Published:Updated:

`படகு, ரயிலில் கடத்தல்; 4,000 ச.அடி வீடு, அடியாட்கள்' - போலீஸில் சிக்கிய 'கஞ்சா' கூட்டாளிகள்!

கஞ்சா
கஞ்சா

மூன்று பேரும் கஞ்சா விற்பனை செய்வதில் முக்கியமானவர்களாகவும், தமிழகத்தில் கஞ்சா பரவலாகக் கிடைப்பதற்குக் காரணமாகவும் இருந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் சென்னை, டெல்டா, தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் கொடிகட்டிப் பறந்த கூட்டாளிகளான மூன்று பேரை, தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி-யின் தனிப்படை போலீஸ் கைதுசெய்துள்ளது. கூட்டாளிகளில் ஒருவரிடம் மட்டும் எட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரைக் கைதுசெய்ததுமே, `5 லட்ச ரூபாய் தர்றேன் என்னை விட்டுடுங்க’ எனக் கூறி போலீஸிடம் பேரம் பேசியிருக்கிறார்.

தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார்
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார்

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்றுவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன. குறிப்பாக தஞ்சாவூர் சரகமான டெல்டா மாவட்டங்களில் கஞ்சா விற்பனை திரும்பிய பக்கமெல்லாம் நடைபெறுவதாகவும், இதனால் இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர். கஞ்சா விற்பனை தொடர்பான புகார்கள் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமாருக்கும் வந்தது.

ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிற தகவலும் போலீஸ் தரப்புக்குக் கிடைத்தது. இதையடுத்து முற்றிலுமாக கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும் என டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் முனைப்பு காட்டியதுடன் கஞ்சா விற்பனையில் மூளையாகச் செயல்படுபவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.

போலீஸ் டீம்
போலீஸ் டீம்

இதற்காக, தஞ்சாவூர் டி.ஐ.ஜி-யின் உத்தரவின்பேரில், தனிப்படை பிரிவு ஆய்வாளர் மணிவேல் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மோகன், கந்தசாமி தலைமைக் காவலர் இளையராஜா, காவலர்கள் அருண்மொழி, அழகு, நவீன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு இரவு, பகலாக ரகசியக் கண்காணிப்பில் ஈடுப்பட்டுவந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான குஷ்பு என்கிற அன்புசெல்வன் (39), திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (42), சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கவுதம் (31) மூன்று பேரையும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆறு பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கார்களையும், 120 கிலோ கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட குஷ்பு என்கிற அன்புசெல்வன்
கைதுசெய்யப்பட்ட குஷ்பு என்கிற அன்புசெல்வன்

இது குறித்து தனிப்படை போலீஸ் தரப்பில் பேசினோம், ``அன்புசெல்வன் தொடக்கத்தில் சாராய வியாபாரம் செய்துவந்தவர். எல்லோரும் `குஷ்பு’ என்ற பட்டப்பெயருடன் அழைத்து வந்ததால், குஷ்பு என்கிற அன்பு செல்வனாக மாறிப்போனார். சாராயத்தைவிட கஞ்சாவில் அதிக லாபம் கிடைப்பதை அறிந்து கஞ்சா விற்னையில் இறங்கினார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பாடகிரி மலைப்பகுதியில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, டெல்டா மாவட்டங்கள் முழுவதுமுள்ள வியாபாரிகளுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யத் தொடங்கினார். அத்துடன் படகுகள் மூலமாக கஞ்சா மூட்டைகளை இலங்கைக்குக் கடத்துவதில் கைதேர்ந்தவர். இதனால் அவரிடம் பணப் புழக்கம் பெருகியது. நாகையில் 4,000 சதுர பிரமாண்ட வீடுகட்டி, பெரிய மதில் சுவர், வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கேமரா, பாதுகாப்புக்கு அடியாள்கள் என வலம்வந்திருக்கிறார்.

ஆந்திரா டு தஞ்சாவூர்; காரில் 120 கிலோ கஞ்சா! - பிரபல கஞ்சா வியாபாரி உட்பட 9 பேர் கைது
சரவணன்
சரவணன்

அன்புசெல்வனுடன் அவருடைய மனைவி பேச்சி, அண்ணன் மாறன், அவரது மனைவி அதிர்ஷ்டகுமாரி என குடும்பமே கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டுவந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த சரவணன், அன்பு செல்வனின் நெருங்கிய கூட்டாளி. ரயிலில் கஞ்சாவைக் கடத்தி வந்து தேனி, மதுரை, ராமநாதபுரம் தென் மாவட்டங்கள் முழுவதும் விற்பனை செய்திருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த கவுதம், இவர்களுடையை கூட்டாளி. கோவை, திருப்பூர், சேலம், சென்னை போன்ற மாவட்டங்களில் கவுதம் கஞ்சா விற்பனை செய்திருக்கிறார். இவர்கள் மூன்று பேரும்தான் தமிழகத்தில் கஞ்சா விற்கப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்தோம்.

கவுதம்
கவுதம்

அன்புசெல்வனை ரகசியமாகக் கண்காணித்தோம். போலீஸ் தன்னைக் கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்த அன்புசெல்வன் தனது செல்போனை `ஸ்விட்ச் ஆஃப்' செய்துவிட்டு ராமநாதபுரத்துக்குச் சென்று தலைமறைவானார். அடிக்கடி செல்போனையும், சிம்கார்டையும் மாற்றிவிடுவது அவருடைய ஸ்டைல். ராமநாதபுரத்தில் பதுங்கியிருப்பதை அறிந்து கைதுசெய்யச் சென்றோம். உடனடியாக, 'ரூ 5 லட்சம் தர்றேன். என்னைய விட்டுடுங்க' என்று போலீஸிடம் பேரம் பேசம் அளவுக்கு கஞ்சா விற்பனையில் கொடிகட்டிப் பறந்திருக்கிறார்.

அன்புசெல்வனிடமிருந்து எட்டு செல்போன்கள், சிம்கார்டுகள் ஆகிவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டோம். அதன் பிறகு கூட்டாளிகளான சரவணன், கவுதம் ஆகியோரையும் கைதுசெய்தோம். அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் கார் மூலம் கஞ்சா கடத்திவந்த ஆந்திராவைச் சேர்ந்த கும்பலையும் மடக்கிப் பிடித்திருக்கிறோம். அன்புசெல்வன் டன் கணக்கில் கஞ்சாவை வாங்கி, படகு மூலம் இலங்கைக்குக் கடத்தியது தெரியவந்திருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

ஆந்திராவில் இரண்டு கிலோ கஞ்சா கேக்கை ரூ 4,000-க்கு வாங்கி, தமிழகத்தில் ரூ 22,000-க்கும், இலங்கையில் ரூ.40,000-க்கும் விற்றுள்ளனர். மூன்று பேரும் கஞ்சா விற்பனை செய்வதில் முக்கியமானவர்களாகவும், தமிழகத்தில் கஞ்சா பரவலாகக் கிடைப்பதற்குக் காரணமாகவும் இருந்துள்ளனர்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு