Published:Updated:

தஞ்சை: `பூட்டைத் திறக்கும் முயற்சி தோல்வி’ -சிசிடிவி கேமராவை எடுத்துச் சென்ற திருடன்

திருட்டு முயற்ச்சியில் ஈடுபட்டவர்
திருட்டு முயற்ச்சியில் ஈடுபட்டவர்

சிசிடிவி கேமராவால் நாம் உடனே மாட்டிக்கொண்டு விடுவோம் என நினைத்த அவர் சிசிடிவி கேமராவின் ஒயரைத் துண்டித்து கேமராவைக் கழட்டி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர் பர்மா பஜாரில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து சுமார் 50 வயது மதிக்கதக்க ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அது முடியாமல் போனதால் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகக் கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைத் திருடிச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

செல்போன் கடை
செல்போன் கடை

தஞ்சாவூரில் உள்ள பர்மா பஜாரில் செல்போன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் தொடர்புடைய பொருள்கள் விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பகல் நேரத்தில் எப்போதும் இந்தப் பகுதி பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் 50 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கடையின் பூட்டை உடைத்து உள்ளே உள்ள பொருள்களை எடுக்க முயன்றுள்ளார்.

ஆனால், பூட்டை உடைக்க முடியாமல் போனதால் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காகக் கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைத் திருடிக்கொண்டு சென்றுவிட்டார். கடையின் உரிமையாளர் இன்று காலை 10 மணிக்கு கடையைத் திறக்க வந்தபோது சிசிடிவி கேமரா காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.

சிசிடி கேமராவில் பதிவான காட்சி
சிசிடி கேமராவில் பதிவான காட்சி

உடனே கடையைத் திறந்து சிசிடிவி கேமரா மூலம் ஹார்ட்டிஸ்கில் பதிவான காட்சிகளைப் பார்த்தார். இதில் அந்தப் பெரியவர் கடையின் கதவில் பூட்டப்படுள்ள பூட்டை உடைக்க முயன்றது உட்பட சேட்டைகள் அனைத்தும் பதிவாகியிருந்தன. இதைத் தொடர்ந்து கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் அவர்கள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது குறித்து கடையின் உரிமையாளரான அசார் என்ற இளைஞரிடம் பேசினோம், ``கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காகப் பிறபிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால் காலை 10 மணிக்கு கடையைத் திறந்து இரவு 8 மணிக்கு மூடிவிடுவோம். எனது கடையில் பாதுகாப்புக்காக ரூ 10,000 செலவில் இரண்டு சிசிடிவி கேமாராக்களைப் பொருத்தியிருந்தேன்.

திருட்டு முயற்சியில் ஈடுபட்ட பெரியவர்
திருட்டு முயற்சியில் ஈடுபட்ட பெரியவர்

இந்நிலையில் இன்று கடையைத் திறக்க வந்தபோது ஒரு சிசிடிவி கேமராவைக் காணவில்லை உடனே கடைக்குள் இருந்த ஹார்டிஸ்கில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்தேன். அதில் பெரியவர் ஒருவர் தொப்பி அணிந்தபடி எனது கடையின் பூட்டை உடைக்க முயல்கிறார். அப்போது அந்த வழியாக பேப்பர் போடுபவர் செல்வதைக் கவனிக்கும் அவர் அந்த நேரத்தில் சும்மா நிற்பதுபோல் பாவனை செய்கிறார்.

பின்னர் அவர் சென்ற பிறகு மீண்டும் பூட்டை உடைக்க முயல்கிறார் முடியவில்லை. அப்போது அங்கு பொருத்தப் பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமராவைக் கவனித்துவிடுகிறார். அப்படியே சென்று விட்டால் சிசிடிவி கேமராவால் நாம் உடனே மாட்டிக்கொண்டு விடுவோம் என நினைத்த அவர் சிசிடிவி கேமராவின் ஒயரை துண்டித்து அப்படியே கேமராவை கழட்டி திருடிக்கொண்டு சென்றுவிட்டார்.

சிசிடிவி
சிசிடிவி

அதற்கு எதிர் பகுதியில் இன்னொரு கேமரா பொறுத்தப் பட்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை அதன் மூலமாக அனைத்து காட்சிகளும் பதிவாகியிருந்ததை வைத்து இதைத் தெரிந்து கொண்டோம். கடையின் பூட்டை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான செல்போன் உள்ளிட்ட பொருள்கள் தப்பின. இதனால் நான் பெரும் நிம்மதியடைந்தேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு