Published:Updated:

சிதறிக்கிடந்த பத்திரம், காலணி... தஞ்சாவூர் விவசாயிக்கு வாழைத் தோட்டத்தில் நேர்ந்த சோகம்!

சுபாஷ் சந்திர போஸ்
சுபாஷ் சந்திர போஸ் ( ம.அரவிந்த் )

கொலை நடந்த இடத்தில் சொத்துப் பத்திரத்தின் நகல்கள் சிதறிக்கிடந்தன. அவர் அணிந்திருந்த காலணி மற்றும் செல்போனும் அந்த இடத்தில் கிடந்தன.

தஞ்சாவூர் அருகே, வாழைத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவரை அவருடைய தோட்டத்திலே மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவங்கள் விவசாயிகளைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொலை செய்யபட்டவர்
கொலை செய்யபட்டவர்

தஞ்சாவூர் அருகே உள்ள மருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 64). இவர், காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவராகவும், மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும் இருந்துள்ளார். இவர், மதிய உணவு எடுத்துக்கொண்டு மருங்குளத்தில் இருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் உள்ள நாகப்ப உடையான்பட்டியில் இருக்கும் தன்னுடைய வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

இதையடுத்து, சுபாஷ் சந்திரபோஸை அவருடைய வாழைத் தோட்டத்திலேயே மர்ம நபர்கள் தலையில் வெட்டிக் கொலை செய்துள்ளனர். சுபாஷ் சந்திரபோஸ் தலையில் வெட்டுப்பட்டு கீழே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், போலீஸாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவம் நடந்த தோட்டம்
சம்பவம் நடந்த தோட்டம்

இதையடுத்து, வல்லம் டி.எஸ்.பி சேதுராமன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும், கொலை நடந்த காரணம் குறித்து விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி அருகில் உள்ள மற்றொரு தோட்டத்திற்குச் சென்று திரும்பிவிட்டது. இந்த கொலை சம்வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தோம், ``தன்னுடைய வீட்டிலிருந்து வாழைத் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்குச் சென்ற சுபாஷ் சந்திர போஸை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அவருடைய வாழைத் தோட்டத்திலேயே இந்த சம்வம் நடந்துள்ளது. கொலை நடந்த இடத்தில், சொத்துப் பத்திரத்தின் நகல்கள் சிதறிக்கிடந்தன. அவர் அணிந்திருந்த காலணி மற்றும் செல்போனும் அந்த இடத்தில் கிடந்தன. ஸ்கூட்டர் நின்ற இடத்திலிருந்து சற்று தொலைவில் அவர் உடல் கிடந்ததால், கொலையாளிகள் துரத்திச்சென்று வெட்டியுள்ளனர்.

சடலமாக சுபாஷ் சந்திர போஸ்
சடலமாக சுபாஷ் சந்திர போஸ்

சுபாஷ் சந்திர போஸ், எந்த வம்புதும்புக்கும் செல்லாதவர்; யாருடமும் அதிர்ந்துகூட பேச மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பவர் என ஊர் மக்கள் கூறுகின்றனர். எங்க அப்பாவுக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. எங்களிடம் எதுவும் கூறவில்லை என அவருடைய மகள் கூறியிருக்கிறார். அப்படியானால் கொலைக்கு என்ன காரணம்? தோட்டத்திற்கு பத்திரங்களின் நகல்களை ஏன் எடுத்துவந்தார்... கொலை செய்யும் அளவிற்கு ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்கிற கோணத்தில் விசாரணை செய்துவருகிறோம்" என்றனர்.

உறவினர்கள் சிலரிடம் விசாரித்தோம்... எப்போதும் சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் அன்பாகப் பேசுபவர் சுபாஷ். அடிக்கடி எல்லோரிடமும் சமூகத்திற்குத் தேவையான நல்ல விஷயங்களை மட்டுமே பேசக்கூடியவர். அவரை மர் நபர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன் பாப்பாநாடு அருகே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற திருமேனி என்ற விவசாயி கொலை செய்யப்பட்டார். தற்போது, மற்றொரு விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது, விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு