Published:Updated:

வீட்டு வேலைக்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை!

தஞ்சாவூர் பகீர்

பிரீமியம் ஸ்டோரி

ஜூன் 1-ம் தேதி... தஞ்சாவூர்-திருச்சி சாலை, செங்கிப்பட்டி பகுதியில் கார் ஒன்று சீறிப்பாய்ந்து சாலையோரம் திடீர் பிரேக் அடித்து நிறுத்தப்படுகிறது. கார் கதவைத் திறந்து 20 வயது மதிக்கத்தக்க வட மாநிலப் பெண் ஒருவர் கீழே தள்ளப்படுகிறார். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் மீண்டும் சீறிப் பாய்ந்து கிளம்பிவிட்டது கார். கீழே தள்ளிவிடப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடல் முழுக்க காயங்கள்... முகம் வீங்கியிருக்கிறது. யார் அந்தப் பெண், அவர் எதற்காக கீழே தள்ளப்பட்டார்? விசாரித்தால் குலை நடுங்குகிறது.

 தமிழ்செல்வி - கலைச்செல்வி
தமிழ்செல்வி - கலைச்செல்வி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அந்தச் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் தமிழ்செல்வியிடம் பேசினோம். ‘‘கொரோனா நிவாரணம் தொடர்பாக போராட்டம் நடத்துவதற்காக நாங்கள் செங்கிப் பட்டிக்குச் சென்றிருந்தோம். அப்போதுதான் காரிலிருந்து கீழே தள்ளப்பட்டுக் கிடந்த அந்தப் பெண்ணை பார்த்தோம். படுகாயங்களுடன் இருந்தவர் இந்தியில் பேசினார். தமிழ் தெரியவில்லை. இந்தி தெரிந்த வரை வைத்து விசாரித்தோம்... அந்தப் பெண் சொன்ன தகவல்கள் எங்களைத் தூக்கிவாரிப் போடச் செய்தன.

செந்தில்குமார் வீடு
செந்தில்குமார் வீடு

‘வீட்டு வேலை என்று சொல்லி அழைத்து வந்து அடித்துத் துன்புறுத்தினர். பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டில் இன்னும் மூன்று பெண்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினாள் அந்தப் பெண்’’ என்றவர், சிறிது இடைவெளிவிட்டுப் பேசினார்.

‘‘தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மேலவஸ்தாசாவடி, ஊர்தியார் தெருவில் செந்தில்குமார் என்பவருக்குச் சொந்தமான பிரமாண்ட வீட்டில்தான் அந்தப் பெண் அடைத்துவைக்கப்பட்டிருந்திருக்கிறார். செந்தில்குமாரும், அவரின் இரண்டாவது மனைவியான ராஜமும்தான் இந்தப் படுபாதக வேலையைச் செய்திருக்கின்றனர். `வீட்டு வேலைக்கு...’ எனச் சொல்லிப் பெண்களை அழைத்துவந்து அடித்துத் துன்புறுத்தி, வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக இதை அவர்கள் செய்து வருவதாகத் தெரிகிறது.

செந்தில்குமார்
செந்தில்குமார்

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் மேற்கு வங்காளத்திலிருந்து இந்தப் பெண்ணை `வீட்டு வேலைக்கு...’ எனச் சொல்லி அழைத்து வந்திருக்கின்றனர். பிறகு அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தியிருக்கின்றனர். அந்தப் பெண் மறுத்ததால் இரும்புக்கம்பியால் அடித்திருக் கின்றனர். சாப்பாடு கொடுக்காமல் சித்ரவதை செய்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டது அவர்களுக்கு மிகவும் வசதியாகிவிட்டது. அந்த வீட்டுக்கு வரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் இளம் பெண்ணின் உடல்நிலை மிக மோசமாகிவிட்டது. இதற்கிடையில் அவள் கர்ப்பமாகிவிட்டாள். இதை செந்தில்குமாரிடமும் ராஜத்திடமும் தெரிவித்து, ‘என்னை எங்கள் ஊருக்கு அனுப்பி வைத்துவிடுங்கள்; என்னால் முடியவில்லை’ என்று கதறியிருக்கிறார். ஆனால், அப்போதும் அவர்கள் மனமிரங்கவில்லை.

ஒருகட்டத்தில் அந்தப் பெண்ணில் உடல்நிலை மேலும் மோசமடையவே செந்தில்குமார், ராஜம் மற்றும் இரண்டு ஆண்கள் என நான்கு பேர் சேர்ந்து அந்தப் பெண்ணை காரில் ஏற்றி வந்து செங்கிப்பட்டியில் தள்ளிவிட்டிருக்கின்றனர். அவ்வளவு துயரத்திலும் அந்தப் பெண், ‘என்னுடன் மேலும் மூன்று தமிழ்ப் பெண்கள் இருந்தனர். அவர்களுக்கும் என்னைப் போன்ற நிலைமைதான். உடனே அவர்களையும் காப்பாற்றுங்கள்’ என்று கதறினார். ஆனால், அவர்கள் அந்த வீட்டைப் பூட்டிவிட்டு தப்பிவிட்டனர். அந்த மூன்று பெண் களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செந்தில்குமார், ராஜம் மட்டுமல்ல... இதில் பலருக்கும் தொடர்பிருக்கலாம். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது குறித்து கலெக்டர் கோவிந்த ராவ் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் மனு கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

வீட்டு வேலைக்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை!

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் கலைச்செல்வி, ‘‘இன்ஸ்பெக்டராகப் பணி புரிந்து விருப்ப ஓய்வு பெற்ற வசந்தா என்பவர் தான் செந்தில்குமாரின் முதல் மனைவி. செந்தில்குமாரின் டார்ச்சர் தாங்க முடியாமல்தான் வசந்தா விவகாரத்து வாங்கிச் சென்றுவிட்டதாகச் சொல்லப் படுகிறது. அதன் பிறகுதான் செந்தில் குமாரும் ராஜமும் சேர்ந்துள்ளனர். இருவரும் வீட்டிலேயே பாலியல் தொழில் நடத்தியிருக்கின்றனர்். அந்தப் பெரிய வீட்டின் அமைப்பைப் பார்க்கும் போது இதற்காகவே திட்டமிட்டு கட்டியதாகத்தான் தெரிகிறது.

வட மாநிலங்களுக்குச் சென்று, `வீட்டு வேலைக்கு...’ எனக் கூறிப் பெண்களை அழைத்து வருவது ராஜம்தானாம். தமிழகப் பெண்களையும் இவர்கள் வலையில் வீழ்த்தியிருக்கின்றனர். இதற்கென தனியாக புரோக்கர்களை வைத்துக்கொண்டு பெரிய நெட்வொர்க்காகச் செயல்பட்டிருக்கின்றனர்். ஏற்கெனவே பாலியல் தொழில் தொடர்பாக செந்தில்குமார் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அதில், அவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

காவலர்கள் குடியிருப்பிலிருந்து 200 மீட்டர் தொலைவில்தான் செந்தில்குமாரின் வீடு அமைந்துள்ளது. அப்படியிருக்கும் போது இது எப்படி போலீஸாருக்குத் தெரியாமல் போனது... போலீஸாருக்கு லஞ்சம் கொடுத்தே இவர்கள் பாலியல் தொழிலைச் செய்திருக்க வேண்டும். நாங்கள் புகார் கொடுத்தும் உடனடியாக போலீஸார் நடவடிக்கை எடுக்காததால்தான் அவர்கள் தப்பிவிட்டனர். விசாரணையில் மெத்தனமாகச் செயல்படுகிறது போலீஸ். பெண்ணின் பெற்றோருக்குக்கூட இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அந்த வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். நேர்மையாக விசாரணை மேற்கொண்டால் தான் இதிலுள்ள பல மர்மங்கள் வெளியே வரும். காவல்துறை முறையாகச் செயல்பட வில்லையென்றால் பெண்களைத் திரட்டிப் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.

