Election bannerElection banner
Published:Updated:

மும்பை: காவலர்கள் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தாரா? - 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரேத பரிசோதனை

சச்சின்
சச்சின்

மும்பை தாராவியில் போலீஸ் காவலில் இறந்த வாலிபரின் உடலை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

மும்பை தாராவியிலுள்ள ராஜீவ் காந்தி நகரில் வசித்துவந்தவர் சச்சின் ஜெய்ஸ்வர் (17). கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை 12-ம் தேதி சாதாரண உடையில் சச்சின் வீட்டுக்கு வந்த போலீஸார் சச்சின் எங்கே என்று கேட்டிருக்கிறார்கள். வீட்டில் சச்சின் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருந்தார். `எதற்காக கேட்கிறீர்கள்?’ என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, மொபைல்போன் திருட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மறுநாள் போலீஸார் மீண்டும் வந்து சச்சினை விசாரிக்க வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றனர். போலீஸார் அழைத்துச் சென்ற மறுநாள் சச்சின் திரும்ப வந்தார். அவர் தனது உடல் கடுமையாக வலிப்பதாகத் தெரிவித்தார். உடல்வலி அதிகரிக்கவே அவரை சயான் மாநகராட்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சச்சின் 21-ம் தேதி இறந்துபோனார். தங்களது மகனை போலீஸார் கொடூரமாக அடித்து உதைத்ததால்தான் இறந்துபோனதாக கூறி சச்சின் உடலை வாங்க மறுத்தனர் அவர் பெற்றோர்.

சச்சின்
சச்சின்

இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் சச்சினை போலீஸார் துன்புறுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை சச்சின் பெற்றோர் ஏற்கவில்லை.

உடலை பெற்றுக்கொள்ளாமல், இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி மணீஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையில் சச்சின் குடும்பத்தினர் மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பினரின் கருத்தைக் கேட்ட பிறகு சச்சின் உடலை மீண்டும் இரண்டாவது முறையாகப் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். மேலும் இரண்டாவது பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற்று இறுதிச் சடங்குகளைச் செய்வதாக சச்சின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரணம்
மரணம்
மாதிரிப் படம்

மூன்று நாள்களில் பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், ஏற்கெனவே பிரேத பரிசோதனை நடத்தியவர்கள் இரண்டாவது பிரேத பரிசோதனையில் இடம்பெறக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து சச்சின் தந்தை ரவீந்திர ஜெய்ஸ்வர் கூறுகையில், ``இரண்டரை ஆண்டுகள் போராடிய எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு