விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஜயகுமார் என்பவரைக் காதலித்துவந்த நிலையில், கடந்த மாதம் 13-ம் தேதி பெற்றோரின் எதிர்ப்பை மீறிக் காதல் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில், நண்பர்களுடன் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய தம்பதியர், தேசிய நெடுஞ்சாலையில் திருவாமாத்தூர் அருகேயுள்ள தனியார் உணவகம் ஒன்றில் பாஸ்தா உணவு வாங்கிச் சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்துள்ளனர். உணவு செரிமானப் பிரச்னையால் அன்று இரவு திடீரென ராணிக்கு அதீத வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் கணவர் விஜயகுமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார். அப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறா ராணி. இவர், ஏற்கெனவே இதயப் பிரச்னை காரணமாக மாத்திரை எடுத்துவந்திருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆகவே, உடற்கூறாய்வு முடிவிலேயே இளம்பெண் உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்துத் தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில், 174/3 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் கஞ்சனூர் காவல்துறை அதிகாரிகள். இந்த நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில் நேற்று மதியம் அதிரடி ஆய்வும் மேற்கொண்டனர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
திருமாண ஒரு மாதத்துக்குள்ளாகவே இளம்பெண் பாஸ்தா சாப்பிட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் செஞ்சி பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இளம்பெண் உயிரிழப்பு தொடர்பாக செஞ்சி சரக டி.எஸ்.பி பிரியதர்ஷினியிடம் பேசினோம். "வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். அதேவேளையில், ஆர்.டி.ஓ தலைமையிலும் விசாரணை நடைபெற்றுவருகிறது. உடற்கூறாய்வு முடிவு வரும்போதுதான் காரணம் என்ன என்பது குறித்துத் தெரியவரும். அப்போது தகவல் தெரிவிக்கிறோம்" என்றார்.