Published:Updated:

ரகசிய நம்பர்களை மறந்த `ஸ்கிம்மர்ஸ்' கொள்ளையர்கள்- நட்சத்திர ஹோட்டலில் பல்கேரியாவினரின் `பலே' காமெடி

எஸ்.மகேஷ்

ஸ்கிம்மர்ஸ் கருவி மூலம் ஏ.டி.எம் கார்டுகளின் தகவல்கள், ரகசிய நம்பர்களைத் திருடும் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 3 பேர் நட்சத்திர அறையில் உள்ள லாக்கரின் ரகசிய நம்பர்களை மறந்ததால் போலீஸிடம் சிக்கிக்கொண்டனர்.

ஸ்கிம்மர்ஸ் கொள்ளையர்கள்
ஸ்கிம்மர்ஸ் கொள்ளையர்கள்

போலீஸாரிடம் சிக்கும் காமெடித் திருடர்கள் குறித்து செய்திகளை வெளியிட்டு வருகிறோம். பல்கேரியாவைச் சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் சென்னை போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்த போலீஸார் கவலைகளை மறந்து வாய்விட்டுச் சிரித்துள்ளனர். அப்படி என்னதான் சொன்னார்கள் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கொள்ளையர்கள்.

போலீஸாரிடம் சிக்கிய பல்கேரியா கொள்ளையர்கள்
போலீஸாரிடம் சிக்கிய பல்கேரியா கொள்ளையர்கள்

சென்னை துரைப்பாக்கம், காரப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வெளிநாட்டினர் வழக்கமாக தங்குவதுண்டு. இந்த ஹோட்டலில் ஜூலை மாதத்தில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 3 பேர் தங்கியிருந்தனர். காலையில் செல்லும் இவர்கள், இரவில்தான் அறைக்குத் திரும்புவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

சில தினங்களுக்கு முன் ஹோட்டலின் வரவேற்பு அறையை தொடர்புகொண்ட பல்கேரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர், `சார், எங்கள் அறையில் உள்ள லாக்கரின் ரகசிய நம்பர்களை மறந்துவிட்டோம், அதனால் லாக்கரைத் திறக்க முடியவில்லை' என்று கூறியுள்ளார். இதையடுத்து, சர்வீஸ் இன்ஜினீயர் சம்பந்தப்பட்ட அறைக்குச் சென்று லாக்கரைத் திறந்து கொடுத்ததோடு புதிய ரகசிய நம்பர்களையும் தெரிவித்துவிட்டு வந்தார்.

பல்கேரியா கொள்ளையர்கள்
பல்கேரியா கொள்ளையர்கள்

சர்வீஸ் இன்ஜினீயர், லாக்கரைத் திறந்தபோது அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைப் பார்த்தார். ஆனால், அதை அவர் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாக இருந்த சர்வீஸ் இன்ஜினீயர், பணம் குறித்த தகவலை ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறினார். இதனால் பல்கேரியாவினர் மீது ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் வீரக்குமார் தலைமையிலான போலீஸார் அறைக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த அறைக்குள் ஸ்கிம்மர் கருவி, போலி கார்டுகளைத் தயாரிக்கும் இயந்திரங்கள் கழிவறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

மேலும், லாக்கரில் கட்டுக்கட்டாக இந்திய ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன. அறைக்குத் திரும்பிய பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பல்கேரியா நாட்டைச் சேர்ந்த 3 பேர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்களும் காமெடித் தகவல்களும் வெளியாகின. பலரின் ரகசிய நம்பர்களை ஸ்கிம்மர்ஸ் கருவி மூலம் திருடிய இந்தக் கும்பல், நட்சத்திர ஹோட்டல் அறையின் லாக்கரின் ரகசிய நம்பர்களை மறந்துவிட்டனர். (அதற்கும் அவர்கள் ஸ்கிம்மர்ஸ் கருவி வைத்திருக்கலாம்)

லாக்கர்
லாக்கர்

விசாரணைக்குப்பிறகு கண்ணகி நகர் போலீஸார், பல்கேரியாவினரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மீனா விசாரணை நடத்தினார். விசாரணையில், போலீஸாரிடம் சிக்கியவர்கள் ஃபோரீஸ், நிக்கோலே கேட்வ், மேக்ஸிமோவ் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் வெளிநாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில் ஸ்கிம்மர்ஸ் கருவிகளைப் பொருத்தி இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``பல்கேரியா நாட்டைச் சேர்ந்த மூன்று பேரும் புத்திசாலியாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டினரின் வங்கி விவரங்களை ஸ்கிம்மர்ஸ் கருவி மூலம் திருடிய இவர்கள், இந்தியாவுக்கு வந்து கைவரிசை காட்டியுள்ளனர். நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கிய இவர்கள், ஸ்கிம்மர்ஸ் கருவி மூலம் திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு போலி ஏ.டி.எம் கார்டுகளை தயாரித்துள்ளனர். பிறகு அதன்மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல்கேரியாவினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்
பல்கேரியாவினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

7.30 லட்சம் இந்திய ரூபாய் நோட்டுகள் இந்தக் கும்பலிடம் இருந்தது. இதுதவிர 13,240 டாலர்கள், போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரிக்க பயன்படுத்திய கருவிகள் மற்றும் லேப்டாப்கள், செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றார்.

போலீஸ் விசாரணையில்போது பல்கேரியாவினர் கூறிய தகவலைக் கேட்டு விசாரணை அதிகாரிகள் வாயடைத்துப்போய் நின்றுள்ளனர். `எங்கள் நாட்டில் அல்லது வெளிநாட்டில் குற்றங்கள் செய்தால் 24 மணி நேரத்தில் 23 மணி நேரம் லாக்கப்பில்தான் இருக்க வேண்டும். ஒரு மணி நேரம் மட்டும்தான் சிறைவளாகத்தில் நடமாட விடுவார்கள். ஆனால், இந்தியாவில் அப்படியல்ல. இங்குள்ள சட்டத்தைத் தெரிந்துகொண்டுதான் கைவரிசை காட்டியுள்ளோம்' என்று கூறியுள்ளனர்.

பல்கேரியாவினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்
பல்கேரியாவினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

கடந்த மே மாதத்தில் பல்கேரியாவைச் சேர்ந்த வெலிகோ, லியோன் என இருவர் போலி ஏ.டி.எம் கார்டு வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது மூன்று பல்கேரியாவினர் போலி ஏ.டி.எம் வழக்கில் கைதாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குட்பட்ட குறிப்பிட்ட நட்சத்திர ஹோட்டலில்தான் அறை எடுத்து தங்கியவர்கள். மேலும், இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்க இவர்களுக்கு சிலர் உதவி செய்துவருகின்றனர். அவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். போலீஸாரிடம் சிக்கிய பல்கேரியாவினரில் ஒருவர் பட்டதாரி, மற்ற இருவர் ப்ளஸ் டூ என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனால், ஏ.டி.எம் தகவல்களை எப்படியெல்லாம் திருடலாம் என்பதில் இவர்கள் புத்திசாலியாக உள்ளனர்.