Published:Updated:

5 நாள்கள் காணாமல் போன சிறுமி... கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

வன்கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
வன்கொடுமை

- தஞ்சாவூர் திடுக்

5 நாள்கள் காணாமல் போன சிறுமி... கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

- தஞ்சாவூர் திடுக்

Published:Updated:
வன்கொடுமை
பிரீமியம் ஸ்டோரி
வன்கொடுமை

காவல்துறை உயரதிகாரி தொடங்கி சாமானியர் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை முதல் தமிழக சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸின் பாலியல் அத்துமீறல் விவகாரம் வரை கொடூரச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நெஞ்சைப் பதறவைக்கின்றன. தஞ்சாவூரிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்து, மூடி மறைக்கப்பட்டிருப்பதாக கொந்தளிக்கிறார்கள் மக்கள்!

இந்தச் சம்பவத்தில் உண்மையை அறிவதற்காக சமூக ஆர்வலர்கள், அந்தப் பகுதியில் உள்ளவர்கள், மாவட்ட உளவுத்துறை போலீஸார் என்று பல்வேறு தரப்பிலும் பேசினோம்... ‘‘தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மாணவி, தாயில்லாத பிள்ளை. தந்தை டிரைவர். தாய்மாமன் வீட்டில் தங்கி 9-ம் வகுப்பு படித்துவந்த அந்த மாணவி, பிப்ரவரி 6-ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றார். ஆனால், மாலை வீடு திரும்பவில்லை. பதறிய தாய்மாமன் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்துக்குப் புகார் அளிக்கச் சென்றபோது, பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிந்தியா அவரை அலட்சியப்படுத்தி, திருப்பி அனுப்பிவிட்டார்.

அதையடுத்து, ‘மாணவியைக் காணவில்லை’ என்று போட்டோவுடன் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் பதிவிட்டார்கள். அதைப் பார்த்தவர்கள் பதைபதைப்புடன் ஷேர் செய்ததில் அந்தப் பதிவு வைரலானது. எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் கவனத்துக்கும் இந்த விஷயம் செல்ல... போலீஸாரிடம் அவர் விசாரித்திருக்கிறார். அதன் பிறகே எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது.

5 நாள்கள் காணாமல் போன சிறுமி... கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா?

இந்தநிலையில், பிப்ரவரி 11-ம் தேதி மதியம், தன் தாய்மாமன் வீட்டுக்கு தட்டுத்தடுமாறி நடந்து சென்றிருக்கிறார் மாணவி. வீட்டிலுள்ளவர்கள் பதைபதைப்புடன் விசாரித்துவிட்டு, தெற்கு காவல் நிலையத்துக்கு மாணவியை அழைத்துச் சென்றிருக் கிறார்கள். விசாரணை நடத்திய எஸ்.ஐ சிந்தியா, ‘அப்பா மீதிருந்த கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே சென்றேன்’ என்று மாணவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு, வழக்கை முடித்துவிட்டார்’’ என்றவர்கள், அதன் பிறகு சொன்ன விஷயங்கள்தான் அதிரவைத்தன...

‘‘இளைஞன் ஒருவனைக் காதலித்த மாணவி, அவன் அழைத்ததால் வீட்டைவிட்டுச் சென்றிருக்கிறார். அதிகாலை நேரத்தில் ஒரு கட்டைப்பையில் உடைகளை வைத்து வீட்டுக்கு வெளியே மறைவான இடத்தில் வைத்தவர், வழக்கம்போல் காலையில் பள்ளிக்குப் புறப்படும்போது அந்தப் பையையும் எடுத்துச் சென்றிருக்கிறார். இது, அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. மெயின் ரோட்டுக்கு வந்த பிறகு, ஒரு நபருடன் பைக்கில் புதிய பேருந்து நிலையம் அருகே இறங்கியிருக்கிறார். அதுவும் சிசிடிவி-யில் பதிவாகியிருக்கிறது.

அதன் பிறகு யாருமில்லாத வீடு ஒன்றில் மாணவியைத் தங்கவைத்து நான்கு பேர் அவரைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அவர்களில், தற்போது தஞ்சாவூரில் தங்கியிருக்கும் ஒரத்தநாடு பகுதியைப் பூர்வீகமாகக்கொண்ட ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் மகனும் சம்பந்தப்பட்டிருக்கிறார். மாணவி சொன்ன தகவலில் பேரில், அந்த நான்கு பேரின் குடும்பத்தினரையும் ஸ்டேஷனுக்கு வரவழைத்து போலீஸார் விசாரித்திருக்கிறார்கள். அப்போது ஸ்டேஷனில் பெரும் கூட்டம் திரண்டு பரபரப்பாகி விட்டது. இந்தநிலையில் முக்கியப்புள்ளி ஒருவரிடமிருந்து ஸ்டேஷனுக்கு போன் வரவே, மாணவியிடம் எழுதி வாங்கிக்கொண்டு வழக்கை ஒன்றுமில்லாமல் முடித்துவிட்டார்கள். மாணவியின் குடும்பத்தினரையும் மிரட்டி வாயடைக்க வைத்துவிட்டார்கள்.

இதற்கிடையே பள்ளி நிர்வாகத்துக்கும் பிரஷர் கொடுத்து, மாணவிக்கு டிசி கொடுக்கச் சொல்லிவிட்டார்கள். ‘இந்த விவகாரம் குறித்து பேசக் கூடாது’ என்று வகுப்பிலுள்ள மற்ற மாணவிகளையும் மிரட்டியிருக்கிறார்கள். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது, அவர்களை மேலும் தவறு செய்யத் தூண்டும். எனவே, நேர்மையாக விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும்” என்றார்கள்.

மாணவியின் வீட்டுக்குச் சென்று பேசினோம். பேசவே தயங்கியவர்கள், கண்ணீர்முட்டப் பேசினார்கள். ‘‘மன உளைச்சல்லதான் வீட்டைவிட்டு மதுராந்தகம் வரை போய் திரும்பியிருக்கிறா. சாப்பிடாம அலைஞ்சுக்கிட்டே இருந்ததால, ரொம்பவே சோர்வாகிட்டா. ஃபீஸ் கட்டாததால ஸ்கூல்ல டிசி கொடுத்துட்டாங்க’’ என்று மழுப்பலாகச் சொன்னார்கள். ஏதோ விஷயத்தை வெளிப்படையாகச் சொல்ல அவர்கள் தயங்குவது நமக்குப் புரிந்தது.

வழக்கை விசாரித்த எஸ்.ஐ சிந்தியாவிடம் பேசினோம். “எங்க போனார்னு அந்த மாணவிக்கே தெரியலை. பஸ்ல ஏறி சுத்திக்கிட்டிருந்தேன்னு சொல்லுது. அரியலூர்ல ஒரு வயசான பாட்டி பஸ் ஏத்தி தஞ்சாவூருக்கு அனுப்பியிருக்காங்க. இங்கே வந்த பிறகு நாங்க விசாரிச்சுட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினோம். ரெண்டு மணி நேரம் அங்கே சிகிச்சை கொடுத்த பிறகு, ‘மாணவி பாலியல்ரீதியாக பாதிக்கப்படவில்லை’னு டாக்டர்கள் சொன்னப்புறம்தான், நாங்க எழுதி வாங்கிட்டு, அனுப்பிவெச்சோம். இதில் எந்தத் தவறும் நடக்கலை” என்றார்.

தஞ்சாவூர் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் பேசினோம். ‘‘நீங்கதான் இதை என் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கீங்க. உடனடியாக இது குறித்து விசாரிக்கிறேன். யார் தப்பு செஞ்சிருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி டாக்டர் செல்வத்திடம், “போலீஸாரின் பரிந்துரைப்படி சம்பந்தப்பட்ட மாணவி சிகிச்சை அல்லது பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்தாரா?” என்று கேட்டோம். விசாரித்து சொல்வதாகக் கூறியவர், “மாணவி இங்கு வரவில்லை” என்றார்.

இப்படி முரண்பட்ட தகவல்கள் வருவது இந்த விவகாரத்தில் சந்தேகங்களை அதிகரிக்கச் செய்கிறது. உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினால், பொள்ளாச்சியில் சிக்கிய கும்பலைப்போல் தஞ்சாவூரிலும் ஒரு கும்பல் சிக்க வாய்ப்பிருக்கிறது!