Published:Updated:

அன்று தெருக்கோடி; இன்று பலகோடி! - ஆந்திரா, தமிழக அரசியல் பின்னணியில் `கட்டை' டான்கள்

நமது நிருபர்

செம்மரக்கட்டைகள் கடத்தல் பின்னணியில் ஆந்திர, தமிழக அரசியல் கட்சியினர், காக்கிகள், தாதாக்கள் ஆகியோர் உள்ளனர். ஆந்திராவிலிருந்து சென்னைக்கு சொகுசு கார்களில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுகின்றன.

வெட்டப்பட்ட செம்மரங்கள்
வெட்டப்பட்ட செம்மரங்கள்

திருப்பதி வனப்பகுதியிலிருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவது தொடர்கதையாகிவருகிறது. செம்மரங்களை வெட்டுவதற்கு தமிழகத்திலிருந்து ஆட்களை கடத்தல்காரர்கள் அழைத்துச் செல்கின்றனர். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரங்களை அறுக்கும் இயந்திரங்களின் உதவியோடு செம்மரங்கள் வெட்டப்படுகின்றன. பிறகு அவை வனப்பகுதிகளிலேயே பதுக்கப்பட்டு, ஆந்திரா மலைப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களிலிருந்து காய்கறிகள், மணல் ஏற்றிவரும் லாரிகள் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன. ஆந்திர எல்லையைக் கடந்ததும் ஆடி கார் உள்ளிட்ட சொகுசு கார்கள், புதிய கார்கள் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுகின்றன. சென்னை மதுரவாயல், செங்குன்றம், வடசென்னை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் ரகசிய குடோன்களில் செம்மரக்கட்டைகள் பதுக்கப்படுகின்றன. பிறகு சென்னைத் துறைமுகம், தூத்துக்குடி, குஜராத் துறைமுகங்கள் மூலம் சீனா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

செம்மரக் கட்டைகள்
செம்மரக் கட்டைகள்

செம்மரம் மாஃபியா பின்னணி குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி.

ஆந்திராவின் கடப்பா, சித்தூர் பலகொண்டா, திருப்பதி கோயில் அமைந்துள்ள சேஷாசலம் மலைகள், அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்கள், நல்லமல்லா காடுகள், நெல்லூரில் சில பகுதிகள் ஆகியவற்றில் செம்மரங்கள் அதிகளவில் உள்ளன. செம்மரங்களில் மருத்துவ மகத்துவங்கள் இருப்பதால் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு டன் செம்மரத்தின் விலை அரைகோடி ரூபாய்க்குக் குறையாமல் விலைபோகிறது. சேஷாசலம் மலைகளில் உள்ள செம்மரங்களுக்கு அதிக ஆர்டர்கள் வெளிநாடுகளில் கிடைக்கின்றன. இதனால்தான் ஆந்திரக் காவல்துறையில் செம்மரக்கடத்தலைத் தடுக்க தனிப்பிரிவு தொடங்கி செயல்பட்டுவருகிறது

ஆந்திர அரசியல் தொடங்கி தமிழக அரசியல் வரை செம்மரக் கடத்தல் பின்னணி உள்ளது. செம்மர மாஃபியாவின் ஆசி இல்லாமல் ஆந்திர அரசியல் இல்லை. செம்மரக் கடத்தலில் ஆந்திர, தமிழக அரசியல் புள்ளிகள், தாதாக்கள் கொடிகட்டி பறந்துவருகின்றனர். காக்கிகளும் வனத்துறையினரும் கவனிக்கப்படுகின்றனர். செம்மரக் கடத்தலுக்கு முன் தெருக்கோடியில் இருந்தவர்கள் இன்று பல கோடிகளுக்கு அதிபதிகள். ஆந்திராவிலிருந்து கடத்தப்படும் செம்மரங்கள் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்த தனி நெட்வொர்க் செயல்படுகிறது.

ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரங்களை வெட்ட அழைத்துச் செல்லப்படும் கூலித் தொழிலாளிகள் திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். வறுமைகாரணமாகத்தான் பலர் ஆந்திராவில் செம்மரங்களை வெட்டச் சென்று சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். கடந்த 2015-ம் ஆண்டு ஆந்திர வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டச் சென்ற 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து மரம் வெட்ட தமிழர்கள் ஆந்திராவுக்குச் செல்வதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

