Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர் : அதிவேக பைக் ரேஸ்; சாலையில் சென்றவர் பரிதாப பலி - நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

உயிரிழந்த செல்வராஜ்
உயிரிழந்த செல்வராஜ் ( ம.அரவிந்த் )

சாலையில் சாதாரணமாக செல்வோரை மறிக்கும் போலீஸ் பைக் ரேஸில் அசுர வேகத்தில் செல்லும் அந்த இளைஞர்களை பிடிப்பதில்லை என தஞ்சை மக்கள் குற்றச்சாட்டு.

தஞ்சாவூர் பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் சென்றபோது, எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி, அதில் வந்த 52 வயது ஆண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவர் குடும்பத்தின் எதிர்காலமே கேள்வி குறியாகியுள்ளது. தொடர்ச்சியாக இது நடப்பதாகவும், பைக் ரேஸை தடுக்க போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கே அச்சப்படும் சூழ்நிலை நிலவுவதாகவும் அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

போலீஸ் வசம் கொடுத்த புகார் மனு
போலீஸ் வசம் கொடுத்த புகார் மனு

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி காலனி பகுதியில் குறிப்பிட்ட இளைஞர்கள் சிலர் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கக் கூடிய பீக் ஹவரான மாலை 6 மணி முதல் எட்டு மணி வரை அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். 130 கிலோ மீட்டர் வேகத்தில், மக்களை அச்சப்படுத்தும் வகையில் அவர்கள் செல்வதை பார்த்து பலர் பதைபதைத்து புலம்புவதும் தொடர்ந்தது.

இது தொடர்பாக பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸாரிடமும் புகார் கூறி வந்தனர். ஆனால் அவர்கள் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்காததால் எந்த அச்சமும் இல்லாமல் பொதுமக்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 8-ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்களில், ஒன்றில் மூன்று பேரும், மற்றொன்றில் இரண்டு பேரும் அமர்ந்து கொண்டு ரேஸில் ஈடுபட்டனர். இ.பி காலனியிலிருந்து தஞ்சாவூர் நகர பகுதி நோக்கி மின்னல் வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்றனர்.

அப்போது இ.பி காலனியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் (52)எதிர்பகுதியிலிருந்து மெதுவாக தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்தார். அவர் மீது பைக் ரேஸில் சென்ற பைக் ஒன்று மோதியது. இதனை பார்த்து அவ்வழியாக சென்றவர்கள் பலரும் பெரும் அதிர்ச்சிகுள்ளாகினர். செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த செல்வராஜ்
உயிரிழந்த செல்வராஜ்

ரேஸில் பைக்கை ஓட்டிச் சென்ற மணிகண்டனின் கால் முறிந்து விட்டது. பின்னால் அமர்ந்து சென்ற இளைஞருக்கு தலையில் அடிப்பட்டு இறந்து விட்டார். மணிகண்டன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் நடத்திய பைக் ரேஸில் ஒரு பாவமும் அறியாத அப்பாவி ஒருவர் உயிரிழந்திருக்கிறார். கல்யாண வயதில் ஒரு ஆண்,ஒரு பெண் என செல்வராஜுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தின் முதுகெலும்பாக இருந்தவர் இளைஞர்களின் விளையாட்டுக்கு பலியாகிவிட்டார்.

இதனை தடுக்க வேண்டிய போலீஸ் அலட்சியமாக செயல்பட்டதால் இன்றைக்கு அந்த குடும்பமே எதிர்காலத்தை நினைத்து பரிதவித்து நிற்கிறது.

இது குறித்து அப்பகுதியினர் சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் ஒன்றான இ.பி காலனி பரபரப்பான பகுதி. இதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சீதா நகர் தெருவைச் சேர்ந்த விஷ்வா, சத்யா நகரை சேர்ந்த ஜீவா ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இவர்களின் தலைமையில் ஒரு கேங்க் இருக்கிறது. எல்லோருமே 25 வயதுகுட்டப்பட்டவர்கள்.

இந்த மூன்று பேரும் கஞ்சா விற்பனை செய்பவர்கள். இது தொடர்பான வழக்குகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இவர்கள் கஞ்சாவை பயன்படுத்தி விட்டு அடிக்கடி பைக் ரேஸில் ஈடுபடுவது வழக்கம். பொதுவாக மாலை நேரத்தில் தான் இது போன்ற செயலில் ஈடுபடுவார்கள். நான்கு இரு சக்கர வாகனங்களில் யார் ஜெயிப்பது என போட்டி வைப்பார்கள். உயர் ரக பைக்கில் அவர்கள் செல்லும் வேகம் மற்றவர்களை அச்சத்துகுள்ளாக்கும்.

கையில் அருவாள்,கத்தி,கஞ்சா என எப்போதும் வைத்துக் கொண்டு அந்த இளைஞர்கள் சுற்றுவதால், யாருக்கும் கேட்பதில்லை. பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸாரும் இதனைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதனால் நாளுக்கு நாள் இவர்களின் தொல்லைகள் எல்லை மீறின. இந்த குரூப்பில் உள்ள விஷ்வாவின் அம்மா ரேவதி ஆளும்கட்சி பிரமுகரின் ஆவின் பால்ப்பண்ணையில் தற்காலிகமாக பணி புரிந்து வருகிறார்.

பைக் ரேஸ்
பைக் ரேஸ்

பைக் ரேஸ் செல்லும் போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தனக்கு வேண்டப்பட்ட ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் மூலம் ரேவதி அதனை சரிகட்டி விடுவார். இதனால் யாருக்கும் பயமில்லாமல் பைக் ரேஸ் நடத்தி வந்தனர். இருபது நாட்களுக்கு முன்னர் பைக் ரேஸ் சென்றபோது, நடந்து சென்ற பெண் மீது மோதியதில் அவருக்கு கால் முறிந்தது.

சாலையோரத்தில் தங்கள் பிள்ளையுடன் நடந்து சென்ற தம்பதி மீது மோதுவதுபோல் பெரும் சத்தத்துடன் பைக் கடந்து சென்றதில் அவர்கள் அதிர்ச்சியில் சில நிமிடங்கள் உறைந்து போயினர். கடந்த 8-ம் தேதி இரவும் பைக் ரேஸ் சென்றனர் அதில் செல்வராஜ் என்பவர் மீது மோத அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

சாலையில் சாதாரணமாக செல்வோரை மறிக்கும் போலீஸ், பைக் ரேஸில் அசுர வேகத்தில் செல்லும் அந்த இளைஞர்களை விட்டு விடுகின்றனர். கஞ்சா விற்பனையில் அவர்கள் ஈடுபடுவதும் தெரிந்தும் அதனை தடுக்கவும் தவறிவிட்டனர்.அதில் முறையான நடவடிக்கை எடுத்திருந்தாலே இப்போது ஒரு உயிர் பரிதாபமாக போயிருக்காது. போனது ஒரு உயிர் ஆனால் நூலிழையில் பதறித் தப்பித்தது பல உயிர்கள்" என இளைஞர்களின் பைக் ரேஸ் பற்றி நன்கறிந்தவர்கள் நடுக்கத்துடன் விவரிக்கின்றனர்.

இது போன்று பைக் ரேஸ் சென்றவர்கள் மீது போலீஸ் ஒரு முறை கூட நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. சென்னை போன்ற பெரு நகரங்களில் பழக்கத்திலிருந்த பைக் ரேஸ் இப்போது தஞ்சாவூர் போன்ற சிறு நகரங்களிலும் பரவியிருக்கிறது. கடந்த வருடம் புதிய பேருந்து நிலையம் சாலையில் செல்பி வீடியோ எடுத்துக் கொண்டே பைக் ரேஸ் சென்ற இளைஞர் ஒருவர் பேருந்து மீது மோதிய வீடியோ அப்போது வைரலானது குறிப்பிடதக்கது.

தஞ்சாவூர்: `இனி நாங்க எங்க போறது?' - கைவிட்ட பெற்றோர், தற்கொலைக்கு முயன்ற அண்ணன், தங்கை

அதன் பின்னரும் இது போன்ற பைக் ரேஸ் நடக்கிறது. இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லை என்றால் இன்னும் பல அப்பாவி உயிர்கள் பறி போகும் நிலை ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என வல்லம் டி.எஸ்.பி சீதாராமன்,இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

டி.எஸ்.பி. சீதாராமனிடம் புகார் குறித்து பேசினோம், ``பைக் ரேஸ் சென்றவர்கள் இரண்டு பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுடன் சென்ற நண்பர்களை கைது செய்ய உத்தரவிட்டிருக்கிறேன். பைக் ரேஸை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முற்றிலும் அவை ஒழிக்கப்படும்" என உறுதியளித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு