நாங்களும் காலம்காலமாகத் திருடிக்கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக இதுதான் எங்கள் வேலை’’ என்று வாக்குமூலம் கொடுக்கிறார்கள் அவர்கள். அவர்களிடமிருந்து தென்னிந்திய நகைகள் சிலவற்றை பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றில், ராஜனின் கம்பெனி முத்திரை பதித்த சில நகைகளும் இருந்தன. ஆனால், அது மிகவும் சிறிய அளவுதான். இருப்பினும், குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்பதே பெரும்நம்பிக்கையைக் கொடுத்தது.

இர்பான், ரிஸ்வான் இருவரையும் கோவை அழைத்துவந்து சிறையில் அடைக்கின்றனர்.

ராஜன் செல்போனுக்கு ஓர் அழைப்பு வருகிறது.

‘‘சார்... நகைத்திருட்டு கேஸில் அலைந்துகொண்டிருக்கும் ராஜன் நீங்கதானே?’’

‘‘ஆமா...’’

‘‘என் பெயர் குமார். உங்களைப் பார்க்கணுமே. பக்கத்துலதான் இருக்கேன். உங்க ஆபீஸுக்கு வரட்டுமா?’’

‘‘தாராளமா வாங்க...’’

சற்று நேரத்தில் அந்த நபர் ராஜனின் அலுவலகத்தில் ஆஜர்.

‘‘சார், என் நகையும் திருடுபோயிருக்குது. அந்தக் குற்றவாளியும் உத்தரப்பிரதேசம்தான்.’’

‘‘எப்போ சார்?’’

‘‘2013-ம் வருஷம். 2½ கிலோ தங்கம் திருடிட்டாங்க. இப்போ வரை அவனுங்கள நெருங்கவும் முடியல... நகையை மீட்கவும் முடியல. அவனுங்கள இப்படியே விடக் கூடாது. அதான் உங்களைப் பார்க்க வந்தேன்.’’

‘‘முனிராஜ் சார் இருக்கார். பாத்துக்கலாம்’’ - குமாருக்கு நம்பிக்கை கொடுக்கிறார் ராஜன்.

அந்த நேரத்தில் ராஜனுக்கு மற்றோர் அழைப்பு வருகிறது. ‘முனிராஜ் சார் காலிங்’ என்கிறது டிஸ்ப்ளே. ‘கும்பிடப் போன தெய்வமே குறுக்கே வந்துவிட்டதே’ என்று சந்தோஷமாக அழைப்பை ஏற்கிறார் ராஜன். ஆர்வமுடன் குமாரின் விஷயத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.

‘‘ஸாரி ராஜன். என்னை டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டனர். லக்னோவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளேன். சாருடன் இருக்கும்போது, நான் என்னுடைய பர்சனல் செல்போனைப் பயன்படுத்த முடியாது. உங்களுடன் பேச முடியுமா என்றுகூட தெரியவில்லை. ஏதாவதென்றால் மெசேஜ் அனுப்புங்கள்’’ என்று சொல்லி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார் முனிராஜ்.

‘பாதிக் கிணறு தாண்டிய பிறகு, இப்படியாகி விட்டதே! இனி யாரைப் போய்ப் பார்ப்பது, குற்றவாளிகளை எப்படிப் பிடிப்பது, நகைகளை எப்போது மீட்பது?’ - ஏராளமான கேள்விகள் மனதைக் குடைய, உடைந்துபோகிறார் ராஜன்.

இன்னொரு பக்கம் தமிழகத்தில் இந்த வழக்கில் ஒத்துழைப்பு கொடுத்துவந்த ஓர் அதிகாரியும் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுகிறார். அனைத்துப் பக்கங்களிலும் கதவுகள் அடைக்கப்படவே, நொறுங்கிப்போகிறார் ராஜன்.

(வேட்டை தொடரும்)