செம்மரக் கட்டைகள்
செம்மரக் கட்டைகள்

இதன்காரணமாக ஆந்திரச் சிறையில் தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் உள்ளனர். அதில் கடப்பா, திருப்பதி ஆகிய சிறைகளில் மட்டும் 2,500க்கு மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ராய்சொட்டி சிறையில் 500க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். திருப்பதி, கடப்பா ராய்சொட்டி ஆகிய நீதிமன்றங்களில் செம்மரக் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு லட்சக்கணக்கில் கட்டணம் கொடுக்கப்படுகிறது. இதனால் தமிழகத்திலிருந்து வழக்கறிஞர்கள் ஆந்திர நீதிமன்றங்களில் ஆஜராகிவருகின்றனர்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் செம்மரங்களை வெட்டச் சென்ற தமிழர்களுக்காக ஆந்திர நீதிமன்றங்களில் ஆஜராகிவரும் வழக்கறிஞர் அருளிடம் பேசினோம். ``திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலைகிராம மக்கள் மரங்களை வெட்டுவதில் திறமைவாய்ந்தவர்கள். இவர்களின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றைப் பயன்படுத்தி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் ஆந்திராவுக்கு செம்மரங்களை வெட்ட அழைத்துச் செல்கின்றனர்.

வழக்கறிஞர் அருள்
வழக்கறிஞர் அருள்

திருவண்ணாமலை மாவட்டம் போல சேலம், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் செம்மரங்களை வெட்ட ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். அழைத்துச் செல்லும்போது சிக்கல்கள் ஏற்பட்டால் ஜாமீனில் எடுப்பதாக புரோக்கர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால், ஆந்திர போலீஸாரிடம் சிக்கும் தமிழர்களைக் காப்பாற்ற புரோக்கர்கள் எந்தவித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. இதுவரை 50க்கும் மேற்பட்ட தமிழர்களை ஆந்திரச் சிறையிலிருந்து மீட்டுள்ளேன். 20 தமிழர்களைச் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் மட்டும் தமிழக அரசு சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்தது. ஆந்திராவில் மரங்களை வெட்டச் சென்று தமிழர்கள் சிக்கலில் சிக்குவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

செம்மரக்கடத்தல் டான்களின் பின்னணி

திருத்தணி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய பெயரில் கட்டை என்ற அடைமொழி வைத்திருக்கிறார். அவர், ஒருகாலத்தில் கட்டை பிசினஸில் கோலோச்சியவர். இன்று பல கோடிகளுக்கு அதிபதி. ஆந்திர அரசியல்வாதி ஒருவரின் பினாமி என்று சொல்லப்படும் அளவுக்கு அவரின் செல்வாக்கு உள்ளது.

இவருக்கு அடுத்தப்படியாக வடசென்னையில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவர் இருக்கிறார். இவர்தான் வெளிநாடுகளுக்கு செம்மரங்களை கடத்துவதில் கைதேர்ந்தவர். இவரின் பின்னணியில் தமிழக அரசியல் உள்ளது.

செம்மரக்கட்டைகள்
செம்மரக்கட்டைகள்

பாடியநல்லூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளாட்சி பிரதிநிதி. ஆளுங்கட்சியைச் சேர்ந்த இவர் மீது செம்மரக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திர அரசியல்வாதி ஒருவரை கொலை செய்த கும்பலுடன் இவருக்கு தொடர்புள்ளதாகக் கருதிய ஆந்திர போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த இவரின் கட்டுப்பாட்டில்தான் இன்னமும் பல செம்மரக்கட்டை குடோன்கள் உள்ளன.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் குடியிருந்தவருக்கு பெண் கொடுத்த ஒருவரும் செம்மரக்கடத்தல் வழக்கில் தொடர்புடையவர். இதனால்தான் அவரின் திருமணத்துக்கு ஜெயலலிதா செல்ல மறுத்துவிட்டார்.

சீனாவைச் சேர்ந்த 20 -க்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதும் செம்மரக்கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆந்திர அரசுக்கு கிடைக்கும் வருவாயைவிட கடத்தல் கும்பலுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இதனால்தான் ஆடி கார் உட்பட சொகுசு கார்கள், பதிவு செய்யப்படாத புதிய கார்களில் செம்மரக்கடத்தல் நடந்துவருகிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்

கடத்தப்படுவது எப்படி ?

ஆந்திர வனப்பகுதியில் வெட்டப்படும் செம்மரங்களை ஆந்திராவைச் சேர்ந்த கடத்தல் டான்கள் உதவியுடன் மலைகிராமங்களில் பதுக்கப்படுகின்றன. பிறகு ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும் வழிகளில் கடத்தல் கும்பலுக்கு விசுவாசமாக இருக்கும் போலீஸார் உதவியோடு செக்போஸ்ட்களில் கடத்தல் வாகனங்கள் சோதனையின்றி தமிழக எல்லைக்குள் நுழைகின்றன. தமிழக -ஆந்திர எல்லையோரங்களில் உள்ள காவல்துறையினர் ஆசியோடு குடோன்களுக்கு செம்மரக்கட்டைகள் வந்துசேருகின்றன. கடத்தல் வாகனங்கள் ஆந்திரா எல்லைக்குள் இருக்கும்போது அங்குள்ள வாகனப் பதிவு எண்களையும் தமிழக எல்லைக்குள் இங்குள்ள பதிவு எண்களையும் பயன்படுத்துகின்றன. மேலும், கட்சிக்கொடி கட்டப்பட்ட சொகுசு கார்களில் செம்மரங்கள் கடத்தப்படுவதால் சோதனைச் சாவடிகளில் கடத்தல் வாகனங்கள் நிறுத்தப்படுவதில்லை.

வனத்துறை அலுவலகம்
வனத்துறை அலுவலகம்

90 சதவிகித கடத்தல் வாகனங்கள் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்துவிடுகின்றன. 10 சதவிகித வாகனங்கள்தான் காவல்துறையினரிடமும் வனத்துறையினரிடமும் சிக்கிக் கொள்கின்றன. அப்போது பறிமுதல் செய்யப்படும் புத்தம் புதிய கார்கள், வாகனங்கள் மாயமாவது வாடிக்கையாக இருந்துவருகிறது. மேலும் பறிமுதல் செய்யப்படும் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் ஏலம்விடுகின்றனர்.

பாடியநல்லூர், சோழவரம், பொன்னேரி, மீஞ்சூர், செங்குன்றம், மதுரவாயல் ஆகிய பகுதிகளில் உள்ள குடோன்களின் செம்மரக்கடத்தலின் முக்கிய மையப்புள்ளி. கட்சிபாகுபாடின்றி இந்தத் தொழிலில் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். செம்மரக் கடத்தல் மூலம் பணத்தைச் சம்பாதித்த பலர், இன்று வேறு பிசினஸ்களில் முதலீடு செய்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர். கட்டை என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட இவர்கள், கோடீஸ்வரர்களாக சொகுசு கார்களில் வலம் வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திர எல்லையோர கிராமங்களில் உள்ளவர்கள்தான் செம்மரக்கடத்தலில் டான்களாக உள்ளனர்.

பாடியநல்லூரைச் சேர்ந்த ஒருவர் உள்ளாட்சி பிரதிநிதி. ஆளுங்கட்சியைச் சேர்ந்த இவர் மீது செம்மரக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திர அரசியல்வாதி ஒருவரை கொலை செய்த கும்பலுடன் இவருக்கு தொடர்புள்ளதாகக் கருதிய ஆந்திர போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆந்திர காவல்துறை

செம்மரக்கடத்தல் வாகனங்கள் வரும்போது அதற்கு கான்வாய் போல பைக்கில் வழிகாட்ட ஒரு டீம் உள்ளது. இந்த டீமில் உள்ளவர்கள் செக்போஸ்ட்களில் யார் பணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து கடத்தல் வாகன டிரைவர்களுக்கு தகவல் சொல்கின்றனர். அதன்பிறகே கடத்தல் வாகனங்கள் அந்தப்பகுதியைக் கடந்து செல்லும். தற்போது செம்மரக் கடத்தல் குடிசைத் தொழில்போல நடந்துவருகிறது. இளைஞர்கள் பலர் ஈடுபட்டுவருகின்றனர். ஒரு லோடு செம்மரக் கட்டைகள் எந்தவித பிரச்னையும் இன்றி கடத்தப்பட்டால் இளைஞர்களுக்கு போனஸாக விலைஉயர்ந்த பைக்குகள், செல்போன்கள் போன்றவற்றை கடத்தல் கும்பல் தரப்பு கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது என்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள்.

வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகளை நூதனமுறையில் கடத்தல் கும்பல் கடத்திவருகிறது. அதாவது, வெளிநாடுகளுக்குச் செல்லும் கன்டெய்னரில் செம்மரக்கட்டைகள் மருந்து, உணவுப் பொருள் என்ற பெயரில் ஏற்றி சீல் வைக்கப்படுகிறது. இதற்கு துறைமுகத்தில் உள்ள சிலரும் உதவியாக உள்ளனர் என்பது அதிர்ச்சி தகவல்.

ஆகமொத்தத்தில் ஆந்திர, தமிழக அரசியலை மையப்படுத்திய செம்மரக்கடத்தல் நடந்துவருகிறது.