Published:Updated:

அருப்புக்கோட்டை அருகே இரட்டைக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கொலைக்கு பழிக்குப்பழியா?

இரட்டைக்கொலை

ஏற்கெனவே நடந்த ராக்கம்மாளின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே இரட்டைக்கொலை... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கொலைக்கு பழிக்குப்பழியா?

ஏற்கெனவே நடந்த ராக்கம்மாளின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

Published:Updated:
இரட்டைக்கொலை

அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட உடையனாம்பட்டி ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர் ராக்கம்மாள் (வயது 52). இவர், கடந்த மார்ச் 12-ம் தேதி குடும்ப பிரச்னைக் காரணமாக உறவினர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவருடைய கொலை வழக்கில் திருச்சுழி போலீஸார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த நிலையில் ராக்கம்மாள் கொலை வழக்கில் தொடர்புடைய உடையனாம்பட்டியை சேர்ந்த சபரிமலை (38) என்பவர் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். ஜாமீனில் வெளிவந்தாலும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதை அறிந்த சபரிமலை, அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லூரில் உள்ள தன்னுடைய உறவினரான ரத்தினவேல் பாண்டியன்(32) என்பவரின் பாதுகாப்பில் தங்கி வந்திருக்கிறார்.

இரட்டைக்கொலை
இரட்டைக்கொலை

இந்த நிலையில், அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே காட்டுப்பகுதியில் இருவர் கொலைச்செய்யப்பட்டு கிடப்பதாக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீஸூக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்குச்சென்ற போலீஸார், கொலை செய்யப்பட்டு கிடந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் கழுத்தறுக்கப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர்கள்‌ இருவரும், சபரிமலை மற்றும் ரத்தினவேல் பாண்டியன் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கிரேஸ் சோபியாபாய், தாலுகா காவல் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கொலையாளிகள்‌ யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

இதற்கிடையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், இரட்டை கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.‌ மோப்பம் பிடித்தபடியே ஓடிச்சென்ற‌ மோப்பநாய் சிறிதுதூரத்தில் நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பான புகாரின்‌பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் மீட்பு
உடல் மீட்பு

கொலை நடந்த இடத்திற்கு அருகே இருவழிகளிலும் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும், சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஏற்கெனவே நடந்த ராக்கம்மாளின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த இரட்டைக் கொலைச்சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அருப்புக்கோட்டையில் நடைபெற்ற இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.