Published:Updated:

`மூன்று பிள்ளைகள் இருந்தும் கவனிக்க ஆளில்லை; தற்கொலை செய்து கொண்ட முதிய தம்பதி!'

திருவள்ளூர் அருகே மூன்று பிள்ளைகள் இருந்தும், தங்களைக் கவனிக்க யாரும் முன்வராததால் மன விரக்தியிலிருந்த வயதான தம்பதி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவரது மனைவி பெயர் ராஜம்மாள் (60). இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். தம்பதி இருவரும் விவசாயக் கூலி வேலைகள் பார்த்து மூன்று பிள்ளைகளையும் நல்லபடியாகக் கரையேற்றி திருமணம் முடித்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பின்னர் வயதான தம்பதியை மூன்று பிள்ளைகளில் ஒருவர் கூட கவனித்துக் கொள்ள முன்வரவில்லை. அதனால், ஒரு மாதம் மகன் வீட்டிலும், அடுத்த மாதம் மகள்கள் வீட்டிலும் என அந்த வயதான பெற்றோர் மாறி, மாறி வசித்து வந்திருக்கிறார்கள். மகள்கள் இருவரும் அண்மையில் நிரந்தரமாக வெளியூருக்குச் சென்றுவிட, மகனும் வயதான அந்த தம்பதியைத் தொல்லையாக நினைத்துப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

தடபெரும்பாக்கம்
தடபெரும்பாக்கம்

மூன்று பிள்ளைகள் இருந்தும் வயதான காலத்தில் ஒருவர் கூட அரவணைத்துப் பார்த்துக்கொள்ளத் தயாராக இல்லை என்ற நிலையில், தடபெரும்பாக்கம் பகுதியிலுள்ள தங்கள் இல்லத்திலேயே மீதமுள்ள காலத்தைக் கழிப்பதென்று ஜெயராமனும், அவரது மனைவி ராஜம்மாலும் முடிவெடுத்தனர். அதன் படி, கடந்த சில மாதங்களாக தங்கள் பிள்ளைகள் யாருடனும் தொடர்பில் இல்லாமல் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவை மட்டுமே சாப்பிட்டு இருவரும் வறுமையில் வாடி வந்தனர்.

பொன்னேரி: `நள்ளிரவு நேரம்;  முட்புதரில் அழுகைச் சத்தம்!’ - 80 வயது தாயை வீசிச் சென்ற மகன்

இந்நிலையில், ஜெயராமனுக்கு அண்மையில் திடீரென உடல் நிலை மோசமடைந்து விட, மருத்துவம் பார்ப்பதற்குக் கூட செலவிற்குப் பணமில்லாமல் ராஜம்மாள் அல்லாடிக் கொண்டிருந்துள்ளார். பொருளாதார நெருக்கடி, பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலை என நிர்க்கதியான சூழலில் செய்வதறியாது திகைத்து நின்ற அந்த வயதான தம்பதி கடந்த சில தினங்களாகவே அக்கம் பக்கத்தில் யாரிடமும் பேசாமல், மன விரக்தியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயராமன் மற்றும் அவரது மனைவி ராஜம்மாள் இருவரும் நேற்று மதியம் மன உளைச்சலின் உச்சத்தில் தங்களின் பல ஆண்டு கால திருமண வாழ்க்கையைக் கூட்டாக முடித்துக் கொள்வதென்ற முடிவினை கையிலெடுத்திருக்கின்றனர்.

அதன் படி, கால் நடக்க முடியாத தன் கணவரை வீட்டில் படுக்க வைத்து விட்டு, 60 வயதான ராஜம்மாள் தடபெரும்பாக்கத்தின் புதர்களில் தேடி, அரளி விதையை எடுத்து வந்துள்ளார். அதை அம்மியில் அரைத்து தனது கணவருக்குக் கொடுத்து விட்டு தானும் அருந்தி விட்டு படுக்கைக்குச் சென்றிருக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட தம்பதி
தற்கொலை செய்து கொண்ட தம்பதி

கணவர் மனைவி இருவரும் வெகு நேரமாகியும் வெளியில் வராததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்திருக்கின்றனர். அப்போது, ஜெயராமன் உயிரிழந்து விட்ட நிலையில், ராஜம்மாள் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்துள்ளார். அதையடுத்து, அவரை மீட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராஜம்மாளும் உயிரிழந்து விட்டார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொன்னேரி போலீஸார், கணவன் - மனைவி இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு