Published:Updated:

`கியூஆர் கோடு... பறிபோன 34,000 ரூபாய்!’ - டெல்லி முதல்வர் மகளிடம் ஆன்லைன் மோசடி

கெஜ்ரிவால் - ஹர்ஷிதா
கெஜ்ரிவால் - ஹர்ஷிதா

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மகள் ஆன்லைன் மோசடிப் பேர்வழியிடம் ரூ.34,000 இழந்திருக்கிறார்.

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன. சில வெளிநாட்டினர், உள்ளூர் நபர்களை நண்பர்களாக்கிக்கொண்டு, அவர்களின் துணையோடு இது போன்ற மோசடியில் ஈடுபட்டுவருகின்றனர் என்கிறார்கள் காவல்துறையினர். இந்த மோசடியில் படித்தவர்களே சில நேரங்களில் சிக்கிக்கொள்கின்றனர். தற்போது டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மகளும் இந்த மோசடியில் சிக்கியிருக்கிறார். கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா வீட்டிலிருக்கும் பழைய சோஃபா ஒன்றை விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார்.

அர்விந்த் கெஜ்ரிவால்
அர்விந்த் கெஜ்ரிவால்

ஒ.எல்.எக்ஸ் மூலம் எளிதில் விற்றுவிடலாம் என்று வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்த ஹர்ஷிதா, உடனே தனது சோஃபாவை புகைப்படம் எடுத்து அதை ஒ.எல்.எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து `விற்பனைக்கு இருக்கிறது...’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதைப் பார்த்த ஒருவர் அந்த சோஃபாவை தான் வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார். இருவருக்கும் இடையே விலை முடிவானதையடுத்து பணத்தை அனுப்ப வங்கிக் கணக்கைச் சரிபார்க்க சோஃபா வாங்குபவர் முதலில் சிறிய தொகையை ஹர்ஷிதாவுக்கு அனுப்பிவைத்தார். பின்னர் க்யூஆர் கோடு ஒன்றை அனுப்பி அதை ஸ்கேன் செய்யும்படியும், அப்படிச் செய்தவுடன் எஞ்சிய பணத்தை அனுப்புவதாகவும் சோஃபாவை வாங்கவிருந்த நபர் தெரிவித்தார். அந்த நபரின் சதி தெரியாமல் ஹர்ஷிதாவும் ஸ்கேன் செய்தார். அடுத்த சில நிமிடத்தில் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.20,000 எடுக்கப்பட்டதாக ஹர்ஷிதாவுக்குச் செய்தி வந்தது.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

இது குறித்து ஹர்ஷிதா அந்த நபரிடம் கேட்டதற்கு, `தவறு நடந்துவிட்டது என்றும் க்யூஆர் கோடு தவறு என்றும் வேறு ஒரு க்யூஆர் கோடு அனுப்புவதாகவும், அதை ஸ்கேன் செய்த பிறகு தனக்கு வந்த பணம் மற்றும் சோஃபாவுக்கான பணத்தைச் சேர்த்து அனுப்புவதாக ஆசைவார்த்தை கூறினார் மர்ம நபர். ஹர்ஷிதாவும் இழந்த பணத்தைப் பெறும் நோக்கத்தில், அந்த நபர் அனுப்பிய க்யூஆர் கோடில் ஸ்கேன் செய்தார். ஆனால் மீண்டும் 14,000 ருபாய் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹர்ஷிதா அந்த நபரைத் தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை. இதனால் இது குறித்து போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். டெல்லி முதல்வரின் மகளே ஆன்லைன் மோசடியால் ஏமாற்றப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு