Published:Updated:

மகனுடன் திருட்டில் ஈடுபட்ட எஸ்.ஐ... ‘புளூ ஃபிலிம்’ சி.டி விற்பனைக்கு உதவிய இன்ஸ்பெக்டர்...

பாலியல் கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் கும்பல்

தஞ்சாவூர் பாலியல் கும்பலின் பகீர் பின்னணி

மகனுடன் திருட்டில் ஈடுபட்ட எஸ்.ஐ... ‘புளூ ஃபிலிம்’ சி.டி விற்பனைக்கு உதவிய இன்ஸ்பெக்டர்...

தஞ்சாவூர் பாலியல் கும்பலின் பகீர் பின்னணி

Published:Updated:
பாலியல் கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
பாலியல் கும்பல்

வீட்டு வேலைக்கென வட மாநிலப் பெண்களை அழைத்து வந்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் குறித்து 10.6.2020, 14.6.2020 தேதியிட்ட ஜூ.வி இதழ்களில் எழுதியிருந்தோம். இந்தக் கொடூரத்தைச் செய்துவந்த செந்தில்குமார்- ராஜம் தம்பதியரையும், அவர்களுக்கு உதவியாக இருந்த ராமசந்திரன், பிரபாகரன், பழனிவேல் ஆகியோரையும் தஞ்சாவூர் எஸ்.பி மகேஷ்வரனின் கீழ் இயங்கும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறனர். இந்த நிலையில், ‘இந்த ஐந்து பேரின் பின்னணி என்ன, அவர்கள் எப்படி இணைந்தார்கள்?’ என்பது குறித்து விசாரணையில் இறங்கினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செந்தில்குமார்

செந்தில்குமார் ஆரம்பத்தில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ‘காதி கிராஃப்ட்’ கடை நடத்தினார். அவரின் முதல் மனைவி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அதனால், செந்தில்குமாருக்கு போலீஸ் நட்பு வட்டாரம் பெரிதானது. ஒரு ஆண் இன்ஸ்பெக்டர் (தற்போது மதுரையில் பணிபுரிகிறார்) உதவியுடன் தனது கடையில் ‘புளு ஃபிலிம்’ சி.டி-க்கள் விற்று வந்த செந்தில்குமார், போலீஸார் சிலருக்கும் சி.டி-க்கள் சப்ளை செய்து வியாபாரத்தைப் பெருக்கினார். ராஜத்தின் தொடர்பு கிடைத்த பிறகு, தன் மனைவியுடனான தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டிக்க ஆரம்பித்தார் செந்தில்குமார். ஒருகட்டத்தில் ராஜம்-செந்தில்குமார் உறவு தெரியவந்து, செந்தில் குமாரிடமிருந்து விவாகரத்து வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார் செந்தில்குமாரின் மனைவி.

செந்தில்குமார்  - ராஜம் - பிரபாகரன் - ராமசந்திரன் - பழனிவேல்
செந்தில்குமார் - ராஜம் - பிரபாகரன் - ராமசந்திரன் - பழனிவேல்

ராஜம்

விவகாரத்து பெற்ற பெண்கள், கணவனை இழந்த பெண்கள், கணவனைப் பிரிந்து வாழும் பெண்களைத் தன் வலையில் வீழ்த்தி, தஞ்சாவூர் நடராஜபுரம் காலனியில் பாலியல் தொழில் செய்துவருபவர் கலைவாணி. கணவனைப் பிரிந்த ராஜம், வீட்டு வேலைக்காக கலைவாணி வீட்டுக்குள் நுழைகிறார். பாலியல் தொழிலில் கலைவாணி நல்ல வருமானம் பார்ப்பதைத் தெரிந்துகொண்ட ராஜம், தனியாகப் பாலியல் தொழிலை நடத்தத் திட்டமிடுகிறார். இந்தச் சூழலில்தான், ராஜத்துக்கு செந்தில்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.

கலைவாணியிடமிருந்து ராஜம் கற்றுக்கொண்ட விஷங்களையும், செந்தில்குமாரின் போலீஸ் தொடர்புகளையும் வைத்து பாலியல் தொழிலைப் பெரிய அளவில் ஆரம்பித்துள்ளனர். ராஜத்துக்கு ரௌடிகளிடமும் நல்ல நெருக்கம் இருந்தது. வீட்டில் எப்போதும் `டிரைவர்’ என்கிற பெயரில் 10-க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்திருப்பார். ராஜமும் செந்தில்குமாரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் போலீஸில் சிக்கிக்கொண்டனர். நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, ‘‘அரசுக்கு லட்சக்கணக்கில் வரி செலுத்துகிறேன். சமூகத்தில் முக்கியமான நபராக இருக்கிறேன். இது போன்ற கீழ்த்தரமான வேலைகளை நான் செய்வேனா?’’ என்று வாதாடி, தப்பித்தார் ராஜம். கலைவாணியைக் கைது செய்து விசாரித்தால், இவர்களைப் பற்றி இன்னும் பல தகவல் கிடைக்கும் என்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபாகரன்

திருடர்களுடன் அன்-கோ போட்டுக்கொண்டு, அவர்கள் கொள்ளையடிப்பதில் பங்கு வாங்கிக்கொள்ளும் போலீஸ் வகையறாவைச் சேர்ந்தவர் பிரபாகரன். வல்லத்தில் எஸ்.ஐ-யாக இவர் பணிபுரிந்தபோது செந்தில்குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரின் இளைய மகன் கார்த்திமீது செயின் பறிப்பு, இரு சக்கர வாகனம் திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. தன் மகனுடன் சேர்ந்து மங்களபுரத்தில் ஒரு கடையில் பின்பக்கச் சுவர் வழியாகத் துளையிட்டு திருட்டில் ஈடுபட்டுச் சிக்கினார் பிரபாகரன். குற்றவாளி ஒருவருக்குச் சாதகமாக வழக்கை எழுதுவதாகக் கூறி, லஞ்சம் கேட்டு கையும் களவுமாக சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ‘இனி பணிக்கு வர முடியாது’ என்பதை உணர்ந்த பிரபாகரன், செந்தில்குமார்-ராஜம் குரூப்புடன் ஐக்கியமாகிவிட்டார். தங்களுக்கு உதவும் அனைத்து போலீஸாருக்கும் இவர் மூலம்தான் மாமூல் பட்டுவாடா செய்யப்படுமாம்.

ராமசந்திரன்

இவர் அய்யம்பேட்டை அருகேயுள்ள வலுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். சிலம்பாட்டப் பயிற்சியாளரான ஓர் இளம்பெண்ணைத் தன் வலையில் வீழ்த்தி, பாலியல் தொழில் நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் வேறு ஒருவரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட, ராஜத்திடம் மேனேஜராகச் சேர்ந்துள்ளார். லீஸ் மற்றும் வாடகைக்கு வீடுகள் பார்த்துக்கொடுக்கும் போர்வையில் தஞ்சையிலுள்ள மற்ற புரோக்கர்களுக்கும், ராஜத்துக்கும் பாலமாகச் செயல்படுவது இவருடைய வேலை.

பழனிவேல்

பாலியல் தொழிலுக்காக வாடகைக்கு எடுத்திருந்த ஒவ்வொரு வீட்டுக்கும் வாட்ச்மேன்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தார் ராஜம். அந்த வாட்ச்மேன்களைக் கண்காணிக்கும் பொறுப்பு பழனிவேலுடையது. பெண்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கித் தருவது, ரெய்டு வந்துவிட்டால் போலீஸுக்குப் பணத்தைக் கொடுத்து சமாளிப்பது இவருடைய வேலை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism