தஞ்சாவூர்: அரசு அதிகாரி வங்கி லாக்கரில் ரூ. 3.39 கோடி பணம், 1.38 கிலோ தங்க நகை! - சிக்கியது எப்படி?

அரசு அலுவலராக உள்ள நாகேஸ்வரனால் எப்படி இவ்வளவு பணமும் நகையும் சேர்க்க முடிந்தது... இவை அனைத்துமே லஞ்ச ஊழல் மூலம் கிடைத்தவைதானா... மேலும் வேறு வழிகளில் நாகேஸ்வரன் சொத்து சேர்த்திருக்கிறாரா என இன்னும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
தஞ்சாவூரில் பணியாற்றிய அரசு அதிகாரி ஒருவரின் வங்கி லாக்கர்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாய் பணத்தையும், ஏராளமான தங்க நகைகளையும் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்திருப்பது பெரும் பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலைப் பகுதியில் வசித்துவருபவர் தொழிலதிபர் ஆனந்த். இவர் தன்னுடைய காலிமனையில் வணிக வளாகம் கட்டுவதற்காக, தஞ்சை மேரீஸ் கார்னர் பகுதியில் இயங்கிவரும் நகர் ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில் கட்டடம் கட்ட திட்ட அனுமதி கோரி, அதற்கான ஆவணங்களுடன் அணுகியிருக்கிறார்.
இந்தநிலையில் இங்கு உதவி இயக்குநராகப் பணிபுரிந்த நாகேஸ்வரன், தன்னிடம் 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக, தஞ்சை மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்திருக்கிறார். நகர் ஊரமைப்பு திட்ட இயக்குநர் நாகேஸ்வரனைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்கான ஆப்ரேஷனில் இறங்கியது லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு. இவர்கள் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி, தொழிலதிபர் ஆனந்த், நகர் ஊரமைப்பு திட்ட உதவி இயக்குநர் நாகேஸ்வரனிடம் ரசாயன பவுடர் தடவிய 25,000 ரூபாய் லஞ்சப் பணத்தைக் கொடுத்திருக்கிறார். அங்கு ஏற்கெனவே மறைந்திருந்த, லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான டீம், நாகேஸ்வரனைச் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து கைதுசெய்தது.
அதைத் தொடர்ந்து, நாகேஸ்வரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஊழல் தடுப்பு காவல்துறையினர், அவரை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு சிறையில் அடைத்தனர். நாகேஸ்வரன் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார். இவர், தொழிலதிபர் ஆனந்திடம் லஞ்சம் கேட்டதோடு மட்டுமல்லாமல். இதற்கு முன்பு ஏற்கெனவே பலரிடம் லஞ்சம் பெற்று கோடிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம் குவித்துவைத்திருப்பதாக, லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீஸாருக்குத் தகவல் கிடைத்ததால், திருச்சியிலுள்ள நாகேஸ்வரனின் மூன்று வீடுகளில் சோதனை நடத்தினர். அங்கு கிடைத்த சில ஆவணங்களைக்கொண்டு, திருவானைக்காவல், திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வங்கிகளில் இவரது பெயரிலும், இவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலும் உள்ள மூன்று லாக்கர்களிலும் சோதனை மேற்கொண்டார்கள்.

இவர் மற்றும் இவரது குடும்பத்தினரின் பெயரிலுள்ள ஏராளமான வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்தனர். இதில் 3.39 கோடி ரூபாய் பணமும், 1.38 கிலோ தங்க நகைகளும் இருப்பது தெரியவந்துள்ளது. அரசு அலுவலராக உள்ள நாகேஸ்வரனால் எப்படி இவ்வளவு பணமும் நகையும் சேர்க்க முடிந்தது... இவை அனைத்துமே லஞ்ச ஊழல் மூலம் கிடைத்தவைதானா... மேலும் வேறு வழிகளில் நாகேஸ்வரன் சொத்து சேர்த்திருக்கிறாரா என இன்னும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.