Published:Updated:

சிறுவனின் கொலையைத் தடுத்து நிறுத்திய நாய்! - ஆத்திரத்தில் வாயை வெட்டிய கொடூரம்

எஸ்.மகேஷ்

சென்னையை அடுத்த போரூரில், 17 வயது சிறுவனைக் கொலை செய்ய வீட்டுக்கு வந்தவர்களை நாய் விரட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், நாயின் வாயை வெட்டிவிட்டு தப்பியோடியது.

dog
dog

சென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள கணபதி நகரைச் சேர்ந்தவர், 17 வயது சிறுவன். இவர், மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவருகிறார். இவரின் வீட்டுக்கு நேற்று மூன்று பேர் வந்தனர். அவர்கள், 17 வயது சிறுவனைப் பற்றி விசாரித்தனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள், 'அவன் வீட்டில் இல்லை' என்று கூறியுள்ளனர்.

venkadesh
venkadesh

அப்போது சிறுவன் வளர்த்த நாய், மூன்று பேரையும் வீட்டுக்குள் வரவிடாமல் குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் நாயின் வாயில் வெட்டிவிட்டு தப்பினர். நாயின் அலறல் சத்தம் கேட்டவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் வலியால் துடித்துக் கொண்டிருந்தது. உடனடியாக நாயை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நாயை வெட்டியது யார் என்று விசாரித்தபோது, 17 வயது சிறுவனைத் தேடிவந்தவர்கள்தான் நாயை வெட்டினர் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போரூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் நாராயணன், விசாரணை நடத்தினார்.

dog
dog

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``17 வயது சிறுவன், அவரின் நண்பர்கள் ஆலப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்துவருகின்றனர். இவர்கள் கூட்டாகச் சேர்ந்து, இரவு நேரங்களில் தனியாகச் செல்பவர்களை வழிமறித்து செல்போன் பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வழிப்பறி செய்த செல்போன்களைப் பங்குபோடுவதில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், 17 வயது சிறுவனைக் கொலை செய்ய அவரின் நண்பர்களான வெங்கட்(19), முத்து (20), அருண் (20) ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று, 17 வயது சிறுவனிடம் நண்பர்கள் போனில் பேசியுள்ளனர். அப்போது, சிறுவனும் அவரின் நண்பர்களும் ஆபாசமாகப் பேசியதால் ஆத்திரமடைந்த வெங்கட், முத்து, அருண் ஆகியோர், சிறுவனின் வீட்டுக்கு வந்துள்ளனர். வீட்டில் சிறுவன் இல்லாததால், நாயை வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வெங்கட், முத்து, அருண் ஆகியோரைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.

venkadesh
venkadesh

கணபதி நகரைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``சிறுவனைக் கொலை செய்ய அவரின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தபோது, அவர்களை விடாமல் நாய் துரத்தியது. நாய் மட்டும் விரட்ட வில்லையென்றால், சிறுவனை அந்தக் கும்பல் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது" என்றனர்.

நாயை வெட்டிய வழக்கில் கைதான வெங்கடேஷைப் பிடிக்க போலீஸார் சென்றனர். அப்போது, போலீஸாரிடமிருந்து தப்பிக்க வெங்கடேஷ் முயன்றார். இதனால் (வழக்கம் போல), அவர் தவறி கீழே விழுந்ததில் அவரின் கை, கால் உடைந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

17 வயது சிறுவனைக் கொலை செய்யும் முடிவோடு வீட்டுக்கு வந்தவர்களை விடாமல் துரத்திய நாயின் வாயை வெட்டிய சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.