இது குறித்து தஞ்சாவூர் எஸ்.பி-யான மகேஸ்வரனிடம் பேசினோம். “செந்தில்குமாருக்கு நிறைய தொடர்புகள் இருப்பது தெரியவருகிறது. பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சையில் இருக்கிறார். ஆகையால், இன்னும் முழுமையான ஸ்டேட்மென்ட் வாங்க முடியவில்லை. இதில் தொடர்புடையவர்கள் யாரும் தப்ப முடியாது. அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியுடன்.

எஸ்.பி உறுதியளித்ததைப் போலவே செந்தில்குமார், ராஜம் உள்ளிட்ட நான்குபேரைக் கைது செய்துள்ளது தஞ்சை காவல்துறை.

“ஒரு நாளைக்கு கட்டணம் ரூ.14 ஆயிரம் மட்டுமே!” - மியாட் மருத்துவமனை விளக்கம்

கடந்த 7.6.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில், `கொரோனாவில் இப்படியும் ஒரு கொடுமை! தனியார் மருத்துவமனையல் இருந்து கதறல் குரல்... ஆக்‌ஷன் எடுத்த ஜூ.வி’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையில் சம்பந்தப்பட்ட மியாட் மருத்துவமனை நிர்வாகத்தின் கருத்தை அறிய முயன்று பேசினோம். மின்னஞ்சலும் அனுப்பியிருந்தோம். இதழ் அச்சுக்குச் செல்லும்வரை பதில் வரவில்லை. மறுநாள் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார்.

வீட்டு வேலைக்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை!

“எங்கள் மருத்துவமனைக்கும் நெய்வேலி என்.எல்.சி-க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உண்டு. விபத்தில் அடிபடுபவர்களை இங்கு அனுப்புவார்கள். அவர்களின் சிகிச்சைக்கான பணத்தை என்.எல்.சி நிர்வாகமே கட்டிவிடும். அப்படித்தான் எலும்பு முறிந்த நிலையில் கோவிந்தராஜ் வந்தார். அவரைச் சோதித்தபோது, அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் இருந்தது. இதை என்.எல்.சி-க்குத் தெரிவித்து, ‘முதலில் அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும். 14 நாள்கள் கழித்தே எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிக்க முடியும்’ என்றோம். அதற்கு என்.எல்.சி தரப்பில், ‘கொரோனா சிகிச்சையை அரசு மருத்துவமனையில்தான் செய்துகொள்ள வேண்டும். எலும்பு முறிவுக்கான சிகிச்சையை மட்டும் நீங்கள் செய்யுங்கள்’ என்றார்கள்.

இதை கோவிந்தராஜிடம் தெரிவித்தோம். அவர் கொரோனாவுக்கும் எங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற விரும்புவதாகச் சொன்னார். `அதற்குத் தனியாக நீங்கள் பணம் கட்ட வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்தோம். பிறகு அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறிவிட்டார். நாங்கள் அதிக தொகை கேட்டதாக உங்களிடம் சொல்லியிருக்கிறார்; அதை நாங்கள் மறுக்கிறோம். எங்கள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர், செவிலியர் சேவை, உபகரணங்கள், உணவு, தங்குமிடம் செலவுகள் உட்பட ஒரு நாளைக்கு 14 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். இதையே 14 நாள்களுக்குக் கணக்குப்போட்டு எங்கள் தரப்பில் கோவிந்தராஜிடம் சொல்லப் பட்டிருக்கலாம். இதுதான் நடந்தது” என்றார்.

பிரித்வி மோகன்தாஸ் சொன்னதற்கான விளக்கத்தை கோவிந்தராஜிடம் கேட்டோம். “என்னிடம் அவர்கள் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் கேட்டது உண்மை. என்னுடன் வந்த மனைவிக்கும் கொரோனா இருந்ததால் என்ன செய்வது என்று கேட்டபோது, அதே அளவுக்குப் பணம் கட்ட வேண்டும் என்றார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு