(குறிப்பு: கோவையில் நடந்த கொள்ளைச்சம்பவங்களைப் பற்றியும், அதன் பின்னணி மற்றும் அதைத் தேடிச் சென்ற போலீஸ் டீம் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் விவரிக்கிறது இந்தத் தொடர். இந்த அத்தியாயத்தில் வரும் போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் கற்பனை அல்ல.)

‘‘எனக்கு உ.பி பரேலி மாவட்டத்துல எஸ்.எஸ்.பி போஸ்டிங் கிடைச்சிருச்சு. நான் உங்களுக்கு ஏதாவது பண்ணணுமா? கிளம்பி வாங்க’’ - ராஜனைத் தொடர்புகொண்ட முனிராஜ் இப்படிச் சொன்னதும் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார் ராஜன். ‘திருடுபோன நகைகளை மீட்டுவிடலாம்’ என்று ராஜனுக்கு நம்பிக்கை பிறந்தது.

ஆசீம்கானைப் பிடிப்பதற்காகப் புதிதாக அமைக்கப்பட்ட தமிழக போலீஸ் டீமுடன், ராஜனும் சோம்நாத் பாட்டீலும் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி சென்றடைந்தனர். அவர்கள் பரேலி சென்று இறங்கியபோது, அந்த மாவட்டமே உச்சகட்ட பரபரப்பில் இருந்தது. காரணம், ஆளும் பி.ஜே.பி எம்.எல்.ஏ ஒருவர்மீது வழக்குப்பதிவு செய்த முனிராஜ், அவருக்கு அரெஸ்ட் வாரன்ட் பிறப்பித்திருந்தார். எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் முனிராஜுக்கு எதிராக மாவட்டம் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே வன்முறையும் வெடித்துக்கொண்டிருந்தது.

‘‘நாம வந்த நேரமா இப்படி ஆகணும்? இப்ப என்ன பண்றது?’’ என்று குழப்பத்துடன் ராஜனைப் பார்த்தார் பாட்டீல். ‘‘வந்தது வீண்தானா?’’ - என்ற எண்ணம்தான் அனைவரின் மனதிலும் ஓடியது. அனைவரும் செய்வதறியாது திகைத்து போயினர்.

பரேலி எஸ்.எஸ்.பி அலுவலகம்...

ராஜன் மற்றும் தமிழக போலீஸாரைப் புன்சிரிப்புடன் வரவேற்றார் முனிராஜ்.

அனைவரையும் உற்றுநோக்கிய முனிராஜின் பார்வை, பாட்டீல் பக்கம் வந்து நின்றது. ‘‘இங்கே நடக்கிற பிரச்னையைப் பத்தி கவலைப்படாதீங்க... உங்களுக்கு நான் என்ன உதவி பண்ணணும்.... சொல்லுங்க’’ - நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார் முனிராஜ். இந்த வார்த்தைகளை முனிராஜ் சொல்லி முடித்த பின்னர்தான் அனைவரும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

‘‘சார்... அஸ்லாம்கான் சொன்ன அந்த ஆசீம்கான்...’’ என்று ராஜன் சொல்லத் துவங்கும்போதே, ‘‘வெயிட்... வெயிட். எல்லா தகவலும்தான் எனக்குத் தெரியுமே!’’ என்று இடைமறித்த முனிராஜ், ‘‘ஜாவீத்... இங்கே வாங்க’’ என்று இன்டர்காமில் யாரையோ அழைத்தார். சற்று நேரத்தில் அவர்முன் வந்து நின்றார் இன்ஸ்பெக்டர் ஒருவர்.

‘‘இவங்க தமிழ்நாட்ல இருந்து வந்திருக்காங்க. கேஸோட டீடெய்ல்ஸ் எல்லாம் புலந்த்சாஹர் பேக்-அப் டீம்கிட்ட கேட்டுக்கோங்க... இவங்க சொல்ற அந்த ஆசீம்கானைப் பிடிக்கணும்’’ என்று இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தார் முனிராஜ்.

அதற்குள் பட்டப்பகலில் சாலையில் ஒரு கொலை, பெட்ரோல் பங்க் கொள்ளை... என்று பரேலியின் நிலைமை பரபரப்பானது. காவல்துறை அதிகாரிகள் அந்த வழக்குகளில் பிஸியாகினர். பரேலியில் நிலைமை சீராக மூன்று நாள்கள் பிடித்தன. இந்த இடைவெளியில் ஆசிம்கானின் போட்டோவும் கிடைத்துவிட்டது.

‘‘சுசலைன்கலான்ல கன்ஃபார்ம் பண்ணிட்டேன் சார். ஆசீம்கான் அங்கதான் இருக்கான்’’ என்று அப்டேட் கொடுத்தார் ஜாவீத். அஸ்லாம்கானின் சொந்த ஊரான சுசலைன்கலானில்தான், ஆசிம்கானும் இருக்கிறான் என்ற தகவல் தெரியவந்ததும், ராஜன் அண்ட் கோவுக்கும் நம்பிக்கை பிறக்கிறது.

‘‘தட்ஸ் குட்... இப்ப நம்ம ஊர்லயும் நிலைமை கட்டுக்குள் வந்துடுச்சு. நீங்க உடனே சுசலைன்கலான் போங்க.. ஆசிம்கானைப் பிடிச்சுட்டு வாங்க’’ என்று உத்தரவுப் போட்டார் முனிராஜ்.

21 பேர் கொண்ட போலீஸ் டீம் சுசலைன்கலான் பறந்தது. இதில், கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், சுசலைன்கலான் இருப்பது மொரடாபாத் மாவட்டம். ஏற்கெனவே, அஸ்லாம்கானைத் தூக்கிய புலந்த்சாஹர் போலீஸுக்கோ, இப்போது ஆசிம்கானைப் பிடிக்கச் செல்லும் பரேலி போலீஸ் டீமுக்கோ அது சம்பந்தம் இல்லாத ஏரியா.

‘ஆசிமைப் பிடிக்கிறது அவ்ளோ ஈ.ஸி இல்ல. அவன் ரொம்ப ஷார்ப். அடிக்கடி இடத்தை மாத்திகிட்டே இருப்பான். ஆனாலும், இப்ப அவன் இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சாச்சு. இப்பத்தான் ஒரு திருட்டை முடிச்சுட்டு, அவனோட நண்பன் ஒருத்தன் வீட்டுலல ஆசிம் இருக்கான்.. இப்ப போனா அவனை உடனே பிடிச்சிடலாம்’’ என்று லோக்கல் போலீஸார் ஐடியா கொடுத்தனர்.

ஆசிமின் நண்பன் வீட்டைச் சுற்றி வளைத்தது பரேலி போலீஸ் டீம்.

மற்ற அனைவரும் மறைந்து நிற்க, ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டும் சென்று கதவைத் தட்டுகிறார்... ‘டொக்... டொக்...’

கதவைத் திறக்க சற்று நேரம் பிடிக்கிறது. அனைவரும் தயார் நிலையில் காத்திருக்கின்றனர். கதவு மெல்லத் திறக்கப்படுகிறது. பாய்ந்துப் பிடிப்பதற்குத் தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால், கதவைத் திறந்தது ஒரு சிறுவன். அது... ஆசிமின் நண்பனுடைய குழந்தை.

உள்ளே சென்று பார்த்தால் அங்கு யாருமே இல்லை.

‘போலீஸார் வருவது தெரிந்துதான் ஆசிம் அலர்ட் ஆகி வெளியேறிச் சென்றானா... இல்லை, அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் போனோமோ’ என்று போலீஸாருக்கே குழப்பம். ‘நாம் தேடி வந்த விஷயம் ஆசிமுக்குத் தெரியாமல் இருந்து, நாமே காட்டிக் கொடுத்துவிடக் கூடாது’ என்ற எச்சரிக்கை இருந்ததால், சத்தமே இல்லாமல் பரேலி போலீஸார் கலைந்தனர்.

இரண்டு நாள்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஆசிமைப் பிடிக்கக் களமிறங்கினர். இந்த முறை ஆசிம் டீம் வழக்கமாக மது அருந்தும் இடத்தைத் தேர்வு செய்தனர்.

நள்ளிரவு 2.30 மணி... ஒரு மைதானத்தில் அமர்ந்து சிலர் தண்ணியடித்துக்கொண்டிருந்தனர். ‘சார்... இவனுங்கதான்’ என்று லோக்கல் போலீஸார் உறுதிப்படுத்தினர். காலடி சத்தம்கூட வெளியே கேட்காதவாறு, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, அந்தக் கும்பலைச் சுற்றி வளைத்தது போலீஸ். ஆனால், அந்தக் கூட்டத்தில் ஆசிம் இல்லை.

மறுநாள்... பரேலி போலீஸில் சிலர் மாறுவேடத்தில் சுசலைன்கலான் சுற்றுவட்டாரத்தில் இருந்த கிராமங்களில் அலைந்துகொண்டிருந்தனர். அவர்கள் ஒரு வீட்டின் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் தொலைபேசிப் பேச்சு கவனத்தைக் கவர்ந்தது.

‘‘நீ அங்க என்ன கிழிச்சுட்டு இருக்க... இங்கே பக்கத்து வீட்டு ஃபரீனா, பை நிறைய தங்கத்தைக் காமிச்சுட்டுப் போறா. அவ புருஷன் போன ஊருக்குதான நீயும் போயிருக்க? சீக்கிரம் ஏதாவது உருப்படியா பண்ணிட்டு வந்து தொலை’’ என்றபடி போனை கட் செய்தார் ஒரு பெண்மணி.

அந்த உரையாடலைக் கேட்டதும், சுறுசுறுப்பானது போலீஸ் டீம். அந்தப் பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டபோது, அவர்கள் எதிர்பார்த்த தகவல் கிடைத்தது. ஆம்... அங்குதான் ஆசிமின் வீடு இருக்கிறது. சமீபத்தில்தான் ஆசிம் வீடு மாறியுள்ளான்.

காலம் தாழ்த்தாமல் ஆசிமின் வீட்டைச் சுற்றி வளைத்தனர் பரேலி போலீஸார். கதவை உடைத்துக்கொண்டு போலீஸார் உள்ளே நுழைந்த நேரம், மற்றொரு வழியே தப்பிக்கப் பார்த்தான் ஆசிம். துப்பாக்கி முனையில் அவனைத் தூக்கினார்கள். ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும், ஆசிம் எஸ்கேப் ஆகியிருப்பான். வெற்றிகரமாக ஆசிமைப் பிடித்துவிட்டு பரேலி நோக்கிச் சென்றனர்.

வரும் வழியில் ஆசிம், ‘‘நான் எல்லா உண்மையும் சொல்லிடறேன். என்ன தண்டனை வேணாலும் கொடுங்க. ஆனா, அடிக்கிறதோ என்கவுன்டரோ வேணாம்’’ என்றான்.

‘‘என்ன சார், இப்படிச் சொல்றான்?’’ என்று பரேலி போலீஸைச் சந்தேகத்துடன் கேட்டார் பாட்டீல்.

‘‘இவனுங்க சட்டத்துக்கு எல்லாம் பயப்பட மாட்டானுங்க. உள்ளே போனா எப்படி வெளியே வர்றதுன்னு எல்லா ரூட்டும் இவனுங்களுக்குத் தெரியும். அதனாலேயே நாங்க எப்படி கவனிப்போம்னும் தெரியும். அதுக்குப் பயந்துதான் இப்படிச் சொல்றான். இங்கே எல்லா குற்றவாளிகளும் இப்படித்தான்’’ என்று சிரித்தார் ஒரு பரேலி போலீஸ்காரர்.

அதற்குள் வாகனம் பரேலியை வந்தடைந்தது.

முனிராஜ் முன்பு நிறுத்தப்பட்டான் ஆசீம்.

அவரின் பார்வையை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் ஆசிம் பம்மினான்,

‘‘அடிச்சு உதைச்சு கஷ்டப்பட வேண்டாம். ராஜன், நீங்களே கேளுங்க... எல்லாமே சொல்லிடுவான்’’ என்றபடி நகர்ந்தார் முனிராஜ்.

ராஜனும், இந்தி தெரிந்த மற்றொரு தமிழக போலீஸ்காரரும் விசாரணையைத் தொடங்கினர். ஆசிமின் வாக்குமூலத்தை இந்தியில் எழுதத் துவங்கினார் சோம்நாத் பாட்டீல்.

‘‘சார்... ஒரு விஷயம். நீங்க சொல்ற திருட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்ல. அந்தத் திருட்டுக்கு அஸ்லாம்கான்தான் உஸ்தாத். டிசம்பர் மாத திருட்டுக்குத்தான் நான் உஸ்தாத். டிசம்பர் மாசம் நான் உங்க ஊர்லதான் திருட வந்துருந்தேன்’’ என்று ஆசிம்கான் சொல்லச் சொல்ல... பாட்டீலின் கண்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஆம்... ஆசிம் சொல்லிக்கொண்டிருப்பது பாட்டீலின் தங்கத்தைக் கொள்ளையடித்தது பற்றிதான்!

(வேட்டை தொடரும்...)